21 February 2025

 குரூப் 2ஏ முதன்மை தேர்வு உத்தேச விடைகள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு




குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


7 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அமைச்சுப் பணியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் தட்டச்சர் பணிக்கான சிறப்பு போட்டித் தேர்வு (கணினி வழித் தேர்வு) கடந்த 8ம் தேதி நடத்தப்பட்டது. இதில் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


குரூப் 2ஏ பணிகள் அடங்கிய பதவிகளுக்கான முதன்மைதேர்வு கடந்த 8ம் தேதி நடத்தப்பட்டது. இதில் பொதுத்தமிழ் பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்குள் அதாவது வருகிற 26ம் தேதி மாலை 5.45க்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ''ஆன்சர் கீ சேலன்ச்" என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். 


இதற்கான அறிவுரைகள் வழிமுறைகள் தேர்வாணைய இணைய தளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 '56 மொழிகளை விழுங்கியுள்ளது இந்தி; நாம் பலியாகக் கூடாது'- எச்சரிக்கை மணியடித்த அமைச்சர் அன்பில் மகேஷ்



மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும்.


தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. 


உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் திருச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''இந்தியாவில் முழுமையாக 56 மொழிகள் முழுமையாக விழுங்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் இந்தி மொழியால் விழுங்கப்பட்டிருக்கிறது.


 இதே அமைச்சர் தர்மேந்திர பிரதான் சார்ந்திருக்கின்ற மாநிலமான ஒடிசாவில் இருக்கக்கூடிய ஒரியா மொழி உட்பட போஜ்புரி, ராஜஸ்தானி இப்படி நம்ம கண்ணுக்கு தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத 56 க்கும் மேற்பட்ட மொழிகள் இந்தியனுடைய திணிப்பால் அழிக்கப்பட்டிருக்கிறது.


அதுபோன்ற ஒரு நிலை நம்முடைய தாய் மொழிக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் உலகத் தாய்மொழி தினமான இன்று இந்த விளக்கத்தை சொல்லி இருக்கிறேன். எந்த விதத்திலும் பலியாகாமல் இருக்க வேண்டும்.


 பல்வேறு மாநிலங்களின் அதிகாரிகளுடன் நாங்கள் பேசும்போது அவர்கள் சொல்வது மும்மொழி கொள்கை பிரச்சனையாக இருந்தாலும், மூன்று; ஐந்து; எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கொண்டு வரும் பிரச்சனையாக இருந்தாலும் எல்லா விதத்திலும் ஏற்றுக் கொண்டோம் என்று சொன்னால் அவர்கள் கரிக்குலத்தை கொண்டு வந்து விடுவார்கள்.


வரலாறு மாற்றப்படும். நம் வரலாற்றில் நல்லவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களை எல்லாம் கெட்டவர்களாக காட்டுவார்கள். யார் யார் கெட்டவர்களோ அவர்களை நல்லவர்களாக, தியாகிகளாக காட்டுவார்கள். 


இவையெல்லாம் அதன் வழியாக உள்ளே நுழைந்து விடும். இதை உள்ளே நுழைய விடாமல் அரணாக காக்கும் இடத்தில் தமிழக முதல்வர் இருப்பதால்தான் இல்லாத நிபந்தனைகள் எல்லாம் விட்டுவிட்டு விவாதப் பொருளாக இருக்கக்கூடிய நிபந்தனைகளை வைத்துக் கொண்டு இதில் கையெழுத்துப் போட்டால் தான் பணம் தருவேன் என சொல்கிறார்கள்'' என்றார்.




 Teachers: ''அரசு வேலைன்னு நம்பினோம்; கூலி வேலைக்குப் போறோம்''- கண்ணீர் விடும் ஆசிரியர்கள்!




ஆசிரியர் பணி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்று 8 மாதங்களுக்கு மேலாகியும் பணி வழங்கப்படவில்லை என தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


3,192 பேருக்கு ஆசிரியர் பணி வழங்கக் கோரி புத்தகங்களை ஏந்தி, குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் புகைப்பட முகமூடி அணிந்து குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நடந்தது என்ன?


2012, 2013, 2017, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற டெட் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதற்காக BT/ BRTE போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.


கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வை, எழுதிய நிலையில் மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. எனினும் இதுவரை பணி நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2800 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஏமாற்றம்தான் மிச்சம்


இன்று எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட கலைச்செல்வி கூறும்போது, ''ஆசிரியர் பணி நியமனத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 8 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பணி நியணம் வழங்கவில்லை. நவம்பர் மாதம் பணி ஆணை வழங்குவதாக உத்தரவாதம் வழங்கியிருந்தார்கள். நாங்களும் நவம்பர் மாதம் வரை காத்திருந்தோம். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது.


காரணம் கேட்டால் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகக் கூறுகின்றார்கள். அரசு நினைத்தால் அந்த வழக்கை உடனே முடித்து வைக்க முடியும் ஆனால் ஏன் காலதாமதம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. கல்வித் துறையில் அமைச்சு பணியாளர்களாகப் பணிபுரிந்து வருபவர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வில் பணி நியமனம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கால் எங்களுக்கு பணி நியமனம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.


