பாலிடெக்னிக் ஆசிரியர் பணி தேர்வு நடக்குமா?: டி.ஆர்.பி.,
மவுனத்தால் பட்டதாரிகள் குழப்பம்
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பதவிக்கான
அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால்,
ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,அறிவித்த தேர்வு நடக்குமா
என, பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
'அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், ௧,௦௫௮ விரிவுரையாளர்
பணியிடங்களுக்கு, ஆக., ௧௩ல் எழுத்து தேர்வு நடக்கும்' என, டி.ஆர்.பி., அறிவித்திருந்தது.
தேர்வுக்கு, ஜூன், ௧௭ முதல் விண்ணப்பமும் பெறப்பட்டது. ஆனால்,
தேர்வு நடத்துவதற்கான அரசாணையில் குழப்பம் உள்ளதாக,
பட்டதாரிகள் சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், 'பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, அகில
இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிப்படி,
முதுநிலை பட்டதாரிகளையே நியமிக்க வேண்டும். 'டி.ஆர்.பி., அறிவித்த
தேர்வுக்கு, பி.இ., என்ற இளநிலை இன்ஜினியரிங் முடித்தவர்கள்
அனுமதிக்கப்பட்டு உள்ளனர்' என, கூறப்பட்டுள்ளது.
இதை ஏற்று, தமிழக அரசின்அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம்
ரத்து செய்தது. அதன்பின், டி.ஆர்.பி., எந்த தகவலையும் வெளியிடவில்லை.
அரசாணை ரத்தால், எழுத்து தேர்வு ரத்துசெய்யப்பட்டதா; புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டு, தேர்வு நடத்தப்படுமா; அரசு மேல்முறையீடு செய்துள்ளதா
என, தெரியாமல், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், 'மத்திய அரசு பணியாளர்
தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., - தமிழக அரசின், டி.என்.பி.எஸ்.சி.,
அமைப்பும், போட்டி தேர்வு நடத்துவதில், வெளிப்படையான முறைகளை கையாள்கின்றன. 'அதே போல, டி.ஆர்.பி.,யும், விண்ணப்பதாரர்களுக்கு
உரிய தகவல்களை, இணையதளத்திலாவது, தாமதமின்றி வெளியிட
வேண்டும். தேர்வர்களை குழப்பத்தில் தள்ளக்கூடாது' என்றனர்.