ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள்: படிப்படியாக நிரப்ப நடவடிக்கை-அமைச்சர் மதிவேந்தன்
விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் ரூ.3 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 10 கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் இன்று (அக்டோபர் 12) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. லட்சுமணன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், மாநில துப்புரவு பணியாளர் நல வாரியம் உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் அவர்கள் கூறியதாவது:
"ஆதிதிராவிடர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு என்பது தவறான தகவல் ஆகும். தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்குத் தனி கவனம் செலுத்தி கூடுதல் நிதி ஒதுக்கி, பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளைச் செய்து வருகிறது.
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள ஆசிரியர் பணிகள் படிப்படியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ஜாதி ரீதியாக உள்ள பெயர்களை நீக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை, உண்மையான சமூக நீதியாகும். இந்த நடவடிக்கையை அனைவரும் வரவேற்க வேண்டும்", என்று தெரிவித்தார்.

Comments
Post a Comment