21 December 2022

 தெற்கு ரயில்வே பணிகளில் 80% வட இந்தியர்கள்.! பாண்டேக்கள், சவுத்திரிகள், சவுகான்கள் நிரம்பியுள்ளனர் - அன்புமணி




ரயில்வே பணியிடங்களில் 80 சதவகிதம் வட மாநிலத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதாற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு தொடர்வண்டித்துறையில் பல்வேறு நிலைகளில் 964 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் 80 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்களை வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தேர்வாகி இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமாநிலத்தவர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகிறார்களோ? என்ற ஐயத்தை இது எழுப்பியிருக்கிறது.


தெற்கு ரயில்வேயில் 80% வட மாநிலத்தவர்


தெற்கு தொடர்வண்டித்துறை, ஐ.சி.எஃப் எனப்படும் தொடர்வண்டி பெட்டித் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு கூட்ஸ் கார்டுகள், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர், முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், முதுநிலை வணிகம் மற்றும் பயணச்சீட்டு எழுத்தர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட ஐந்தாம் நிலை மற்றும் ஆறாம் நிலை பணிகளுக்கு சென்னையிலுள்ள தொடர்வண்டி பணியாளர் வாரியம் மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. 2020-ஆம் ஆண்டு திசம்பர் 28-ஆம் தேதி முதல் 2022-ஆம் ஆண்டு திசம்பர் 12 வரை நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் முடிந்த பிறகு 964 பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 200 பேர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல... 750க்கும் மேற்பட்டவர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.


தமிழர்களுக்கு வாய்ப்பு குறைவு


தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பெயர்களைத் தேடித்தேடி பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாறாக, பட்டியலில் பாண்டேக்கள், சவுத்திரிகள், சவுகான்கள், மீனாக்கள், பிஸ்வாஸ்கள், குமார்கள் தான் எங்கும் நிரம்பியிருக்கிறார்கள். . தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவிலும், அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்த அளவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அது நியாயமானதாக இருந்திருக்கும். ஆனால், 80% பணியிடங்களுக்கு வட இந்தியர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவரே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை நியாயப்படுத்த முடியாது. இது இயற்கை நீதிக்கு முற்றிலும் எதிரானது.


அரசு பணி கனவு கருகி விடும்


இவற்றைக் கடந்து தமிழக அரசுப் பணிகளிலும் வட இந்தியர்கள் நுழையத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு, பொதுத்துறை பணிகளில் 80 முதல் 90 விழுக்காட்டையும், தமிழக அரசு பணிகளில் சிலவற்றையும் வட இந்தியர்கள் பறித்துக் கொண்டால், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவு கருகி விடும்.அரசுப் பணிகள் இப்படி என்றால், தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பும் தமிழர்களுக்கு தான் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதற்காக தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள இடைநிலை மற்றும் கடைநிலை பணிகள் அனைத்தும் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களைக் கொண்டே நிரப்பப்படும் வகையில் 100% மாநில ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.


டிஎன்பிஎஸ் சி மூலம் தேர்வு


மத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் பணியிடங்களில் 50% மாநில ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் கொண்டு வரப்பட்டிருப்பதைப் போன்று, பிற தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளிலும் தமிழ் பாடத் தாள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளா், இரவுக்காவலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்




வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதுகுறித்து, ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு -


வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ள வேலூா் மாவட்ட இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அலுவலக உதவியாளா் ஒரு பணியிடத்திற்கு பொதுப்போட்டி முன்னுரிமை உள்ளவா், இன சுழற்சியில் கரோனா தொற்று, இதர காரணங்களால் பெற்றோா் இருவரையும் இழந்த (இருபாலா்) 8-ஆம் வகுப்பு தோச்சி பெற்ற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம். இரவுக்காவலா் ஒரு பணியிடத்திற்கு பொதுப்போட்டி முன்னுரிமையற்றவா், இனசுழற்சிக்கு தகுதியான எழுதப் படிக்க தெரிந்தவா்கள் (5-ஆம் வகுப்பு தோச்சி) விண்ணப்பிக்கலாம்.


இரு பணியிடங்களுக்கும் 2022 ஜூலை 1-ஆம் தேதியில் குறைந்தபட்சம் 18 வயது பூா்த்தியடைந்தவராகவும், அதிகபட்சமாக ஓசி பிரிவினருக்கு 32 வயதும், பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி 34 வயதும், எஸ்சி., எஸ்சி(ஏ), எஸ்டி 37 வயதும் இருக்க வேண்டும்.


தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் கையால் எழுதப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து ஜனவரி 12-ஆம் தேதிக்குள் வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 நெருங்கும் பொதுத்தேர்வு.. நெருக்கடியில் மாணவர்கள்.. அரசு செவி சாய்க்குமா?



முன்பு படித்த பள்ளிகளின் உறுதி சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத முடியும் என சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பிறப்பித்த உத்தரவால் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், இந்த 2022-23ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்வு எழுதுவதற்கு தாங்கள் முன்னர் படித்த பள்ளிகளிலிருந்து எந்த பிரிவில், எந்த மாெழியில் படித்தார்கள் என்பதற்கான 'உறுதிச் சான்றிதழ்' (Bonafide certificates) வாங்கி வர வேண்டும் என சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளதால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை அரசு தேர்வுகள் துறை ஆண்டுதோறும் தயாரிப்பது வழக்கம். அந்தவகையில் வரக்கூடிய மார்ச், ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள பொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம் ஆகின.


