17 June 2022

 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு எப்போது? 




சமீபத்தில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு வைக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அடுத்த மாதம் நடைபெறும் உடனடித் தேர்வில் பங்கேற்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


எனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு அடுத்த மாதம் தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது

 ஆசிரியர் பட்டயப்பயிற்சி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு ஒரு கேள்விக்குறி - 7 ஆண்டுகளில் 414 பயிற்சி நிறுவனங்கள் மூடல்!




கடந்த 7 ஆண்டுகளில் 414 பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்த 1 லட்சத்து 84 ஆயிரத்து 470 பேர் வேலைக்கு காத்திருக்கின்றனர்.


இடைநிலை ஆசிரியர் பட்டயப்பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைக்காததாலும், தொடக்கக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் நியமனம் செய்யப்படாமல் இருப்பதாலும் மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு இணையாக போட்டி போட மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் ஆசிரியர் பட்டயப்பயிற்சி நிறுவனங்கள் இருக்கிறது.


இதனால் கடந்த 7 ஆண்டுகளில் 414 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் 20 மாவட்ட ஆட்சியர் பயிற்சி நிறுவனங்களில் மீண்டும் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


மாணவர்கள் சேர்க்கை இல்லாத காரணத்தால் சுயநிதி ஆசிரியர் பட்டயப்பயிற்சி நிறுவனங்கள் 2015ஆம் ஆண்டில் 402 எனவும், மாணவர்களுக்கான இடம் 25,200 எனவும் இருந்தது. ஆனால், 2022ஆம் ஆண்டில் 33 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 1950 மாணவர்கள் சேர்ப்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. 369 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.


திமுக ஆட்சியில் தொடரும் நிலை: மேலும் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புத்துறையில் இடைநிலை ஆசிரியர்கள் பணியை முடித்த 1 லட்சத்து 84 ஆயிரத்து 470 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 58 ஆயிரத்து 795 பேரும், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 68 ஆயிரத்து 350 பேருக்கும் வேலை கிடைக்குமா என காத்திருக்கின்றனர்.


கடந்த 2018ஆம் ஆண்டு மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்டு தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை 12ஆக குறைக்க அரசு உத்தரவிட்டது. 2018 ஜூன் 28ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 55இன் கீழ் அப்போதைய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சக்கரபாணி, பொன்முடி, தங்கம் தென்னரசு, கோவி.செழியனர் ஆகியோர் அவசரப் பொது முக்கியத்துவம் பெற்று அரசின் கவனத்தை ஈர்த்துப் பேசினர்.


மேலும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடக்கூடாது எனவும் வலியுறுத்தினர். அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இடைநிலை ஆசிரியர்களின் நியமனங்களும் வெகுவாக குறைந்துள்ளதன் அடிப்படையில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு விருப்பம் காட்டுவதில்லை எனவும், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளதாகவும் எடுத்துக் கூறினார்.


பயிற்சி நிறுவனங்கள் குறைப்பு: தற்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்துள்ளதால், மூடப்பட்டுள்ள 20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுமா எனவும், இடைநிலை ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் வகையில், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா எனவும் ஏக்கத்துடன் இடைநிலை ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.


கடந்த 2015ஆம் ஆண்டில் 30 அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 39 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 402 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் இருந்தன. ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டில் 12 அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 6 வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 13 அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 33 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.


தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை 12 ஆக குறைக்க கடந்த 2018ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. இதனால் கடந்த 2015ஆம் ஆண்டில் 402 என்ற எண்ணிக்கையில் இருந்த தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், நடப்பு கல்வியாண்டில் 33 என குறைந்துள்ளது.


அதேபோல் கடந்த 2015ஆம் ஆண்டில் 39ஆக இருந்த அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், இந்த ஆண்டில் 13ஆக குறைந்துள்ளன. இதனால் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை மட்டும் 414 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.


மாணவர்கள் சேர்க்கை குறைவு: தமிழ்நாட்டில் தற்பொழுது 12 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,100 இடங்களும், 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 300 இடங்களும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 440 இடங்களும், 13 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,100 இடங்களும், 33 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,950 இடங்கள் என மொத்தம் 4,890 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.


இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், "ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் குறைந்து வருவதால் தொடர்ந்து பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கான பணி வாய்ப்புகள் குறைந்திருக்கின்றன.


ஆசிரியர் தகுதித்தேர்வு நடந்த பின்னரும் போதிய ஆசிரியர்களுக்கான நியமனம் இல்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு இணையாக மாணவர்கள் சேர்க்கையில் போட்டி நிலவியது. தற்பொழுது 6ஆம் வகுப்பு முதல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.


அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை உள்ளிட்ட காரணங்களால் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. அரசு பகுப்பாய்வு செய்து ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் தரத்தை உயர்த்தவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.


காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்: இது குறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறுகையில், "தொடக்கக்கல்வி துறையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கையாளும் இடைநிலை ஆசிரியர்களை உருவாக்கும் ஆசிரியர் பயிற்சி மையங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் மூடப்பட்டு வருகின்றன. அதற்கு முக்கிய காரணங்கள் 2012ஆம் ஆண்டில் 11,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.


இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட்

அதன்பின்பு இரண்டு ஆண்டுகள் கழித்து 2014ஆம் ஆண்டு 1,834 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து எட்டு ஆண்டுகள் கடந்தும் இதுவரை இடைநிலை ஆசிரியர்கள் நியமனங்கள் எதுவும் செய்யப்படவில்லை. ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்த 2,25,000 ஆசிரியர்கள் உள்ளனர். அதில் 60,000 ஆசிரியர்கள் மேல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இதுபோன்ற சூழ்நிலையில் தான் ஆசிரியர் பட்டயப்படிப்பின் மீதான மோகம் குறைந்து அனைத்து ஆசிரியர் பயிற்சி மையங்களிலும் மாணவர் சேர்க்கை இல்லாமல் மூடப்பட்டு வருகிறது. மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6ஆவது ஊதிய குழுவில் இழைக்கப்பட்ட அநீதி இன்னும் தொடர் கதையாகி வருகிறது. அவர்களுக்கு துப்புரவுப் பணியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.


புதிதாக நியமனம் பெறவிருக்கும் ஆசிரியர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்படும் என்பதால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மீதான மோகம் வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது தொடக்கக் கல்வித் துறை இயக்ககம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 9,000 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.


விரைவில் அவை நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து அதிகரிக்கும் மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 ஆசிரியர்களுக்கு மலைப் பகுதிகளில் ஓராண்டு கட்டாய பணி: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு




தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் மலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஓராண்டு மலைப் பகுதியில் பணியாற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் ஈரோடு, தேனி, சேலம், வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் மலைகள் அதிகம் உள்ளன. இந்த மாவட்டங்களில் 20 கல்வி ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மலைக்கு கீழ் பகுதியில் உள்ள சமவெளியில் பணிபுரிய விரும்புகின்றனர். ஆனால், மலையின் மேல் பகுதிக்குச் சென்று பணிபுரிய விரும்புவதில்லை.


இந்நிலையில், மலையின் மேல் பகுதியில் உள்ள மாணவர்களும் பயன்பெறும் வகையில் மலைப் பகுதி சுழற்சிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளில் திருத்தம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார். மலைப்பாங்கான இடங்களில் தொடக்கக் கல்வி இயக்கத்தின்கீழ் மலைப் பகுதிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என அனைவரும் மலைப் பகுதியில் பணிபுரிய தயங்குவதால், குறைந்தது ஓராண்டு கட்டாயமாகப் பணியாற்ற வேண்டும்.


சுழற்சி முறையில் அந்த ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்கள் மலைப் பகுதிகளில் பணியாற்றுவது முழுமை பெறும் வரை மலைப் பகுதிகளில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அந்த ஒன்றியத்தில் பணியில் உள்ள அனைவரும் மலையில் பணியாற்ற வேண்டும். பதவி உயர்வு பணியிடங்களில் காலியிடங்களை முதலில் மலைப் பகுதிக்கு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு - ஜி.கே. வாசன் எதிர்ப்பு!!



ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க 'நியமனத்தேர்வு' என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஏறக்குறைய 60 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இதுவரை பணி கிடைக்காமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனர் . ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஒன்பது ஆண்டுகள் பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு நியமனத் தேர்வு என்ற அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் . அதோடு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இவர்கள் , பணி வழங்ககோரி கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது .


இந்த வழக்குகள் இவர்களை பல்வேறு நிலைகளில் பாதிப்பதாக அமைந்துள்ளது . ஆகவே தமிழக அரசு அந்த வழக்குகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தனது தேர்தல் அறிக்கையில் 2013 - ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறது . அந்த அறிவிப்பை தாமதம் இல்லாமல் திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் . ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கடந்த காலங்களில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது . தற்பொழுது அவர்களின் பதிவு மூப்பு மற்றும் தேர்ச்சி மூப்பின் அடிப்படையில் அவர்களுக்கு படிப்படியாக பணிவழங்க வேண்டும் . தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது . ஆகவே வருங்கால மாணவர்களின் கல்வியை மனதில் கொண்டும் , தகுதியுள்ள , தகுதிப்பெற்ற ஆசிரியர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டும் , தமிழக அரசு உடனடியாக பணி வழங்கிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"என்று குறிப்பிட்டுள்ளார்.

 கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு




கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு வரும் 27ஆம் தேதி தொடங்கி, ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது



தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2022-23ஆம் கல்வி ஆண்டில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் நேற்று (ஜூன் 16) வெளியிட்டார்.


வரும் 20ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு வரும் 27ஆம் தேதி தொடங்கி, ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வெளிப்படைத்தன்மை வேண்டும்: மேலும், உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், "12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்பட வேண்டும். மாணவர் சேர்க்கை பணிகளும், கட்டண விவகாரங்களும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.


மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு பேராசிரியர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். கல்லூரியில் உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் அந்த கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். மேலும், ஆன்லைன் விண்ணப்பத்தின்போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் தெளிவாக வெளியிடப்பட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளன.


இலங்கை தமிழருக்கு...: ஆன்லைன் மற்றும் பதிவு கட்டணமாக அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் 50 ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சேர்க்கை முழுவதும் மெரிட் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்து சேர்க்கை வழங்கிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆண்கள் கல்லூரியாக தொடங்கப்பட்டு, பின்னர் இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டவற்றில், 30 விழுக்காடு வரை மாணவர்களை சேர்க்கலாம் என்றும் இஸ்லாமிய பெண்களுக்கு எந்தக் கல்லூரியிலும் இடம் மறுக்கப்படக் கூடாது எனவும் திட்டவட்டமாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில மோகம்... சென்னையில் 84 சதவீதம் ஆங்கில வழிக்கல்வி..?




சென்னையில் ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாகவும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.


தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்து வருகிறது. ஆனால், மாணவர்கள் ஆங்கில வழிக்கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை தமிழ்வழிக்கல்வி கற்பதற்கு சென்னை போன்ற நகரங்களில் விரும்புவதில்லை. தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் கருதி பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்வியை அளிப்பதற்கே விரும்புகின்றனர்.


சென்னையில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி பெற்றோர் தங்களின் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கின்றனர்.


இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அளித்துள்ள தகவலில், ' சென்னையில் தமிழ்வழியில் 16 விழுக்காடு மாணவர்களும், ஆங்கில வழியில் 84 விழுக்காடு மாணவர்களும் படித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் 61 விழுக்காடு பேர் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த தகவலை தகவல் அறியும் சட்டம் மூலம் வெளிக்கொண்டு வந்த டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் தமிழ்நாசர் இது குறித்து ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,


'நான் எனது தங்கையை 5ஆம் வகுப்பு முடித்து 6ஆம் வகுப்பு தமிழ்வழிக்கல்வியில் அரசுப்பள்ளியில் சேர்க்க விரும்பி போராடி அனுமதி வாங்கினேன். இருப்பினும், சென்னை அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதை அறிந்தேன்.


இதனைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் மிகவும் உதவியது. என் தங்கையை சேர்ந்த எக்.டி.எம் காலனியின் அரசுப்பள்ளியில் 4500 மாணவிகளில் 4000 மாணவிகள் ஆங்கில வழிக்கல்வியில் படிப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இறுதியில் சமூக ஆர்வலர் நலங்கிள்ளியின் உதவியுடன் என் தங்கையை அந்த பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பாடப் பிரிவில் சேர்ந்து கொண்டனர்' என்றார்.


தமிழ்நாடு அரசு தமிழ் வழிக்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்திவரும் நிலையில், இவ்வாறு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தமிழ் தவிர்க்கப்படுவது மிகப்பெரும் அதிர்ச்சியானதாகும். 


தமிழ் நாசர் போன்ற சில சமூக ஆர்வலர்களும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். தமிழ் பாடத்தால் அரசு வேலையில் முன்னுரிமை போன்ற பல திட்டங்கள் இருக்கையில் மக்களின் இந்த அறியாமை வருத்தமளிப்பதாக பல தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.



 எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு 5000  சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்க முடிவு




சென்னை : எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு பாடம் நடத்த, 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க, பள்ளிக் கல்வி துறை முடிவு செய்துள்ளது.



அரசின் அங்கன்வாடிகளுடன் இணைந்து செயல்படும் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மழலையர் வகுப்புகளில் பாடம் நடத்துவதற்கு, தனியாக சிறப்பாசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 2,381 பள்ளிகளில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளை நடத்த, 5,000 ஆசிரியர்களை நியமிக்கப்பட உள்ளனர்.


முதற்கட்டமாக, 2,500 பேர் உடனடியாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பள்ளிக் கல்வி துறை நடத்தும், தொடக்க கல்வி டிப்ளமா படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


 திமுக ஆட்சியிலும் தொடரும் அவலம்: குழப்பங்களின் கூடாரமா பள்ளிக் கல்வித்துறை?




ஆட்சி மாறியும் காட்சி மாறாத கதையாக பள்ளிக் கல்வித்துறையின் பல்வேறு செயல்பாடுகளால், குழப்பங்களின் கூடாரமாகத் துறை மாறிவிட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது.


கடந்த ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவியேற்றுக் கொண்டார். இதற்குப் பிறகு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடர் கதையாக இருந்த, பள்ளிக் கல்வித்துறையில் அறிவிப்புகள் வெளியாவதும் அவை திரும்பப் பெறப்பட்டு, புதிய அறிவிப்புகள் வெளியாவதும் நடக்காது என்றே எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், திமுக ஆட்சியிலும் இந்த அவலம் தொடர்கிறது. நாளொரு அறிவிப்பும் பொழுதொரு பின்வாங்கலுமாய் இருக்கும் பள்ளிக் கல்வித்துறையால், ஆசிரியர்களும் மாணவர்களும் பாதிக்கப்படுவதாய்க் குரல்கள் எழுகின்றன. அந்த வகையில் அண்மையில் பள்ளிக் கல்வித்துறையில் வெளியான அறிவிப்புகளும் அவற்றைத் திரும்பப் பெறுதலும், புதிய அறிவிப்புகளை வெளியிடுதலும் என்னென்ன? பார்க்கலாம்.


கல்விக் கொள்கை சர்ச்சை


பொறுப்பேற்ற பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ''தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்'' என்று தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், ''புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு திட்டத்தைச் செயல்படுத்தும்போதும் கண்ணும் கருத்துமாகச் செயல்படுத்துவோம்'' என்று தெரிவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.


மீண்டும் பேசிய அமைச்சர், ''மாநிலத்துக்கெனத் தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும்'' என்று முதல்வர் அறிவித்துள்ளதைப் பின்பற்றுவோம் என்று அறிவித்தார்.


