20 February 2025

 காலி பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தி நியமன தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்



பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்ட ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற வாசகத்துடன் கூடிய சிவப்பு நிறத்திலான `டி ஷர்ட்' அணிந்திருந்தனர்.


இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கையை கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 12 ஆண்டுகளுக்கு பின்பு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றும் வேலைக்கு உத்தரவாதம் இல்லை. எங்களின் கனவுகளை நிறைவேற்ற காலிப் பணியிடங்களை அதிகரித்தால்தான் முடியும்.


இது தொடர்பாக முதல்வர், துணை முதல்வர், துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து முறையிட்டுவிட்டோம். தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக எங்களை நியமிக்கலாம். நாங்கள் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை கொடுப்போம். வரவுள்ள தமிழக பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இடம்பெறச் செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


வீடியோ இணைப்பு



 அமைச்சரை மாற்றுங்கள்.. அன்பில் மகேஷ் அமைச்சராக தொடர தகுதி இல்லை..!! - அண்ணாமலை காட்டம்




பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது.


இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதி இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். 


பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது காட்டுகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 


பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை.


உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து, அன்பில் மகேஷ் விலக வேண்டும். முதலமைச்சர் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என பதிவிட்டிருந்தார்.

 மத்திய அரசு நிதி கொடுக்கவில்லைனா என்ன.. பட்ஜெட்டில் வெளியாகப் போகும் அறிவிப்பு.. அமைச்சர் அன்பில் மகேஷ்!





தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்கும் வரை கல்விக்கான நிலுவை தொகை அளிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து கல்விக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்றும், இந்தி திணிப்பு கூடாது என்றும் தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


பாஜகவை தவிர்த்து அத்தனை கட்சிகளும் இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிதி விடுவிக்கப்படாததால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் 40 ஆயிரம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட வேண்டிய ரூ.2,151 கோடியை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், மத்திய அரசு நிதி ஒதுக்காத நிலையில், அதற்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். தொடர்ந்து தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு அவர், தலைமையாசிரியர்கள் 6 ஆயிரம் பேர் வரை பள்ளிக் கல்வித்துறை தரப்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பின் தலைமையாசிரியர்கள் அனைவரும் தங்களின் பள்ளிகளுக்கு சக ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். 2வது பெற்றோரான ஆசிரியர்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை எப்படி அளிக்க வேண்டும் என்ற விதத்தில் பயிற்சி அளிக்க திட்டமிட்டு வருகிறோம்.


அதேபோல் ஜூன் மாதத்தில் அடுத்த கல்வியாண்டு தொடங்கும் போது, விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள் எந்த பிரச்சனை என்றாலும் வெளிப்படையாக துணிந்து சொல்வேன் என்ற வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது என்று தெரிவித்தார்.


தொடர்ந்து பாஜகவின் கையெழுத்து இயக்கம் தொடர்பான கேள்விக்கு, பாஜக 90 நாட்கள் போவது அவர்களுக்கான பயணமாக பார்க்கவில்லை. அதனை எங்களுக்கான பயணமாகவே பார்க்கிறேன். 90 நாட்கள் களத்திற்கு செல்லும் போது, பாஜகவினரே வருத்தப்படும் பயணமாக இருக்கும். அதேபோல் இந்த பள்ளியை மூட வேண்டும், அந்தப் பள்ளியை மூட வேண்டும் என்று சொல்லாதீர்கள்.


ஏனென்றால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 25 ஆயிரம் பள்ளிகளை மூடிவிட்டு, அங்குள்ள மாணவர்களின் கல்வியில் மண்ணை அள்ளி போட்டுள்ளார்கள். உ.பி., பீகார், மத்தியப் பிரதேசம் என்று அனைத்து மாநிலங்களிலும் பள்ளியை மூட வேண்டும் என்று சொல்கிறார்கள். இது ஜனநாயக நாடு. அனைவரையும் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.


ஆனால் அரசுப் பள்ளியில் நிறைய திட்டங்கள் கொண்டு வருகிறோம், நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்வதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். குழந்தைகள் பள்ளிக் கல்வியில் இருந்து வெளியில் சென்றுவிடாமல், படிக்கிற வயதில் படிப்பிலேயே கவனம் செலுத்த வேண்டும். கல்வி சார்ந்த நிறுவனங்களில் சேர வேண்டும் என்று நினைக்க வேண்டும்.


எது எப்படியாக இருந்தாலும், மார்ச் 1ஆம் தேதி புதிய அட்மிஷன்களுக்கான பணியை தொடங்கப் போகிறோம். எங்களின் கடமையை நாங்கள் செய்து கொண்டே இருப்போம். மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றை உங்கள் மாநிலத்தோடு வைத்து கொள்ளுங்கள். எங்கள் தமிழ்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், எங்களுக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...