28 February 2024

 'CUET - UG' தேர்வுக்கான விண்ணப்பம் தொடக்கம் - தேர்வு தேதி, பாடத்திட்டம் அறிவிப்பு!





CUET - UG நுழைவுத் தேர்வு மே 15 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்றும் ஜூன் 30-ம் தேதி தேர்வின் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


2022- 23-ம் கல்வி ஆண்டு முதல் மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்களும் க்யூட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. 


12ம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஆன்லைன் மூலம் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வுகள் முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது. 2024-ம் ஆண்டுக்கான CUET தேர்வு மே 15-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வின் முடிவுகள் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு நேற்று (பிப்.27) தொடங்கி மார்ச் 26-ம் தேதியுடன் நிறைவடைகிறது.


பாடத் திட்டம்: க்யூட் (CUET Syllabus) நுழைவுத் தேர்வுக்கு பெரும்பாலும் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டம் அடிப்படையில் புத்தகத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன. மாணவர்களின் கல்வி அறிவு, விமர்சன சிந்தனை மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் ஆகியவற்றைப் பரிசோதிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். 


CUET வினாத்தாள் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவு மொழி தேர்வாகவும், இரண்டாவது பிரிவு பாடங்களுக்கான தேர்வாகவும், மூன்றாவது பிரிவு பொது திறனுக்கான தேர்வாகவும் இருக்கும். வெளிநாடுகளில் உள்ள 26 நகரங்கள் உள்பட மொத்தம் 380 நகரங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படவுள்ளது.

 போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் வேண்டுகோள்



பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிக்கை: கடந்த ஒரு வார காலமாக தங்களின் கோரிக்கையினை நிறைவேற்ற வேண்டும் என்றுகேட்டு தொடர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றீர்கள்.


பள்ளிகளில் தற்போது தேர்வு காலமாக இருப்பதனாலும் பெற்றோர் தங்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக ஊடகங்களின் வழியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றை கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி தத்தமது பள்ளிகளுக்கு சென்று கல்விப் பணியாற்ற வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன்.


இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இக்குழு, ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது. 


அதன் பின்னர் இப்பொருள் சார்ந்து விரிவான அறிக்கை பெற்று, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஆசிரியர்களாகிய நீங்கள் தான் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர் என்பதால் பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

 பாலிடெக்னிக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் தேதி அறிவிப்பு..!




தமிழக மாணவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை பாலிடெக்னிக் கல்லூரிகள் வழங்கி வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் உள்ள 600-க்கும் அதிகமான பாலிடெக்னிக் கல்லூரிகள் இருக்கின்றன.


இந்த கல்லூரிகள் தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இயக்குனரகம் மூலம் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்.


இந்த வகையில் இக்கல்வி ஆண்டிற்கான (2023 - 2024) இரண்டாவது செமஸ்டர் தேர்வானது வருகின்ற மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கப்படும் என கல்வி இயக்குனரகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வுகள் ஏப்ரல் 19ம் தேதிக்குள் நடத்தி முடித்து அதன் பின் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்.


 இதன் பின் அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஜூன் 10ம் தேதி முதல் துவங்கப்படும் எனவும் இயக்குனரகம் வெளியிட்ட தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 6,244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்



விஏஒ, வனக் காப்பாளர் உள்ளிட்ட பணிகளில் உள்ள 6,244 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (பிப்.28) முடிவடைகிறது.



தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.


 அந்தவகையில் கிராமநிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர்,தட்டச்சர் உட்பட குரூப் 4 பதவிகளில் வரும் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரியில் வெளியிட்டது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜன.30-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.


இதற்கிடையே குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (பிப். 28) நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் /www.tnpsc.gov.in/ எனும் வலைதளம் மூலம் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மார்ச் 4 முதல் 6-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும்.


எழுத்துத் தேர்வு ஜூன் 9-ம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. தமிழ் தகுதித் தாள் 100, பொது அறிவுத் தாள் 100 என மொத்தம் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் தமிழ் தகுதித்தாள் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பாடம் சார்ந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


இதற்கிடையே, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை ஒரு வாரம் நீட்டிக்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...