தமிழகப் பாடத்திட்டத்தில் மாற்றம்... இன்று அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் ஆலோசனை! தமிழகத்தில் பள்ளி கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாடத்திட்ட மாற்றம் குறித்து முக்கியமான ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நடைபெற உள்ளது. மாநில கல்விக் கொள்கைக்கு ஏற்ப புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக மாநில திட்டக்குழு இயக்குநர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் கல்வித் துறை அதிகாரிகள், நிபுணர்கள், பாடப்புத்தக ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்துரையாடவுள்ளனர். புதிய கல்விக் கொள்கையுடன் இணக்கமான பாடத்திட்டம் உருவாகும் வகையில், அறிவியல், தொழில்நுட்பம், கலை, சுற்றுச்சூழல் போன்ற நவீன துறைகள் குறித்த பாடப்பிரிவுகள் சேர்க்கப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்கு உலகளாவிய தரத்தில் கல்வி வழங்கும் புதிய கட்டம் தொடங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.