2 January 2015

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க : தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு வரும் போதும், வீட்டுக்கு செல்லும்போதும் அவர்கள் குழுவாக, பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் தொடக்கக்கல்வி இயக்குனர் ரெ. இளங்கோவன் அனுப்பி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:-


* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பள்ளிக்கு வருகை தரும்போதும் தனித்தனியாக செல்லாமல், மாணவிகள் சிலர் சேர்ந்து குழுவாக பாதுகாப்பாக செல்லவேண்டும். இது குறித்து பெற்றோர்களை கூட்டி, தக்க அறிவுரைகள் வழங்கும்படியும் தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.

* பள்ளிக்கூட மாணவர்கள் பஸ்களில் பயணம் செய்யும்போது உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஆட்டோ ரிக்ஷாக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான அளவில் மாணவர்கள் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். இது குறித்து இறைவணக்க கூட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும்.

* டெங்கு, சிக்குன் குன்யா போன்ற காய்ச்சல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக மாணவர்களுக்கு வகுப்பாசிரியர்கள் மூலம் தக்க அறிவுரை வழங்கப்பட வேண்டும்.

* பள்ளிக்கூட வளாகத்தில் மாணவர்களுக்கு எட்டக்கூடிய வகையில் மின்சாதன பொருட்கள் இருக்கக்கூடாது. மின்சார வயர்கள் செல்வதை அனுமதிக்கக்கூடாது.

* மாணவ - மாணவிகளுக்கு நல்லொழுக்கத்தையும், நல்ல நெறிமுறைகளையும் பின்பற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

* மாணவ-மாணவிகளுக்கு உடற்பயிற்சி, யோகா கற்றுத்தருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

* மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போதும், வீட்டுக்கு செல்லும்போதும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர் எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் வருகை பதிவேடு கண்காணிப்பு திட்டம் முறைப்படுத்தப்படுமா?

அரசு பள்ளிகளில், ஆசிரியர் வருகையை முறைப்படுத்த அறிவிக்கப்பட்ட, எஸ்.எம்.எஸ்., முறையில் ஆசிரியர் வருகை பதிவேடு கண்காணிப்பு திட்டம் முறைப்படுத்த, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டில், பள்ளி மேலாண்மை தகவல் மையத்தின் ஒரு பகுதியாக, எஸ்.எம்.எஸ்., முறையில் ஆசிரியர் வருகை பதிவு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக, இரண்டு மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, 2012 முதல் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இத்திட்டம், அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றது.

இத்திட்டத்தின்படி, தலைமையாசிரியர், ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் வருகை குறித்து, காலை 10:00 மணிக்குள் மாவட்ட கலெக்டர், கல்வி அதிகாரிகளுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படும். அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துக் கொள்ள இயலும். தலைமையாசிரியர்களுக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட பணிச் சுமையை கருத்தில் கொண்டு, இத்திட்டம் அறிவிப்போடு, விரிவுப்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு தாமதமாக வருதல், இடையில் அறிவிப்பு இன்றி வெளியிடங்களுக்கு செல்லுதல், அறிவிப்பு இல்லாமல், அட்ஜெஸ்மென்ட் என்ற பெயரில் விடுமுறை எடுத்தல் போன்றவை, பல்வேறு அரசு பள்ளிகளில் சாதாரணமாகியுள்ளது.

பள்ளி கண்ணாடி என்ற பெயரில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகை எழுதும் பழக்கமும் தற்போது பெரும்பாலான பள்ளிகளில் செயல்படுத்தப்படுவது இல்லை. மாணவர்களின் நலன் கருதி, இத்திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சில தனியார் பள்ளிகள் போன்று, வகுப்பு ஆசிரியர் மூலம் வாரத்துக்கு ஒரு முறையாவது, மாணவர்களின் வருகை குறித்து பெற்றோருக்கு போனில் தெரிவிக்க வேண்டும். பாதை மாறும் மாணவர்களை, இம்முறையில் எளிதாக அடையாளம் கண்டு, பயிற்சி அளிக்க இயலும்.

தொடக்கக் கல்வி அதிகாரி காந்திமதி கூறுகையில், "கோவை மாவட்டத்தில், உதவி தொடக்க கல்வி அலுவலர்களால், தினமும், ஆசிரியர்களின் வருகை பதிவேடுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. கல்வி அதிகாரிகள் குழு, திடீர் ஆய்வுகளும் மேற்கொண்டு வருகின்றனர். வருகை பதிவேடுகளில், முறைகேடுகள் நடப்பது ஆய்வுகளின்போது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மட்டுமின்றி, தலைமையாசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பாடநூல்- கல்வியியல் கழக செயலராக அறிவொளி நியமனம்

தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளர் பொறுப்புக.அறிவொளியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் இயக்குநராக அறிவொளி உள்ளார். பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளராக இருந்த அன்பழகன், கடந்த 31-ஆம் தேதியன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பு கூடுதலாக, அறிவொளியிடம் அளிக்கப்பட்டுள்ளது.


  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...