கரோனாவால் தொடரும் நிதி நெருக்கடியை சமாளிக்க புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை
நிதி நெருக்கடியை சமாளிக்க பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் 283 அரசுப்பள்ளிகளும், 32 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 181 தனியார் பள்ளிகளும் உள்ளன. மொத்தமுள்ள 57 சதவீத அரசுப் பள்ளிகளில் 32 சதவீத மாணவர்களே படிக்கின்றனர். மேலும், அரசுப் பள்ளிகளில் கிட்டத் தட்ட 3 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். எனினும் அதிகளவில் தனியார் பள்ளிகளில் குழந்தைகள் படித்து வந்தனர்.
இச்சூழலில், கரோனா தாக்கத் தால் பள்ளி, கல்லூரி மூடப்பட்டு இரு ஆண்டுகள் ஆன்லைனில் வகுப்புகள் நடந்தாலும், கடந்த கல்வியாண்டு இறுதியில் பள்ளிகள் செயல்படத் தொடங்கின.
புதுச்சேரியில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 23-ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள் ளன.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. நகரப் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் அதிகளவில் சேருகின்றனர். ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை மாற்றுச் சான்றிதழ், தேர்ச்சி சான்றிதழ் தேவையில்லை என்பதால் எளிதில்மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இதுதொடர்பாக பெற்றோர் தரப்பில் கூறுகையில், 'கரோனா பொருளாதார நெருக்கடியிலிருந்து தற்போதுதான் மீண்டு வருகிறோம். கடனை செலுத்த வேண்டியுள்ளது. தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்துவதில் சிரமம் இருப்பதால் அரசுப் பள்ளிகளை நாடுகிறோம். தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டம் 5-ம் வகுப்பு வரை உள்ளது. ஆறாம் வகுப்பிலிருந்து விரைவில் அமல்படுத்த உள்ளதாக கூறுவதால் சேர்க்கின்றோம்' என் றனர்.
புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் அதிகளவில் விண்ணப்பங்கள் தரப்பட்டுள் ளதுடன் சேர்க்கை அதிகளவில் உள்ளதாகவும், கடந்தாண்டை விட அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எவ்வளவு குழந்தைகள் நடப்பாண் டில் இணைந்துள்ளனர் என்பதை சேர்க்கைக்கு பிறகே தெரிவிக்க இயலும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கல்வி சார்ந்த பணிகளில் இயங்கும் சமூக அமைப்பினர் கூறுகையில், 'கரோனா சூழலைத் தொடர்ந்து பலரும் பொருளாதார பாதிப்பினால் அரசுப் பள்ளிகளை நாடுகின்றனர்.
புதுச்சேரியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கல்விக்கான நிதியை அரசு அதிகப்படுத்த வேண்டும். பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், தேவையான பாட ஆசிரியர்கள், இசை ஓவியம் போன்ற கலை ஆசிரியர்கள் இல்லை. விடுப்பில் போகும் ஆசிரியர்களுக்கு மாற்று ஆசிரியர்கள் இல்லை. முக்கியமாக 10, 11, 12-ம்வகுப்புகளில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் ஆசிரியர்கள் பணியிடங்களை உறுதிப்படுத்த வேண்டும். கல்வித்துறையானது விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்' என்று குறிப் பிடுகின்றனர்.