27 July 2022

 தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் என்பது உழைப்பு சுரண்டல் - கல்வியாளர்கள் கருத்து!





தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் என்பது உழைப்பு சுரண்டல் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, கற்பிக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 2,559 இடங்கள் காலியாக இருந்தும், 152 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர்.


அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 4,910 இடங்கள் காலியாக இருந்தும் 2,069 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் காலியாக நிரப்ப இருந்த 11,825 ஆசிரியர் பணியிடங்களுக்கு 1,50,648 பேர் விண்ணப்பம் செய்திருந்தாலும், பட்டதாரி ஆசிரியர்கள் 2,069 பேரும், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 152 பேர் என 2,221 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். எனவே 9,604 பணியிடங்கள் காலியாக உள்ளது.



தொகுப்பூதிய விவரம்: தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணிக்கு ரூ.7,500 தொகுப்பூதியத்திலும், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.10,000 தொகுப்பூதியத்திலும், 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 12,000 ரூபாய் தொகுப்பூதியத்திலும் நிரப்பப்பட உள்ளது.


இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறையில் காலியாக இருந்த பணியிடங்களில் 2,069 பட்டதாரி ஆசிரியர்களும், முதுகலை ஆசிரியர்கள் 152 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் தொடக்கக்கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.


திமுகவின் கொள்கை எது? இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரி ரெய்மாண்ட் கூறுகையில், "தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில் சேர்வதற்கு 2,200 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தப் பணிக்கு மிகக் குறைந்த அளவிலேயே விண்ணப்பித்துள்ளனர்.



ஆசிரியர் சங்கங்கள் தற்காலிக பணியில் நியமனம் செய்யக் கூடாது என தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். மிகக் குறைவான ஊதியத்தில் நியமனம் செய்வது என்பது உழைப்பு சுரண்டாலாக இருக்கும் என ஆசிரியர்கள் நினைக்கின்றனர். எனவே ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை முறையான ஊதியத்தில் நியமிக்க வேண்டும்.


தேர்வு நெருங்கும் நேரத்தில் மாணவர்களுக்கு இது சுமையாக இருந்திடக் கூடாது. திமுகவின் கொள்கையே தொகுப்பூதியத்தை ஓழிக்க வேண்டும் என்பதால், தமிழ்நாடு முதலமைச்சர் கவனம் செலுத்திட வேண்டும்" என தெரிவித்தார்.


நல்ல சம்பளம் வேண்டும்: மேலும் கல்வியாளர் சீனிவாச சம்பந்தம், "அரசுப்பள்ளிகளில் 12,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. கரோனாவால் தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் வந்து சேர்கின்றனர். இதற்குக் காரணம் அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி அளிக்கப்படும் என்ற நம்பிக்கையும், கல்வியின் தரத்தை அரசு உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும்தான்.


12,000 ஆசிரியர் காலிப்பணியிடம் இருக்கும் நிலையில், 2,200 பேர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளனர். 10,000 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. பள்ளிகள் திறந்து மாணவர்கள் வந்து விட்டனர். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் இல்லாவிட்டால் கல்வி பாதிக்கும். பள்ளிக்கல்வித்துறையில் வேலை வாய்ப்புகள் இருந்தும், அவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம், 10 மாதம் மட்டுமே பணி என்பதும், மாதம் 7,500 ரூபாய் தொகுப்பூதியம் என்பதும் காரணமாக இருந்து வருகிறது.


இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்றால், நல்ல சம்பளத்தை கொடுத்து ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். ஆசிரியர்களை நியமனம் செய்தால்தான், மாணவர்கள் தேர்வினை எழுதி சாதிக்க முடியும்" என கூறினார்

 கலை, அறிவியல் கல்லூரியில் சேர 4 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு





தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர, முதன் முறையாக நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர், விண்ணப்ப பதிவு செய்துள்ளனர்.


தமிழகத்தில், பிளஸ் 2 முடித்தவர்கள், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இன்றுடன் விண்ணப்பத்தை பதிவு செய்து, கட்டணத்தை செலுத்தி விட வேண்டும். மீண்டும் அவகாசம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.



அரசு நடத்தும், 163 கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று நிறைவு பெறுகிறது. நேற்று வரை விண்ணப்ப பதிவு செய்தோர் எண்ணிக்கை நான்கு லட்சமாக உயர்ந்துள்ளது.



அவர்களில், 3.30 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பங்களை முழுமையாக சமர்ப்பித்துள்ளனர்; அவர்களில் 2.93 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.இன்று விண்ணப்ப பதிவு முடிந்ததும், ஒவ்வொரு கல்லுாரியிலும், மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

இதையடுத்து, அந்தந்த கலை, அறிவியல் கல்லுாரிகளில், சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர் பட்டியல், கல்லுாரி தகவல் பலகையில் வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 Ph.D. Scholarship: பிஎச்.டி படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: புதிய விதிமுறைகள் வெளியீடு




பிஎச்.டி படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்குவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.



தமிழகத்தில் பிஎச்.டி எனப்படும் முனைவர் பட்டப் படிப்பு படிக்கும் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை, அண்மையில் ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் படிக்க ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முழுநேரமாக பிஎச்.டி. படித்து வரும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் ஆராய்ச்சிப் படிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில் 2013-2014ஆம் கல்வியாண்டு முதல், முழுநேர முனைவர் பட்டப் படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாகத் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதையடுத்து, முனைவர் படிப்பைப் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரத் தொடங்கியது.


அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டது. திமுக அரசு தாக்கல் செய்த புதிய பட்ஜெட்டில், முனைவர் பட்டப் படிப்புகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டம் மறு சீரமைக்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் கல்வி உதவித் தொகை ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்படும். இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 16 கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை வழங்க 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


அதன்படி ஒவ்வொரு வருடமும் 1,600 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கவும், உதவித் தொகை பெறும் மாணவர்களின் குடும்ப வருமானத்தை 8 லட்சம் ரூபாயாக உயர்த்தியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இதில் பயன்பெறும் முனைவர் படிப்பு படிக்கும் ஆண்களுக்கு அதிகபட்ச வயது 50 ஆகவும் பெண்களுக்கு 55 ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளது.


ஏற்கெனவே பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பிற கல்லூரி நிறுவனங்களில் பணியாற்றி வருவோருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படாது. அவர்கள் விடுப்பில் இருந்தாலும் பொருந்தாது.


இதில், ஆதிதிராவிடர்கள், கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் வேறு எந்த வகையான உதவித் தொகையையும் பெறாமல் இருந்தால் மட்டுமே, அவருக்கு தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும்.


இவ்வாறு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சான்றிதழ் சரிபார்ப்பு 1ம் தேதிக்கு மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி.,




 : டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும் 28ம் தேதி நடத்தப்பட இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் 1ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.



டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மீன் வளத்துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணி துறையில் இளநிலை வரைவாளர் ஆகிய பதவிகளுக்கான, இரண்டாம் கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங், வரும் 28ம் தேதி நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி துவக்க விழா காரணமாக, 28ம் தேதி, அரசால் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அன்றைய நாளில் திட்டமிடப்பட்டுள்ள சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 1ம் தேதி காலை 10:00 மணிக்கு நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 ஆசிரியர் தகுதி தேர்வு.. இன்றே(ஜூலை 27) கடைசி நாள்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!!!



ஆசிரியர் தகுதி தேர்வில் ஒன்று, இரண்டாம் தாள்களுக்கு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. அதன்படி ஏப்ரல் 26 வரை பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.இதில் ஆசிரியர் தகுதி தேர்வு ஒன்றாம் தாளுக்கு இரண்டு லட்சத்து 30,878 பேர், இரண்டாம் தாளுக்கு 4,01,886 பேர் என மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.



இந்நிலையில் விண்ணப்பத்தில் உள்ள விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பதாரர்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்து விண்ணப்ப விபரங்களை ஆன்லைனில் திருத்த வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப விபரங்களை இன்று (ஜூலை 27) வரை திருத்தம் செய்யலாம். விண்ணப்பதாரரின் அலைபேசி எண், இ - மெயில் முகவரி கல்வி தகுதியில் மாற்றம் செய்ய இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் ஜூலை 27ஆம் தேதி வரை திருத்தம் செய்யலாம்.


 அதாவது இன்றே கடைசி நாள். மாற்றம் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு மேலும் மாற்றம் செய்யக்கூடாது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுகளான தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்ய இயலாது எனவும் தெரிவித்துள்ளது.

 நீட் தேர்வு எழுதி உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அரசு எம்பிபிஎஸ் இடங்களுக்கு போட்டி அதிகமாக இருக்கும் : மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல்




நீட் தேர்வு எழுதி உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அரசு எம்பிபிஎஸ் இடங்களுக்கு இந்த ஆண்டு போட்டி அதிகமாக இருக்கும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்



தமிழகத்தில் கடந்த ஆண்டு 26 அரசு மருத்துவ கல்லூரிகள் மூலம் மாநில அரசுக்கு மொத்தம் 3,032 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்தது. மேலும் 11 அரசு மருத்துவ கல்லூரிகள் இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்படுகிறது. இந்த வருடம் கூடுதலாக 2 ஆயிரம் இடங்கள் அதிகரித்துள்ளது.


இந்த கல்லூரிகள் மூலம் 1,450 இடங்களும், கோவை அரசு மருத்துவ கல்லூரியில் கூடுதலாக 50 இடங்களுக்கும் மத்திய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் அரசு எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை மட்டும் இந்த ஆண்டு 5,050 ஆக உயர்ந்து உள்ளது. இது தவிர 32 தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் 5,370 எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 10,425 இடங்களில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த வருடம் மருத்துவ படிப்புகளில் சேர தயாராக இருக்கும் மாணவ,மாணவிகளுக்கு இது ஒரு 'ஜாக்பாட்' ஆக கருதப்படுகிறது. ஒரே வருடத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மூலம் இந்த வாய்ப்பு கிடைக்கிறது.


மொத்தம் உள்ள அரசு மருத்துவ இடங்கள் 5050ல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் போக 92.5 சதவீத இடங்கள் மற்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. நீட் தேர்வு கடந்த வாரம் நடந்து முடிந்துள்ள நிலையில் அதன் முடிவு ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வர வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பதிவு தொடங்கும் என்று மருத்துவ கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டை விட இந்த வருடம் மாணவர்கள் அதிகளவு தேர்வு எழுதி உள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 227 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்பட்டன.


இந்த வருடம் இந்த எண்ணிக்கை 350 வரை உயர வாய்ப்பு உள்ளது. அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதி உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. அதனால் இந்த ஆண்டு 2000 அரசு மருத்துவ இடங்கள் அதிகரித்தாலும் அதற்கு கடுமையான போட்டி நிலவும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நீட் தேர்வில் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீட் தேர்வு முடிவு எப்போது வரும். மதிப்பெண் எவ்வளவு கிடைக்கும் என்ற மருத்துவ கனவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உள்ளனர்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...