TNPSC GROUP 4 FAQ: குரூப் 4 தேர்வர்களே... உங்கள் குழப்பங்களுக்கான விரிவான பதில்கள் இங்கே..!




குரூப்-4ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும், தங்களது இணையவழி விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள அனைத்துத் தகுதிகளுக்கான ஆதாரங்கள் அடங்கிய மூலச்சான்றிதழ்களை(Original Certificates) ஸ்கேன்(Scan) செய்து டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 


குரூப் 4 தேர்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் போது, நீங்கள் தெரிவித்துள்ள அனைத்துத் தகுதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தகுதியான விண்ணப்பத்தாரர்கள் மட்டுமே தரவரிசைப் படி கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர். 


எனவே, மூலச்சான்றிதழ்கள் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் குறித்து இங்கு பார்க்கலாம்:


கேள்வி 1. நான் குரூப் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது தமிழைப் பயிற்று மொழியாக கொண்டு கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் உரிமைக் கோரியுள்ளேன். விண்ணப்பிக்கும் தேதியன்று என்னிடம் சான்றிதழ் இல்லை. தற்போது, நான் என்ன செய்ய வேண்டும்? 


பதில்: தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, கல்வித்தகுதி மற்றும் தொழில்நுட்பத்தகுதி சான்றிதழ்களை தேர்வாணைய அறிவிக்கை தேதியிலோ அல்லது அதற்கு முன்னரோ பெற்றிருக்க வேண்டும். 2022 ஆண்டுக்கான, குரூப் 4 தேர்வு வெளியான அறிவிக்கை தேதி 30.03.2022 ஆகும். 


ஆதரவற்ற விதவை, முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளி போன்ற சான்றிதழ்கள் தேர்வாணைய அறிவிக்கை தேதிக்குப் பின்னர் பெற்றிருக்கலாம். இருப்பினும், ஆதரவற்ற விதவை அல்லது முன்னாள் இராணுவத்தினர் அல்லது மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர், தேர்வாணைய அறிவிக்கைத் தேதியன்று இவ்வகை உரிமைக்கோரும் (claim) தகுதி பெற்றிருக்க வேண்டும். 


எனவே, குரூப் 4 அறிவிக்கை வெளியிட்ட தேதியன்று உங்களிடம் PSTM சான்றிதழ் இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் உடனடியாக, டிஎன்பிஎஸ்சி இணைய தளத்திற்குச் சென்று, FORMS & DOWNLOADS Candidate related formats என்ற பக்கத்தில் PSTM படிவங்களை பதிவிறக்கம் செய்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் வாங்கிக் கொள்ளலாம். 


ஆதரவற்ற விதவை சான்றிதழ் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்;


மாற்றுத்திறனாளி சான்றிதழ் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்;


முன்னாள் ராணுவத்தினர் சான்றிதழ் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்;


தடையின்மைச் சான்றிதழ் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.


எனவே, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் போது, நீங்கள் உங்கள் இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள தகுதிக்கான சான்றிதழ்களை பதவியேற்றம் செய்தால் போதுமானது.


கேள்வி 2 : தேர்வு அறிவிக்கை தேதியன்று (அதாவது 30.03.2022), நான் மாற்றுத் திறனாளியோ அல்லது ஆதரவற்ற விதவையோ இல்லை. அதனால், விண்ணப்பத்தில் இந்த தகுதியைக் கோரவில்லை. ஆனால், தற்போது மாற்றுத் திறனாளி அல்லது ஆதரவற்ற விதவையாக உள்ளேன். அதற்கான சான்றிதழையும் தற்போது பெற்றுள்ளேன். நான், இதற்கான உரிமையை தற்போது கோரலாமா?


பதில்: இல்லை. தேர்வு அறிவிக்கை வெளியான 30.3.2022 தேதியன்று, இந்த தகுதி பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் உரிமைக் கோர முடியும். உரிமைக் கோரலுக்கான கட் ஆஃப் தேதி 30.3.2022 ஆகும்.


கேள்வி 3. குறிப்பிட்ட தகுதிக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்யாமல் போனால்?


பதில்: தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் கோரியுள்ள தகுதிக்கான சான்றிதழ்கள் ஏதேனும் பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டுப்போனால் அவர் பதிவு செய்துள்ள விவரம் கணக்கில் கொள்ளப்படமாட்டாது. எனவே, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அல்லது அவர் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களின் தகுதிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.


கேள்வி 4. 30.3.2022 அன்றைய தேதியில் நான் மாற்றுத் திறனாளி. ஆனால், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, இந்த உரிமையைக் கோர வில்லை. தற்போது, இதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்யலாமா?


பதில்: இல்லை. விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் பதிவு செய்துள்ள விவரங்களுக்கு மட்டுமே சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தால் போதுமானது. கூடுதலான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்திருந்தாலும் அதற்கான கோரிக்கை விண்ணப்பத்தில் இல்லை எனில் அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


கேள்வி 5. மூலச்சான்றிதழ்களை (original certification) டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திடம் ஒப்படைக்க வேண்டுமா?


பதில்: இல்லை. ஏற்கனவே அரசுப்பணியில் இருப்பின், துறை தலைவரால் வழங்கப்படும் "தடையின்மைச் சான்று மட்டுமே விண்ணப்பதாரரிடமிருந்து அசலாக தேர்வாணையத்தால் பெறப்படும்.ஏனைய சான்றிதழ்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு விண்ணப்பதாரரிடமே ஒப்படைக்கப்படும்.

Comments

Popular posts from this blog