சிரமத்தில் பள்ளி மாணவர்கள்: இதனிடையே முன்னதாக, மாணவர்களின் பெயரை சேர்ப்பதற்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலும், அரசு பள்ளி அல்லது தனியார் பள்ளியா?, தமிழ்வழியா (அ) ஆங்கில வழியில் படித்தார்களா? என மாணவர்கள் உறுதிச் சான்றிதழ் எனப்படும் Bonafide certificates சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பொதுத்தேர்வு எழுதும் 11ஆம் வகுப்பு மாணவர்களும்,12ஆம் வகுப்பு மாணவர்கள் முன்பு எங்கு படித்தார்கள் என்கிற விவரங்களை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தேர்வின் இடையே மேலும் மனஉளைச்சல்: இந்நிலையில், இந்த சான்றிதழ்களை சமர்ப்பிப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது. ஒரு மாணவர் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தொடக்க நிலை வகுப்புகளை வேறு மாநிலத்திலோ (அ) வேறு நாட்டிலோ பயின்று இருக்கலாம். அவ்வாறு மாணவர்கள் படித்த பள்ளி காலப்போக்கில் மூடப்பட்டிருக்கலாம். இது போன்ற நிலைமையில், குறிப்பிட்ட மாணவர் Bonafide Certificate சமர்ப்பிப்பது சாத்தியமில்லை. மேலும், பொதுத்தேர்வு இன்னும் 2 மாதங்களில் தொடங்க உள்ள நிலையிலும், தற்போது அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள் சான்றிதழ் வாங்க அலையவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்காகவும், அரசுப் பள்ளியில் 6 முதல் 12 வரை படித்த மாணவிகளுக்கான உதவித்தொகையினை வழங்குவதற்காகவும் பொதுத்தேர்வு பெயர் பட்டியல் தயாரிக்கின்ற போதே இந்த விவரங்களை பெற சொல்லி உள்ளனர்.


மதிப்பெண் சான்றிதழ்களில் அடங்குமா?: மேலும், வேலைவாய்ப்புகள் என எடுத்துக் கொண்டால், தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழை வழங்க வேண்டியுள்ளது. இனிமேல், மதிப்பெண் சான்றிதழின் பின் பகுதியில் மாணவர்கள் படித்தப் பள்ளி, பயிற்று மொழி ஆகியவற்றினை பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டால் தேவைப்படும் போது எளிதில் பெற முடியும்' எனவும் தெரிவிக்கின்றனர்.


 வீர பெருமாள்

காலதாமதமான பணிகளால் சிரமத்தில் மாணவர்கள்: இதுகுறித்து தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நல சங்கத்தின் பொருளாளர் வீர பெருமாள் கூறும்போது, 'இந்தப் பணிகளை பொதுத்தேர்வு நெருக்கத்தில் அல்லாமல் முன்கூட்டியே முடித்திருக்க வேண்டும். பொதுத்தேர்வு நெருக்கத்தில் சான்றிதழ் வாங்கசொல்வது தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும்' எனத் தெரிவிக்கின்றார்.


மேலும், 'இந்த முறையை நிறுத்திவிட்டு, அடுத்தாண்டில் முன்கூட்டியே பெற வேண்டும்' எனத் தெரிவித்தார். தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மார்ச் மாதம் தொடங்க உள்ள பொதுத்தேர்வை 10, 11, 12ஆம் வகுப்புகளைச் சார்ந்த 27 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 சிபிஎஸ்இ இணைப்புக்கு புதுச்சேரி அரசு பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் - கல்வித்துறை சுற்றறிக்கை




புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தமிழக அரசின் பாடதிட்டத்தை பின்பற்றி வரும் நிலையில் சிபிஎஸ்இ இணைப்புக்கு அரசு பள்ளிகளை விண்ணப்பிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



புதுச்சேரி மாநிலத்திற்கென்று தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக அரசின் கல்வி பாடத் திட்டமும், மாஹே பிராந்தியத்தில் கேரளாவின் பாடதிட்டமும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர மாநில பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள், தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா தேர்வுகட்டுப்பாட்டு துறையின் மூலம் நடத்தப்பட்டு, அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. அவை புதுச்சேரி மாநில அரசு வேலைவாய்ப்பகங்களால் அங்கீகரிக்கப்படுகின்றன.


 கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒரு சில அரசுப்பள்ளிகளில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. இதையடுத்து, 6ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரைக்கும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் புதுச்சேரி அரசு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று விரைவில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் உறுதியளித்திருந்தார்.


புதுச்சேரி மாநிலத்திலும் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை 6ம் வகுப்பில் இருந்து விரிவாக்கம் செய்திட புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதனால், இந்த கல்வி ஆண்டு முதல், 6ம் வகுப்பில் இருந்து சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனுமதி கேட்டு, புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை, மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு விண்ணப்பித்துள்ளது.


 மத்திய அரசின் கல்வி வாரியத்தில், சிபிஎஸ்இ இணைப்புக்கான இணையதளம் டிசம்பர் 31 வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் புதுச்சேரி அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகள் சிபிஎஸ்இ இணைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான ஆவணங்களை டிசம்பர் 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...