2 December 2014

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாற்றம் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், முக்கியத் துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக மின்சார வாரியத்தின் தலைவராக இருந்த அவர் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊழல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் கூடுதல் பொறுப்பையும் அவர் கவனிப்பார். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரிய தலைவராக சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளரக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத், அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இயக்குநராக இருந்துவந்த இறையன்பு ஐ.ஏ.எஸ்., பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலராக இருந்த என்.எஸ்.பழனியப்பன், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார். வருவாய்த்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். நகர்ப்புற திட்ட துறை ஆணையர் ஆர்.வெங்கடேசன், வருவாய்த்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலராக இருந்த நசீமுதீன், உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலர் மோகன் பியாரே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சி.மனோகரன் ஐ.ஏ.எஸ். வேளாண் தொழில் மேம்பாட்டுத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை செயலராக இருந்த நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ்., தமிழக கடல்சார் வாரியம் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறு தொழில் கூட்டமைப்பு, டான்சி தலைவராக நிர்மலா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
குரூப் 4 தேர்வு: விண்ணப்பதாரர் விவரங்கள் வெளியீடு குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் விவரங்களைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இது குறித்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வி.சோபனா திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் 21-ஆம் தேதியன்று குரூப் 4 தேர்வை நடத்துகிறது. 4 ஆயிரத்து 963 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தவுள்ளது. இந்தத் தேர்வுக்கென 13 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணைப் பதிந்து, விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தைச் சரிபார்த்துக்கொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும் அதன் விவரம் இணையதளத்தில் இல்லாவிட்டால் அந்த விண்ணப்பதாரர்கள், பணம் செலுத்தியதற்கான ரசீதின் நகலுடன் தேர்வாணையத்தின் முகவரியான contacttnpsc@gmail.com-க்கு, வரும் 5 ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரரின் பெயர், தொகுதி 4 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான விண்ணப்பப் பதிவு எண், விண்ணப்பம், தேர்வுக் கட்டணம் (ரூபாய்), கட்டணம் செலுத்திய இடம் (அஞ்சலகம், இந்தியன் வங்கி), வங்கிக் கிளை, அஞ்சலக முகவரி ஆகிய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...