26 February 2025

 இனி பி.இ., பி.எட்., முடித்தாலே பட்டதாரி ஆசிரியர் ஆகலாம்! புதிய அரசாணை வெளியீடு



பி..இ. பட்டத்துடன் பி.எட்., முடித்தவர்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய தகுதி உள்ளவர்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இது குறித்து உயர்கல்வித்துறை செயலர் கே.கோபால் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொல்கத்தாவில் உள்ள மேற்குவங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி. டெக் எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பு வேலை வாய்ப்பு வகையில் மற்றும் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புக்கு சமமானது என தெரிவித்துள்ளார்.



இதேபோல், பி.இ., படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இயற்பியல் அறிவியலில் பி.எட்., முடித்திருந்தால் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம் என்றும் அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தகுதியானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

 தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்: பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிப்பு



தமிழக முதல்வரால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் மேற்கொண்டனர்


இதன் காரணமாக அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, சரண் விடுப்பு சலுகை, ஊதிய முரண்பாடுகளை களைவது, காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.25-ம் தேதி தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ- ஜியோ அறிவித்திருந்தது.


இதை தொடர்ந்து, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கயல்விழி செல்வராஜ், அன்பில் மகேஸ் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். இதன்படி இக்குழு நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.


பேச்சுவார்த்தையின்போது, கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்துச் சொல்கிறோம். சற்று பொறுமை காக்குமாறு அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், அதற்கு நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், எங்கள் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காததால், பிப். 25-ம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டமும், மாவட்ட தலைநகரங்களில் மறியலுக்கு பதிலாக ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்றார்.


இதற்கிடையே, அரசுடனான பேச்சுவார்த்தை முடியும்வரை அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால், அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபடுவதில் ஜாக்டோ- ஜியோ உறுதியாக இருந்தது.


இந்தச் சூழலில் நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்துக்கு திடீரென வந்தார். அமைச்சர்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திவிட்டு புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு அமைச்சர்கள் குழுவினர் மீண்டும் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.


பின்னர் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் கூறும்போது, எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என்றனர். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்களில் கிட்டதட்ட 40 சதவீதம் பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். 


மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சென்னை தலைமைச் செயலகத்திலும், சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்திலும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தனர். எழிலகத்தில் ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 


திமுக தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி கோஷமிட்டனர். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன. பொதுமக்களும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.


இதேபோல் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆசிரியர் சாரா பணியாளர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


 மாநிலம் முழுவதும் பல இடங்களில் தொடக்கப் பள்ளிகள் காலையில் திறக்கப்படவில்லை. பிற்பகல் வேறு பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்டு திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அதேநேரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரிகள் ஆசிரியர்களும், முதுகலை பட்டதாரிகள் ஆசிரியர்களும் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான்... ஜாக்டோ ஜியோ கொந்தளிப்பு!





தமிழகத்தில் நேற்று பிப்ரவரி 25ம் தேதி செவ்வாய்க்கிழமை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.


காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், ஊதிய முரண்களை களைய வேண்டும், மதிப்பூதியத்தில் பணி செய்வோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டோர் சென்னை எழிலகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 


இது குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன், "இன்று தமிழக அரசை வன்மையாக கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டா ஜியோ ஆர்பாட்டம் நடத்தி வருகிறோம். எங்களது உழைப்பு , தியாகத்தால் தமிழக மக்களை மேம்பட வைக்கிறோம். 


திங்கள் அன்று அரசு தரப்பில் அமைச்சர்கள் எங்களுடன் 2:30 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். நாங்கள் எங்கள் கோரிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தோம் அதன்பின் அமைச்சர்கள் எங்கள் கோரிக்கைகள் குறித்து திங்கள் மாலை முதல்வருடன் பேசி முடிவை அறிவிப்பதாக கூறினர். 8 மணிக்கு எங்களை தலைமைச் செயலகம் வருமாறு கூறி சென்ற அமைச்சர்கள் முதலமைச்சர் சந்தித்த பிறகு எங்களை அழைக்கவே இல்லை, இது ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் முதுகில் குத்தும் மோசமான , வஞ்சிக்கும் செயல் முதுகில் குத்தும் நம்பிக்கை துரோகம்.


 

இதுவரை நாங்கள் பார்த்த முதலமைச்சர்களிலேயே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். எங்களை ஏமாற்றினால் 2026 ல் திமுக ஏமாந்து விடும். 


திங்கள் அன்று  நாங்கள் இருக்கும் பொழுது தலைமை செயலகம் வந்த முதலமைச்சர் எங்களை சந்தித்து பேசவில்லை. இன்று தமிழ்நாடே கொந்தளிப்பில் உள்ளது. நாங்கள் நான்காண்டு காலம் அவகாசம் கொடுத்திருக்கிறோம். தற்போது அரசு 4 வார அவகாசம் கேட்பது எங்கள் போராட்ட உணர்வை மழுங்கடித்து , எங்களை பிளவுபடுத்தி மீன் பிடிப்பதற்கான செயல். ஆதாயம் பெறுவதற்காக இந்த தவறான போக்கை அரசு கடைபிடித்து வருகிறது. எங்களை ஏமாற்ற தொடங்கி விட்டீர்கள் என்பதை அரசு ஊழியர்கள் புரிந்துகொள்ள தொடங்கிவிட்டார்கள்.


 கோரிக்கையை வெல்ல என்ன வழிமுறைகள் இருக்கிறதோ அனைத்தையும் பயன்படுத்துவோம். 2026 ல் எங்கள் பணியை எப்படி பயன்படுத்த முடியுமோ அப்படி பயன்படுத்துவோம். 


அந்த நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என நாங்கள் கவலைப் படுகிறோம். கால அவகாசம் கேட்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அடுத்தக்கட்ட போராட்டமாக முழு நேர போராட்டம் நடைபெறும்" எனக் கூறியுள்ளார்.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...