2 March 2025

 பிளஸ் 2 பொது தேர்வு நாளை தொடக்கம்: 8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர்



தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின்கீழ் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகி்ன்றனர்.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2024-25 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 3) தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 


இதற்காக மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல் நாளான நாளை தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.


தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். முறைகேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


 மாவட்ட ஆட்சியர், முதன்மை, வட்டார கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 154 வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.


தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, தடையற்ற மின்சாரம், போதிய காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.


மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வு அறைக்குள் செல்போன் போன்ற மின்சாதனங்களை கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


 ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை மாணவர்கள் முறையாக பின்பற்றி நடக்க வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாவால் எழுத கூடாது.


விடைத்தாள்களில் தேர்வு எண், பெயர், சிறப்பு குறியீடுகள் ஆகியவற்றை குறிப்பிட கூடாது. மாணவரின் புகைப்படம், பதிவெண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.


பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுவது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடப்பது, விடைத்தாள் மாற்றம் செய்வது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.


 அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.


 பொதுத் தேர்வு குறித்த சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்க, பள்ளிக்கல்வி துறையின் ‘14417’ என்ற இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வு துறை தெரிவித்துள்ளது.

 ஆசிரியர் பணியே கடினமானது - ஆய்வில் தகவல்




பிற தொழில்களைவிட ஆசிரியர் பணி மிகவும் கடினமானது என்றும் மற்றவர்களை விட ஆசிரியர்களே அதிகம் உழைக்கிறார்கள் என்றும் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.


எதிர்காலத் தலைவர்களை/தலைமுறையினரை உருவாக்கும் ஒரு நாட்டின் மிகப்பெரிய பொறுப்பை ஆசிரியர்கள் கொண்டுள்ளனர். தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கைவிட ஆசிரியர்களின் பங்கு அதிகமானது. சிறு வயதில் குழந்தைகளை செதுக்கி அவர்களின் திறனுக்கேற்ப வடிவமைக்கிறார்கள். ஒரு நாட்டில் கல்வி சிறந்ததாக இருந்தால் அந்நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற பொதுவான கருத்தும் உண்டு. அத்தகைய ஆசிரியர்களின் பணி குறித்து யு.சி.எல். பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஆக்ஸ்போர்டு ரிவியூ ஆஃப் எஜுகேஷன் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


இதில் பிற தொழில்களைவிட ஆசிரியர் பணி மிகவும் கடினமானது என்று ஆய்வுகள், கணக்கெடுப்புகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 10ல் 9 பங்கு உழைப்பினை கொடுக்க வேண்டியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாக 54% என்ற அளவில் இருந்த உழைப்பு தற்போது 94% ஆக அதிகரித்துள்ளது.


ஆசிரியர்களை அடுத்து சுகாதாரப் பணியாளர்களும், சட்ட வல்லுநர்களும் அதிகம் உழைக்கின்றனர். இதில் உழைப்பு என்பது பணியிடத்தில் மட்டுமின்றி அவர்களின் பணி சார்ந்த மற்ற வேலைகளும் அடங்கும்.


யு.சி.எல் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன் பல்கலைக்கழக பேராசிரியர் பிரான்சிஸ் கிரீன் கூறுகையில், 'ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில் அவர்களின் நல்வாழ்வு குறைந்துவிட்டது. சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பில்லை. அவர்களின் செல்வாக்கு குறைந்துவிட்டது. எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்கும் ஆசிரியர்களின் பிரச்னைகளை களைய வேண்டியது நம் கடமையாகும். பிற தொழில்களோடு ஒப்பிடும்போது, ஆசிரியர்கள் மிகவும் தீவிரமாக வேலை செய்வது எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துள்ளது.


கரோனாவுக்கு பிந்தைய சூழலில் ஆசிரியர்களின் பணி சவாலானதாகவே இருக்கும். அதேநேரத்தில் இந்த ஆய்வின் முடிவுகள், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, பள்ளிகளுக்கும், கற்பித்தல் தரத்தை அதிகம் நம்பியுள்ள மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்' என்று தெரிவித்தார்.


நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் என்பது பொதுவாக பணி நேரமாக நிர்ணயிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் பள்ளிகளில் குறைவான நேரம் பணியில் இருந்தாலும் அதற்கு பின்னால் அவர்களின் கடின உழைப்பு இருக்கிறது என்று கூறுகிறது இந்த ஆய்வு.


பள்ளி ஆசிரியர்கள் எம்மாதிரியான பணிகளை எல்லாம் மேற்கொள்கிறார்கள்? அவர்களின் திறன்கள், பணியில் திருப்தி, மாணவர்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 20 முதல் 60 வயது வரையிலான 857 ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள் பெண் ஆசிரியர்கள். 


ஆசிரியர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது, மற்ற தொழில் செய்பவர்களைவிட ஆசிரியர்கள் இரு மடங்கு மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதேநேரத்தில் அவர்கள் தங்கள் திறனை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்கிறனர் என்று கூறப்பட்டுள்ளது.

 செட்’ தேர்வு: தலைமை செயலர் ஆலோசனை



கல்லூரி பேராசிரியர் தகுதித் தேர்வுக்கான (செட்) முன்னேற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலர் நா.முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.


மாநிலத் தகுதித் தேர்வான செட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், மாநிலத் தகுதித் தேர்வு வரும் மார்ச் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் 133 தேர்வு மையங்களில் 99,178 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.


இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் மற்றும் பயிற்சி தேர்வுக்கான இணையதளம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் (https://www.trb.tn.gov.in) கடந்த மாதம் 27-ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி இதுவரை 67,865 தேர்வர்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர்.


நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வு தொடர்பான சந்தேகங்களை தேர்வர்கள் கேட்டு தெளிவுபெற தொலைபேசி வாயிலான உதவி மையம் 7 பேர் கொண்ட குழு செயல்பட்டு வருகிறது. தேர்வர்கள் 1800 425 6753 என்ற இலவச உதவி எண் மற்றும் trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்புகொண்டு தங்கள் தேர்வு சம்பந்தப்பட்ட குறைகள் மற்றும் சந்தேகங்களை தெளிவு பெற்றுக் கொள்ளலாம். 


மேலும், துணை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் தேர்வு தொடர்பான நேரடி உதவிமையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.


.


இத்தேர்வை எந்தவித தடைகளும் இல்லாமல் நடத்துவதறகான ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலர் தலைமையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்ற காணொலி வாயிலாக நடைபெற்றது. தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் சிறப்பாக செய்ய தலைமைச்செயலர் நா.முருகானந்தம் அப்போது அறிவுறுத்தினார்.


கூட்டத்தில், உயர்கல்வித் துறை செயலர் சி.சமயமூர்த்தி, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ச.ஜெயந்தி, கல்லூரி கல்வி ஆணையர், எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...