22 December 2022

 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! அரசுக்கு கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தல்!



12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.


அரசு பள்ளிகளில் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய சிறப்பு பாடங்களில் கடந்த 2012-ம் ஆண்டு ரூபாய் 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டார்கள்.


பின்னர் 2014-ம் ஆண்டு சம்பள உயர்வு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்து 2017-ம் ஆண்டு சம்பள உயர்வு எழுனூறு ரூபாய் வழங்கப்பட்டது. கடைசியாக 2021-ம் ஆண்டு சம்பள உயர்வு 2 ஆயிரத்து 300 ரூபாய் வழங்கப்பட்டது.


இதனால் தொகுப்பூதியம் ரூபாய் 10 ஆயிரம் ஆனது. இவர்களில் 4 ஆயிரம் காலிப்பணி இடங்கள் ஏற்பட்டது. 2021-ம் ஆண்டு கணக்குப்படி 12 ஆயிரம் பேர் பணி செய்து வருகிறார்கள்.


முதல்வர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று உறுதி அளித்திருந்தார். இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாதது பகுதிநேர ஆசிரியர்களின் மத்தியில் ஒரு குறையாக இருந்து வருகிறது.


ஏழை அடித்தட்டு விளிம்பு நிலையில் உள்ள பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் வறுமையில் வாடுகிறார்கள். எனவே பொங்கல் போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் இம்முறையாவது பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.


மேலும், சம்பளத்தை உயர்த்துவதோடு பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட, மாண்புமிகு முதல்வர் அவர்கள் மனிதாபிமானத்துடன் பரிசீலிக்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான இந்த கோரிக்கையை முதல்வர் அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.

 பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செயல்முறைப் பயிற்சி வகுப்பு - பதிவு செய்ய தவறிய தனித் தேர்வர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!


2022-2023 - ம் கல்வி ஆண்டு . ஏப்ரல் 2023 - ல் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள தனித்தேர்வர்களுள் , ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாடத்தில் செய்முறைப் பயிற்சி வகுப்பில் பெயர்களை பதிவு செய்யத் தவறிய தனித்தேர்வர்கள் 26.12.2022 முதல் 30.12.2022 வரை பயிற்சி வகுப்பில் சேருதல் குறித்த " செய்திக்குறிப்பு " இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது . 












 தமிழகத்தில் குரூப் 1 தேர்வு.. டிஎன்பிஎஸ்சி உத்தேச அட்டவணை வெளியீடு



தமிழகத்தில் குரூப் 1 தேர்வு நடைபெறுவதற்கான உத்தேச அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


ஆகஸ்ட் மாதம் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும் நவம்பர் மாதம் முதல்நிலை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


2023 ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு கால திட்ட அட்டவணை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த தேர்வு அட்டவணையில் குரூப் 1, குரூப் 2/2ஏ தேர்வு பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவுமில்லை. மேலும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும், 2024ல் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


இந்த தேர்வு திட்டம், தமிழகத்தில் உள்ள குறிப்பாக நடுத்தர மற்றும் கிராமப்புற இளைஞர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை உருவாக்கக் கூடியாதாக உள்ளது. குறிப்பாக, குரூப் 1 தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு இருப்பதால், தற்போது 38 வயதில் இருக்கும் பலர் மீண்டும் ஒருமுறை தேர்வெழுதும் வாய்ப்பை இழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.


2023ஆம் ஆண்டிற்கான அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை (TNPSC Updated Annual Planner) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில், குரூப் 1 தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.


முன்னதாக, வெளியிடப்பட்ட தேர்வு அட்டவணையில் குரூப் 1, குரூப் 2/2ஏ தேர்வு குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் 2023ல் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் குரூப் 1 பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்றும், முதல்நிலைத் தேர்வு 2023, 23 நவம்பர் நடைபெறும் என்றும் , முதன்மைத் தேர்வு 2024 ஜுலை 24ம் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, 2022ம் ஆண்டுக்கான குரூப் 1 நிலை பதவிக்கான அறிவிக்கையை கடந்த ஜுலை மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட 92 பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்பட உள்ளன.


இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு, கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி நடைபெற்றது. 3.22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1.9 லட்சம் பேர் தேர்வெழுதினர். இதன் முடிவுகள், விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இன்றைய தினம் வெளியாகியுள்ள திருத்தப்பட்ட தேர்வு திட்ட அட்டவணையில் குரூப் 2/2ஏ தேர்வு தொடர்பான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. அதேபோன்று, 2023ல் குரூப் 4 தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்களும், தேர்வர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், அதுதொடர்பான அறிவிப்பும் இடம் பெறவில்லை. குரூப் 1 பணியிடங்கள் மட்டுமே கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.


கடந்த 2001 முதல் 2006 ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பொருளாதார நிதிநெருக்கடி காரணமாக, குரூப் 1, 2,4 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருந்தது. 2006ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகே, ஆட்சேர்ப்பு நடைமுறை இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியது. இந்த நிலையில் இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அட்டவணை அரசு தேர்வு எழுத வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருப்பவர்களுக்கு பெரிய அளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 CUET UG 2023: மே மாதத்தில் க்யூட் நுழைவுத்தேர்வு - யுஜிசி அறிவிப்பு




மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான க்யூட் தேர்வு தேதியை அறிவித்தது பல்கலைக்கழக மானியக்குழு.


நாடு முழுவதிலும் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வாக CUET UG நடத்தப்படுகிறது. அந்தவகையில், இளநிலை க்யூட் (CUET UG 2023) நுழைவுத்தேர்வு அடுத்தாண்டு மே 21 முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என யுஜிசி அறிவித்துள்ளது.


இதுபோன்று முதுநிலை க்யூட் தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் முதல் அல்லது 2வது வாரத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யூட் நுழைவுத்தேர்வானது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடைபெறும் என யுஜிசி தெரிவித்துள்ளது. மேலும், CUET UG 2023 தேர்வுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து விண்ணப்பம் செயல்முறை தொடங்கப்படும்.


டிச.21ம் தேதி வெளியிடப்பட்ட யுஜிசி அறிக்கையின்படி, பாடங்களின் எண்ணிக்கையும், வினாத்தாள்களின் வடிவமும் அப்படியே இருக்கும். மேலும், தேர்வு முடிந்து மாணவர் சேர்க்கை செயல்முறை ஜூலை 2023க்குள் முடிவடையும் என்றும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் 1, 2023க்குள் கல்வி அமர்வுகளைத் தொடங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப்-6 தேர்வு தேதி அறிவிப்பு!....




வனத்துறை சார்ந்த குரூப் 6 பணிகளுக்கான தேர்வு வரும் 27ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


வனத்துறை பயிற்றுநர் பதவிக்கான குரூப் 6 தேர்வு கடந்த 10 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 10 ஆம் தேதி நடைபெற இருந்த வனத்துறை தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.


 

இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட வனத்துறை தேர்வு வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதாவது அடுத்த வாரம் செவ்வாய் கிழமை இத்தேர்வு நடைபெற உள்ளது. 10 காலி பணியிடங்கள் கொண்ட இத்தேர்வுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

 10, 11, 12 பொதுத்தேர்வுக்கு டிச.26 முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!





10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2023 மார்ச் மாதம் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரையில் விடுமுறை நாட்கள் தவிர, பிற நாட்களில் அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம். 


தட்கல் திட்டம்: தனித்தேர்வர்கள் விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் ஜனவரி 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையில் அரசுத்தேர்வுகள் இயக்கத்தின் இ-சேவை மையங்களின் மூலம் ஆன்லைனில் கூடுதலாக மேல்நிலை வகுப்பிற்கு ரூ.1000 மற்றும் பத்தாம் வகுப்பிற்கு ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்கலாம். 


அரசுத் தேர்வுத்துறையின் இ-சேவை மையங்கள் குறித்த விவரங்களை https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்" என அதில் கூறப்பட்டுள்ளது. 

 10, 12 பொதுத்தேர்வுக்கு ஆன்லைனில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்



தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறப்பில் கூறப்பட்டிருப்பதாவது:


தமிழ்நாட்டில் 2023 மார்ச், மாதங்களில் நடைபெறவுள்ள 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விரும்புவோர் டிசம்பர் 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


அரசு தேர்வுகள் துறையின் இணையதளமான dge.1.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதுதவிர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்கக மையத்திலும் தனித் தேர்வர்கள் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


பள்ளிகளில் படிக்கும் மற்ற மாணவர்கள் அந்தத்த பள்ளிகள் மூலம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கு தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கு வரும் மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

  தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...