12 February 2025

 பணி நிரந்தர கோரிக்கை - டாஸ்மாக் பணியாளர்கள் கோட்டை நோக்கி பேரணி, கைது!



பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்றனர்.அவர்களை தடுத்து போலீஸார் கைது செய்தனர்.


டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்கள் பணிநிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியம் வழங்கக் கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னை, எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணி செல்வதாக அறிவித்திருந்தனர். 


இதன் தொடர்ச்சியாக எழும்பூர் எல்.ஜி.சாலையில் இன்று காலை ஏராளமானோர் திரண்டனர். தொடர்ந்து, அவர்கள் பேரணி செல்ல முயன்ற நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.


முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது: ''டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பேசியபோது, கோரிக்கையை நிராகரிக்காமல் பொங்கலுக்கு பின் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றார். அதிகாரிகளுடம் பேசும்போது, அரசு தான் முடிவெடுக்கும் என்றனர். ஆனால் பேச்சுவார்த்தை நடத்தாமல் போராட வருவோரை கைது செய்கின்றனர். வீட்டிலேயே கைது செய்து வைத்திருக்கின்றனர்.


மாதம் ரூ.1 லட்சம் ஊதியம் வாங்குவோருக்கு வரி தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் இத்துறையில் ரூ.11 ஆயிரம் தாண்டி ஊதியம் வழங்கப்படுவதில்லை. அவர்களும் குடும்பம் நடத்த வேண்டுமல்லவா. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அழைத்து பேசினால் தான் என்ன. பணி நிரந்தரத்தை அரசு மறுக்கலாமா. போராட்டம் நடத்தினாலும் காவல்துறை மூலம் மிரட்டி அச்சுறுத்த முயற்சிகின்றனர். இதையெல்லாம் மீறி போராட்டக்காரர்கள் சென்னைக்கு வந்துவிட்டார்களே. அப்போது நிர்வாகம் தோற்றி விட்டது என்று தானே அர்த்தம். எப்போதும் தொழிலாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.'' இவ்வாறு அவர் பேசினார்.


ஏஐடியுசி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி பேசும்போது, "தொழிலாளர் நலனில் பாஜக அரசுக்கும் திமுக அரசுக்கும் வேற்றுமை இருக்க வேண்டும். அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். ஆனால் இப்போது போராட்டத்துக்கு வருவோரை சுங்கச்சாவடிகளில் வைத்து கூட கைது செய்கின்றனர்" என்றார்.


பேரணியில், ஏஐடியுசி மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் தனசேகரன், முத்துப்பாண்டி, மாயாண்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 அரசு ஊழியர்கள் விடிய விடிய போராட்டம்: தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் பங்கேற்பு




பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்களின் தர்ணா போராட்டம் விடிய, விடிய நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தமிழகத்தில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


 கடந்த அதிமுக ஆட்சியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான ஆணையம் 2016-ல் அமைக்கப்பட்டிருந்தது.


பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அந்த ஆணையம் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் இதுவரை பொதுவெளியில் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. இதையொட்டி அதிமுக ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் கலந்து கொண்ட திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஓராண்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றித் தருவோம் என்று கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்தது.


 இந்நிலையில் ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளாகிய நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காதது அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.


இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை தமிழக அரசு தற்போது அமைத்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நேற்று முன்தினம் காலை தொடங்கியது. இதில் அரசு ஊழியர் சங்கத்துடன் 64 துறை சங்கங்களும் இணைந்து பங்கேற்றன.


தமிழகம் முழுவதும் நேற்று காலை 10 மணி வரை நடந்த போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்ட்டோர் பங்கேற்றதாக சங்கத்தினர் தெரிவித்தனர். சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். 


இரவிலும் தொடர்ந்த போராட்டத்தில் அங்கே உறங்கிய ஊழியர்கள், காலையில் மீண்டும் எழுந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தை தொடர்ந்தனர். இவ்வாறு விடிய விடிய நடந்த போராட்டத்தை காலை 10 மணிக்கு முடித்துக் கொண்டு ஊழியர்கள் கலைந்து சென்றனர்.


கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காத பட்சத்தில் அடுத்தக்கட்டமாக வரும் 14-ம் தேதி தாலுகா அளவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். 


இதுதவிர, வரும் 25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 19-ம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 இத்தகையை போராட்டங்களுக்கு பிறகும் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாகவும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...