முகக்கவசம் கட்டாயம், இல்லை


இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று முதலில் தகவல் வெளியானது. எனினும் இந்தத் தகவலை மறுத்த அமைச்சர் அன்பில் மகேஸ், ''பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை. விருப்பம் உள்ளவர்கள் அணியலாம் என்றே அறிவுறுத்தப்பட்டது. தனிமனித விருப்பத்தின்படி பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணியலாம்'' என்று விளக்கம் அளித்தார்.


அனைவருக்கும் தேர்ச்சி


பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட தேர்வு கால அட்டவணையில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு அறிவிப்பு வெளியாகவில்லை. 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே வெளியாகி இருந்ததால் தொடக்கப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி என்று தகவல் வெளியானது.


எனினும் இந்தத் தகவலில் உண்மையில்லை என்று மறுப்புத் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படாது என்று தெரிவித்தார். இந்த நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் அண்மையில் தேர்ச்சி வழங்கப்பட்டது.


பள்ளிகள் திறப்பு


தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாகர்கோவிலில் மே 18ஆம் தேதி பேட்டி அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ''ஜூன் 20ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. விரைவில் தேதி அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.


10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், மாநிலத்தில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பணிகள் காரணமாக திறப்பு தள்ளிப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. எனினும் பள்ளிக் கல்வித்துறை தரப்பில், திட்டமிட்ட தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.


தேர்வுத் தேதி


கொரோனா தொற்று ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்ததை அடுத்து, 2021-22ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் எப்போதும்போல் மார்ச் மாதம் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த ஆண்டில் தெரிவித்திருந்தார். எனினும் தேர்வுகள் தள்ளிப்போய் மே மாதத்தில்தான் நடைபெற்றன.


மழலையர் வகுப்புகள்


இடைநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக, எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளைப் பள்ளிக் கல்வித்துறைக்கு பதிலாக சமூக நலத்துறையே தொடர்ந்து நடத்தும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஓர் அறிக்கை வெளியானது. எனினும் இதற்கு ஆசிரியர்களும் கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதைத் தொடர்ந்து பின்வாங்கிய பள்ளிக் கல்வித்துறை, எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறையே நடத்தும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.


பொதுத்தேர்வு முடிவுகள் தேதி மாற்றம்


இந்நிலையில் இன்று 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளும் திடீரென மாற்றப்பட்டுள்ளன. முன்னதாக ஜூன் 17ஆம் தேதி 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும், அதே மாதம் 23ஆம் தேதி 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியாவதாக இருந்தன.


இந்த நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஒரே நாளில், ஜூன் 20ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தாமதமாகவும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் முன்னதாகவும் வெளியாக உள்ளன. தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக 2 பெரிய பொதுத்தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியாவது அநேகமாகவே இதுவே முதல் முறை. இந்த முறை சரியானதுதான் என்று கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்தாலும், இதை முன்கூட்டியே திட்டமிட்டு, தெரிவிக்காதது ஏன் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர்.


இத்தகைய செயல்பாடுகளால், குழப்பங்களின் கூடாரமாகப் பள்ளிக் கல்வித்துறை செயல்படுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் தேதியிலும் குழப்பம் விளைவித்த பள்ளிக்கல்வித்துறை



ஜூன் 20ம் தேதி காலை 9.30 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வும், 12 மணியளவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.


அதாவது இன்று வெளியாகவிருந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகம் ஜூன் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. 10ம் வகுப்புக்கு கடந்த மே மாதம் 6ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை நடந்து முடிந்தது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர்.


இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணியானது கடந்த ஜூன் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தம் செய்து, மதிப்பெண்களை தொகுத்து அதனை தேர்வுத்துறை அலுவலர்கள் சரிபார்த்த பின்னர் தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றும் பணி நடந்து முடிந்துள்ளது.


ஏற்கனவே திட்டமிட்டப்படி ஜூன் 17ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி நாளை காலை 10 மணிக்கு என்ற http://www.dge.tn.gov.in இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென்று தேர்வு முடிவுகள் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது வருகின்ற 20ம் தேதி காலை 9.30 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வும், 12மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...