எந்த அறிவிப்பும் இல்லாமல் முடிந்த சட்டப்பேரவை... தீவிர போராட்டத்திற்கு ஆயத்தமாகும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள்
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு நடந்து முடிந்த சட்டமன்ற பட்ஜெட் தொடரில் எவ்விதமான அறிவிப்பும் வெளியாகாததை அடுத்து தீவிர போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்
பகுதிநேர சிறப்பாசிரியர்கள்
தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும், இதற்காக இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஊதியம் இல்லாத மே மாதம்
கடந்த பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்து இவர்களுக்கு 7500 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது 12,500 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருகின்றனர். பகுதி நேர பணியாக இருந்த போதிலும், ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையில்தான் அவர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால் 13 ஆண்டுகள் முடிந்த பின்னும் கூட இன்றுவரை அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு மறுத்து வருவது மிகுந்த வேதனைக்குரியது. அதுமட்டுமின்றி மாநில அரசு வழங்கிய ஊதிய உயர்வை அலுவலகப் பணியாளர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு, ஆசிரியர்களுக்கு வழங்க மறுக்கும் தமிழ்நாடு அரசின் செயல் பெருங்கொடுமையாகும். மேலும் இவர்களுக்கு மட்டும் ஆண்டுகளுக்கு 11 மாதம் தான் என்பது போல ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விடுமுறை காலத்தில் அந்த குறைந்த ஊதியமும் வழங்கப்படுவது இல்லை.
தொடர் கோரிக்கை
இந்நிலையில் திமுக ஆட்சியில் பணிநிரந்தரம் செய்வதாக 2016, 2019, 2021 ஆகிய தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டதை அடுத்து பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி அறவழியில் போராடி வந்தனர். மேலும் திமுக ஆட்சியில் கடைசி முழு பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் இதில் தங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தனர். ஆனால் கவ்வி மானிய கோரிக்கைலும் கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட வில்லை.
போராட்டத்திற்கு ஆயத்தம்
இந்த சூழலில் 28-4-25 திங்கள் கிழமை அன்று முதல்வர் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு 9 அறிவிப்பை 110 விதியில் அறிவித்தார். அதில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் முதல்வர் வெளியிடவில்லை. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தொகுப்பூதியத்தை கைவிட்டு, அரசு சலுகைகள் கிடைக்க காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய இன்னும் ஒரு ரூ.300 கோடி போதும்.
இதற்கு முதல்வர் அரசு கொள்கை முடிவு எடுத்தால் போதும். தமிழக முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 181 வது வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 14 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிவதை கைவிட்டு, நிரந்தரப்படுத்த வேண்டும் என்பதே 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை எனவும் இதனை அறிவிக்கும் வரை தாங்கள் பல்வேறு கட்ட தொடர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
.jpg)
Comments
Post a Comment