2012 -13 காலகட்டங்களில் தேர்வு எழுதிய எங்களுக்கு இதுவரை பணி நியமனம் வழங்கவில்லை. இதுவரை மூன்று தேர்வுகளை எழுதி விட்டோம். மூன்றிலும் தேர்ச்சி பெற்று விட்டோம். ஆனாலும் அரசுப் பணி வாங்கி, ஆசிரியர் வேலைக்குச் செல்ல முடியவில்லை.


கூலி வேலைக்குச் செல்லும் ஆசிரியர்கள்


தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் வேறு நிறுவனங்களில் வேலைக்கும் செல்ல முடியவில்லை. தேர்ச்சி பெற்ற பல்வேறு ஆசிரியர்கள் கூலி வேலைக்குச் செல்கின்றனர்.


வேதியியல் பாடத்தில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற ஆசிரியர் கூலி வேலை செய்து கொண்டிருக்கிறார். 50 வயது கடந்தும் பலருக்கு இங்கு பணி நியமனமில்லை... அரசு ஊழியர் ஆகிவிடலாம், ஆசிரியர் ஆகிவிடலாம் என்று நினைத்தோம். ஆனால் நடக்கவில்லை.


எங்களுக்காக குரல் கொடுக்கவும் போராடவும் யாரும் இல்லை. அதனால் நாங்களே எங்களுக்காகப் போராடுகிறோம். தமிழ்நாடு அரசு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்க வேண்டும் என கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.


அரசுப் பணி நியமனம் செய்ய வேண்டும்


எங்களது நேரடி நியமனத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்கி அனைவருக்கும் அரசுப் பணி நியமனம் செய்திட வேண்டும் என கோருகிறோம்'' என்று கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

 பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வான 3192 பேருக்கு உடனடியாக பணி ஆணை வழங்குக: அன்புமணி




பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3192 பேருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'தமிழ்நாடு அரசு பள்ளிகளில் நியமிப்பதற்காக 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 8 மாதங்களாகி விட்ட நிலையில், அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படாததைக் கண்டித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் அவர்களின் குடும்பத்துடன் சென்னையில் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். 


அரசு பள்ளி ஆசிரியர் பணியில் நியமிப்பதற்கான போட்டித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் அவர்கள் நிறைவேற்றி விட்ட நிலையில், அவர்களுக்கு பணி ஆணை வழங்க தமிழ்நாடு அரசு மறுத்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.


தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18ம் தேதி வெளியிடப்பட்டன.


அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்டது. ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு 16 மாதங்கள் ஆகி விட்டன. தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்து விட்டது. தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், நியமன ஆணைகள் இன்னும் வழங்கப்படவில்லை.


தமிழ்நாட்டில் அரசு வேலை என்பது குதிரைக் கொம்பை விட அரிதாகி விட்டது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை.


 அதனால், அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. இன்னொருபுறம் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு எழுதி வெற்றி பெற்ற பலர் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணி கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.


கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் அதற்காக விண்ணப்பித்து போட்டித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு என பல கட்டங்களைக் கடந்து அவர்கள் ஆசிரியர் பணிக்கு கடந்த ஜூலை மாதமே தேர்வு செய்யப்பட்டு விட்ட நிலையில், அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கக்கப்படவில்லை என்றால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? என்பதை ஆட்சியாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.


அதிலும் குறிப்பாக இந்த முறை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கடந்து வந்த பாதை மிகவும் கொடுமையானது. 2018 ஆம் ஆண்டுக்கு முன்புவரை ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அதில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் நேரடியாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர்.


ஆனால், முந்தைய ஆட்சியில் 20.07.2018 -தேதியிட்ட 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றாலும் மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுதி தான் பணியில் சேரமுடியும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது அந்த அரசாணையை எதிர்த்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் இந்த அரசாணை ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை.


அதனால் இப்போது பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3192 பேரும் இரு தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றவர்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.


 அதுமட்டுமின்றி, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்படவுள்ளது என்றும், இப்போது தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக ஆட்சியாளர்களுக்கு பணம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்கப் படவுள்ளது என்றெல்லாம் வதந்திகள் பரவி வருகின்றன

 

இவை ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. அதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.


பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நியமன ஆணை வழங்க வேண்டும் என்று கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நான் வலியுறுத்தி வருகிறேன். நிதி நெருக்கடியால் தான் நியமனம் தாமதம் ஆவதாக ஒரு கட்டத்தில் செய்திகள் வெளியான நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். 


அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையின் ஆய்வுக் கூட்டத்தில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்து விட்டதாக செய்திகள் வெளியாயின. அதன்பின்னரும் 3 மாதங்களாகி விட்ட நிலையில், இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படாதது நியாயம் அல்ல.


எனவே, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3192 பேருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும். அதேபோல், இடைநிலை ஆசிரியர் பணிக்கு 2768 பேரை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் விடைத் தாள்களை திருத்தும் பணி இன்னும் தொடங்காத நிலையில், அவற்றை உடனடியாகத் திருத்தி தகுதியான தேர்வர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் இல்லை - தமிழ்நாடு அரசால் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வாபஸ்


சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.


இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பதவி உயர்வு, சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்டவைகளில் இருந்த பல நெருக்கடிகள் இந்த மனு வாபஸ் மூலம் விலகும்.












  டெட் தேர்வு; விரைவில் மறுசீராய்வு மனு - அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று விரைவில் நீதிமன்றத்...