நாளை குரூப் 2 தேர்வு.., இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் - TNPSC முக்கிய அறிவிப்பு!
செப்டம்பர் 28ம் தேதி(நாளை) நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான வழிகாட்டுதல்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தெகுதி-II மற்றும் IIA)-இல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு நாளை (28.09.2025) அன்று முற்பகல் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், இத்தேர்வினை 5,53,634 (பொதுத் தமிழை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 4,47,421 மற்றும் பொது ஆங்கிலத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 106,213) தேர்வர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 1,905 தேர்வுக் கூடங்களில் எழுதவுள்ளனர்.
இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு தொடர்பான மந்தணப் பொருட்கள் உரிய நடவடிக்கைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 1.905 தேர்வுக் கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் (20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் Videograph செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வுக் கூடத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து தேர்வுக் கூடத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்வு நடைபெறும் நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத் துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் உடல் நலன் கருதி உரிய மருத்துவ உதவிகள் வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உரியமுன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிசிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment