3 February 2025

 சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா?



அரசுப் பள்ளிகளின் செயல்பாட்டிலும் மாணவர்களின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கும் சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் நிலையில், அவர்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டம், அது தொடங்கப்பட்ட காலத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டுவதாக இருந்தது. காமராஜர் தொடங்கி வைத்த இத்திட்டம், எம்ஜிஆர், மு.கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிகளில் மேம்படுத்தப்பட்டது.


பல குழந்தைகளைப் பள்ளியில் சேர வைப்பதும் இடைநிற்றலுக்கு உள்ளாகாமல் படிப்பைத் தொடர வைப்பதும் இதன் சாதனைகள்; ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவது இதன் இன்னொரு சிறப்பு. கணவரை இழந்த, ஆதரவற்ற பல பெண்களுக்குச் சத்துணவுத் திட்டம் அடைக்கலம் அளிப்பதாக இருக்கிறது. எனினும், பிற அரசு ஊழியர்கள் காலத்துக்கேற்றவாறு ஊதிய உயர்வு உள்ளிட்ட உரிமைகளைப் பெற முடிகிற நிலையில், சத்துணவுப் பணியாளர்கள் அவற்றைப் பெற முடியாமல் தவிப்பது துரதிர்ஷ்டவசமானது.


தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஏறக்குறைய ஒன்றரை லட்சம் சத்துணவுப் பணியாளர்கள் தேவை. ஆனால், ஏறக்குறைய 70 சதவீதப் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2017இலிருந்து பணியாளர் சேர்க்கை நடைபெறவே இல்லை. 200 மாணவர்களுக்கு ஒரு சத்துணவு அமைப்பாளரும் ஒரு சமையலரும் ஓர் உதவியாளரும் இருக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானால், அதற்கேற்பக் கூடுதலாக உதவியாளர்கள் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவது இல்லை.


ஓர் அமைப்பாளர் 4 சத்துணவு மையங்களுக்கும் சில மாவட்டங்களில் 9 மையங்களுக்கும் கூட, பணிபுரியும் நெருக்கடி நிலவுவது நிதர்சனம். காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மட்டுமே இவர்களது பணி நேரமாக இருப்பினும், அதற்குள் இவர்களின் வேலை நிறைவடைவதில்லை. உதவியாளர் இன்றி ஒரே ஆள் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குச் சமையல் செய்வதில் உள்ள சிரமங்களை யாரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். பணிபுரியும் பெண்களில் பலர் 40 வயதுக்கும் மேற்பட்டோர்.


இவர்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்டத் தெரியாததால், தலையில் பாத்திரத்துடன் நடந்தே அடுத்த பள்ளிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. பல சத்துணவு மையங்களில் தண்ணீர், மின்சார இணைப்புகள்கூட இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், பணியாளர்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது. கழிப்பிட வசதிகளுக்குக்கூட இவர்களுக்கு உத்தரவாதம் இல்லை என்பதே கள நிலவரம்.


சத்துணவு அமைப்பாளரது ஊதியம் ரூ.12,000-ரூ.24,000 ஆகவும், சமையலர் - உதவியாளர் ஊதியம் ரூ.3.000-ரூ.8,000 ஆகவும் உள்ளது. இந்தக் காலத்திலும் இவர்களது ஓய்வூதியம் ரூ.2,000 மட்டுமே. தங்களுக்கு இளநிலை உதவியாளருக்கான ஊதியம் அளிக்கப்பட வேண்டும் எனவும் ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உயர்த்தப்பட வேண்டும் எனவும் இவர்கள் நீண்ட காலமாகக் கூறிவருகின்றனர். 8,997 பேரை மாதத்துக்கு ரூ.3,000 எனத் தொகுப்பூதிய முறையில் பணியமர்த்தப்போவதாகத் தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளது. இதற்கு எதிராகவும் சத்துணவுப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.


தமிழக அரசுக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்த காலை உணவுத் திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க நடந்த முயற்சி விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், அது கைவிடப்பட்டிருக்கிறது. உண்மையில், இந்தப் பணிகள் சத்துணவுப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டால், நிர்வாக நோக்கில் பொருத்தமானதாகவும் சராசரி அரசு ஊழியருக்கான ஊதியம் கேட்கும் சத்துணவுப் பணியாளர்களின் திறனைப் பயன்படுத்துவதாகவும் இருக்கும்.


கல்வியில் உணவையும் இணைத்துச் சமூக நீதியை நிலைநாட்டும் அரசின் பணிக்குச் சத்துணவுப் பணியாளர்களே அச்சாணியாக உள்ளனர். இவர்கள் தங்கள் உரிமைகளுக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் சூழல் இனியும் தொடரக் கூடாது.

 CBSE Admit Card 2025 : 10, 12-ம் வகுப்பு CBSE 2025 தேர்வு அட்மிட் கார்டு வெளியீடு! 



மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12ம் வகுப்பு இறுதித் தேர்வுக்கான அனுமதி அட்டைகளை பரிட்சா சங்கம் போர்ட்டல் மூலம் வெளியிட்டுள்ளது.


பள்ளிகள் அதிகாரப்பூர்வ CBSE இணையதளத்தைப் பார்வையிட்டு, போர்ட்டலில் உள்நுழைந்து, தங்கள் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்யலாம்.


பதிவிறக்கம் செய்யும் முறைகள்:


மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in ஐப் பார்வையிடவும்.

முகப்புப் பக்கத்தில், பரிட்சா சங்கம் போர்ட்டலுக்கான இணைப்பைக் கண்டுபிடித்து அதைக் கிளிக் செய்யவும்.

மறுவழிப்படுத்தப்பட்ட (Redirect) பிறகு, அடுத்த பக்கத்திற்குச் செல்ல 'தொடரவும்' பட்டனைக் கிளிக் செய்யவும்.

அடுத்த பக்கத்தில், பள்ளி சார்ந்த பிரிவை அணுக 'SCHOOLS (GANGA)' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

'Pre-Exam Activities' என்பதைக் கிளிக் செல்லவும், அங்கு பல்வேறு தேர்வு தொடர்பான ஆப்ஷன்களை நீங்கள் காணலாம்.

இந்த Tab -இன் கீழ், Admit Card பதிவிறக்கப் (Download) பிரிவைத் திறக்க 'Admit Card, Centre Material for Main Exam 2025' என்ற தலைப்பைக் கொண்ட இணைப்பைக் கிளிக் செய்யவும்.

தேவையான உள்நுழைவு விவரங்களை (பள்ளிக் குறியீடு மற்றும் கடவுச்சொல் போன்றவை) உள்ளிட்டு, உங்கள் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்.

CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு இறுதித் தேர்வுகள் பிப்ரவரி 15 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 18 அன்று முடிவடையும், அதேசமயம் 12ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 4 அன்று முடிவடையும். இரண்டு தேர்வுகளும் ஒரே ஷிப்டில், காலை 10:30 மணிக்கு தொடங்கும். இந்த ஆண்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 8,000 பள்ளிகளில் இருந்து சுமார் 44 லட்சம் மாணவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் கலந்து கொள்ள எதிர்பார்க்கப்படுகிறார்கள்.


ஜனவரி மாத தொடக்கத்தில், சேர்க்கை முறைகேடுகள் மற்றும் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளின் தரநிலைகளை பூர்த்தி செய்யாதது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக டெல்லி மற்றும் ஐந்து மாநிலங்களில் உள்ள 29 பள்ளிகளுக்கு CBSE எச்சரிக்கை நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது.


டிசம்பர் 18 மற்றும் 19, 2024 அன்று பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிகளில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் இந்த எச்சரிக்கை நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) என்பது இந்தியாவில் பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்கான தேசிய அளவிலான கல்வி வாரியமாகும், இது இந்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. 1929 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்ட இந்த வாரியம், இடைநிலைக் கல்வித் துறையில் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை நோக்கிய ஒரு பரிசோதனையாக இருந்தது. இந்தியாவில் 27,000 க்கும் மேற்பட்ட பள்ளிகளும், 28 வெளிநாடுகளில் 240 பள்ளிகளும் CBSE உடன் இணைக்கப்பட்டுள்ளன. CBSE உடன் இணைக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் NCERT பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்றன, குறிப்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளவை.


1952 ஆம் ஆண்டு வாரியத்தின் அரசியலமைப்பு திருத்தப்பட்டு அதன் தற்போதைய பெயர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்று வழங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கும் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் அதன் சேவைகள் கிடைக்கச் செய்யும் வகையில், வாரியம் ஜூலை 1, 1962 அன்று மறுசீரமைக்கப்பட்டது.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...