25 March 2025

 ஆண்டுக்கு இருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்


தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக அரசு பள்ளிகளை சீரழிக்கும் போக்கைக் கைவிட்டு அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; ஆண்டுக்கு இருமுறை தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், '2025 ஆம் ஆண்டு நடத்தப்படவிருக்கும் போட்டித்தேர்வுகள் மற்றும் தகுதித்தேர்வுகளின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. 


டிசம்பர் மாத இறுதியிலேயே வெளியிடப்பட்டிருக்க வேண்டிய ஆண்டுத் திட்டத்தை 3 மாதங்கள் தாமதமாக இப்போது தான் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது என்றாலும் கூட, அது ஆசிரியர் பணிக்காக காத்திருப்போரை ஏமாற்றியிருக்கிறது என்பது தான் உண்மையாகும்.


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்கள் அதற்கு முந்தைய ஆண்டின் இறுதியில் வெளியிடப்படுவது வழக்கம். நடப்பாண்டில் என்னென்ன பணிக்கு எவ்வளவு பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்பது குறித்த விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடாததை குறை கூறி, கடந்த 5 ஆம் தேதி நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து தான் ஆண்டுத் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டிருக்கிறது.


2025 ஆம் ஆண்டில் மொத்தம் 9 வகையான தேர்வுகளை நடத்தப்போவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அவற்றில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட 3 தேர்வுகள் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தவை.


 அவற்றில் இரு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்ப நடைமுறைகளும் தொடங்கி விட்டன. கல்லூரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு அறிவிக்கை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தாலும், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தாலும் ஏற்கனவே அறிவிக்கை செய்யப்பட்டவை.


1915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 1205 பட்டதாரி ஆசிரியர்கள், 51 வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகிய 3 வகை பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மட்டும் தான் புதிதாக அறிவிக்கப்பட்டவையாகும். 


2023ம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் அறிவிக்கை செய்யப்பட்ட 3192 பட்டதாரி ஆசிரியர்களையும், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கை செய்யப்பட்ட 2768 இடைநிலை ஆசிரியர்களையும் தேர்வு செய்யும் பணிகள் ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவடையவில்லை. இத்தகைய சூழலில் புதிய ஆள்தேர்வு அறிவிப்புகள் திட்டமிட்டபடி செயல்வடிவம் பெறுமா? என்பதே பெரும் வினா தான்.


ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து அனைவரும் எதிர்பார்த்தது ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கையைத் தான். தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டு அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2024 மார்ச் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


ஆனால், அதன்படி நடக்கவில்லை. அதன்பின், கடந்த ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. 2025 ஆம் ஆண்டிலாவது தகுதித் தேர்வுகள் அறிவிக்கப்படும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளது.


2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி பெற்று வெளிவந்துள்ளனர். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால் அவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற முடியவில்லை.


அடுத்த சில மாதங்களில் நடப்பாண்டிற்கான தேர்வுகள் முடிவடைந்து லட்சக்கணக்கான மாணவர்கள் ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியைப் பெற்றிருப்பார்கள். அவர்களும் தகுதித்தேர்வில் பங்கேற்கும் வகையில் ஜூன் மாதத்தில் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், அதை தேர்வு வாரியம் செய்யவில்லை.


மத்திய அரசின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் படிப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணியில் உடனடியாக சேர வேண்டும் என்பதற்காகவே இந்த விதி கொண்டு வரப்பட்டது.


ஆனால், தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூட ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுவதில்லை. ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் நலனில் தமிழக அரசு காட்டும் அக்கறை அவ்வளவு தான். இது அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும்.


தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் ஒரே ஒரு இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கூட நியமிக்கப்படவில்லை. கடந்த ஆண்டில் நடத்தப்பட்டத் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் இன்னும் பணி வழங்கப்படவில்லை.


 இத்தகைய சூழலில் இனியும் ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என்பதால் எதற்காக தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என நினைத்து விட்டதால் தான் நான்காவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளை திமுக அரசு நடத்தவில்லையோ? என எண்ணத் தோன்றுகிறது.


கடந்த காலங்களில் இல்லாத வகையில் நடப்பு ஆட்சிக்காலத்தில் தான் கல்வித்துறை மிகவும் மோசமான சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆசிரியர்களையே நியமிக்காமல் அரசுப் பள்ளிகளில் தரமானக் கல்வியை எவ்வாறு வழங்க முடியும்? எனத் தெரியவில்லை. தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக அரசு பள்ளிகளை சீரழிக்கும் போக்கைக் கைவிட்டு அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; ஆண்டுக்கு இருமுறை தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

 'டெட்' தேர்வுக்கான அறிவிப்பு இல்லை - டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியீடு





டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணை திங்கட்கிழமை (மார்ச் 24) வெளியிடப்பட்டது. அதன்படி 1,915 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதமும் 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு செப்டம்பரிலும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால், டெட் தேர்வுக்கான அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை.


2025-ம் ஆண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை (வருடாந்திர தேர்வு அட்டவணை) ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது. அதில், மொத்தம் 9 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 4 அறிவிப்புகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பழைய அறிவிப்புகள். 5 மட்டுமே புதிய அறிவிப்புகள் ஆகும்.


அதன்படி 1,915 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு நவம்பரில் தேர்வு நடத்தப்படும். அதேபோல், 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய செப்டம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு டிசம்பரில் தேர்வு நடத்தப்படும். 51 வட்டார கல்வி அலுவலர்களை (பிஇஓ) நியமிப்பதற்கான தேர்வுக்கு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.


டெட் அறிவிப்பு இல்லை: பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி ஆசிரியர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டெட் தேர்வு குறித்து அறிவிப்பு ஏதும் டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணையில் இடம்பெறவில்லை. எனவே, இந்த ஆண்டு டெட் தேர்வு நடத்தப்படாது. தமிழகத்தில் கடைசியாக 2023-ம் ஆண்டு டெட் தேர்வு நடத்தப்பட்டது.


அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். என்சிடிஇ விதிமுறையைப் பின்பற்றி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான சி-டெட் தகுதித் தேர்வு ஆண்டுக்கு 2 தடவை திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 7,535 ஆசிரியர் பணியிடங்கள்.. தேர்வு அட்டவணையை வெளியிட்ட டிஆர்பி.. முழு விவரம்



தமிழகத்தில் நடப்பாண்டில் 7535 ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு மையம் (Teachers Recruitment Board) அறிவித்துள்ளது.


2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை ( TRB Annual Planner 2025) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் 9 தேர்வுகள் மூலம் 7,535 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர், சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர், கலை மற்றும் அறியில் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த அட்டவணையில் டெட் தேர்வு குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை.


தேர்வு அட்டவணையை வெளியிட்ட டிஆர்பி


ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, செட் தேர்வு 2025 மார்ச் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர், assistant director, assistant librarian ஆகிய பணிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடைபெறும் என்றும் இதில் 232 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு 2025 மே மாதத்தில் நடைபெறும் எனறும் இதில் 132 இடங்கள் நிரப்பப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பதவிக்கான 4,000 காலியிடங்களுக்கு 2025 ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்படடுள்ளது.


 முதலமைச்சர் ஆராய்ச்சி பெல்லோஷிப் (CMRF) திட்டத்தில் 180 மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 


மேலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் 2025 நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்ற்கு 1,915 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.


7,535 ஆசிரியர் பணியிடங்கள்


இளங்கலை பயிற்சி (BT) உதவியாளர்கள் பணி மற்றும் BRTE தேர்வு 2024 செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்றும் இதில் 1,205 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 51 BEO பணிக்ளுகக் நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மார்ச் 2026ஆம்ஆண்டு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


 கூடுதலாக, பல்கலைக்கழகங்களின் தேவை அடிப்படையில் கோரிக்கையின் பேரில், தமிழ்நாட்டின் பல்கலைக்கழக கல்லூரிகளின் இணைப் பேராசிரியர்கள்/இணைப் பேராசிரியர்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.


 அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த டெட் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியடவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 


2024ஆம் ஆண்டிற்கான டெட் தேர்வு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடைபெற்று இருந்திருக்கும் சூழலில், ஆனால், அதற்கான அறிவிப்பை வெளியாகவில்லை. இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான அட்டவணையிலும் டெட் தேர்வு குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...