1 February 2025

 தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் 15 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற ராமதாஸ் கோரிக்கை




தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குக் கூட திமுக அரசுக்கு மனம் இரங்கவில்லையா?என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'பழைய ஓய்வூதியத் திட்டம், சம வேலைக்கு சம ஊதியம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் நிலையில் அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு இன்று வரை முன்வர மறுக்கிறது. அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களை சாலையில் இறங்கி போராட அரசு தூண்டுவது கண்டிக்கத்தக்கது.


தமிழக அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் தான் எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குபவர்கள். அவர்கள் எந்தக் கவலையுமின்றி இருந்தால் தான் மாணவர்களை அறிவார்ந்தவர்களாக உருவாக்குவதில் முழுமையான கவனத்தை செலுத்த முடியும். ஆனால், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் அடிப்படை வாழ்வாதாரம் சார்ந்த கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் அவர்களை போராட்ட நிலையிலேயே தமிழக அரசு வைத்திருக்கிறது. இது யாருக்கும் நல்லது அல்ல.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பத்தாண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.


அவற்றில் ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றாத தமிழக அரசு, கடந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு திசம்பர் 21 ஆம் நாள் 243 என்ற எண் கொண்ட அரசாணையை பிறப்பித்து, அவர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளை பறித்தது. ஏற்கனவே வலியுறுத்தப்பட்டு வந்த 30 கோரிக்கைகளுடன், அரசாணை எண் 243-ஐ நீக்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையையும் சேர்த்து நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தினார்கள்.


தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளில் முக்கியத்துவம் இல்லாத சிலவற்றை மட்டும் தமிழக அரசு நிறைவேற்றிய நிலையில், தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், 15 கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட தமிழக அரசு தயாராக இல்லை.


ஒரே மாதிரியான பணி செய்யும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் ஒரே ஒரு நாள் இடைவெளியில் பணியில் சேர்ந்தார்கள் என்பதற்காக பல ஆயிரம் ஊதியத்தை குறைத்து வழங்குகிறது தமிழக அரசு. இது தொடர்பாக பல கட்டங்களாக போராட்டம் நடத்தப்பட்ட பிறகு இது குறித்து ஆசிரியர்களுடன் அரசு பேச்சு நடத்தியது .


பள்ளிக்கல்வித் துறை செயலாளர், இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் அடங்கிய குழு 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்பட்டது. அக்குழுவினர் ஆசிரியர் அமைப்புகளுடன் 10.03.2023, 14.06.2023, 01.11.2023 ஆகிய தேதிகளில் மூன்று கட்ட பேச்சு நடத்தினர். 


அதில் சிறிதும் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி, ஒராண்டுக்கும் மேலாக பேச்சு நடத்தப்படாத நிலையில் வரும் 4 ஆம் தேதி அடுத்தக்கட்ட பேச்சு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.


இந்தப் பேச்சுகள் அனைத்தும் காலம் கடத்துவதற்காகத் தான் நடத்தப்படுகிறதே தவிர, ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு சிறிதும் இல்லை. ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய முரண்பாடு இருப்பது தெளிவாகத் தெரியும் போது நான்கு கட்ட பேச்சுகள் நடத்த எந்தத் தேவையுமில்லை.


பழைய ஓய்வூதியம், ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு பெரும் தடையாக இருக்கும் அரசாணை 243-ஐ நீக்குதல், உயர்கல்வி கற்பதற்கான ஊக்கத்தொகையை மீண்டும் வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் உரிமை, அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், தகுதித் தேர்வை தேவையற்றதாக அறிவித்து, அதன் காரணமாக வழங்கப்படாமல் இருக்கும் தற்போதைய ஆசிரியர்களின் பதவி உயர்வை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் எந்த பேச்சுகளும் இல்லாமல் நிறைவேற்றப்பட வேண்டியவை தான். தமிழக அரசு நினைத்தால் தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் 15 கோரிக்கைகளையும்,15 நிமிடங்களில் நிறைவேற்றி விட முடியும். ஆனால், அதற்கான மனம் தான் தமிழக அரசுக்கு இல்லை.


வழிபடத் தகுந்தவர்கள் பட்டியலில் அன்னை, தந்தை ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர்கள் அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் இறங்கி போராடுவதையே தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாக அரசு கருத வேண்டும். 


எனவே, தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், தொடக்கக் கல்வி ஆசிரியர்களை மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்தும் சூழலுக்கு தள்ளாமல், அவர்களின் 15 அம்சக் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

 எச்சரிக்கும் அண்ணாமலை : பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை மாற்றாவிட்டால்...



பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிராமப்புறப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்த, ASER (Annual Status of Education Report - Rural) அறிக்கை வெளியாகியிருக்கிறது.


இந்த அறிக்கையின்படி, தமிழகம் பல பிரிவுகளில், நாட்டின் பிற மாநிலங்களை விட மிகவும் பின்தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.


ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக, விளம்பரம் செய்வதில் மட்டுமே நம்பர் ஒண்ணாக இருக்கும் டிராமா மாடல் திமுக அரசு, தமிழகத்தின் கல்வித் தரம் குறித்து கூறி வருவதற்கு நேர்மாறாக, இந்த அறிக்கையின் புள்ளி விவரங்கள் இருக்கின்றன.


தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களை, கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வைப்பதும், பாத்திரங்களைக் கழுவ வைப்பதும், அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் சுமை தூக்கும் தொழிலாளர்களைப் போல பயன்படுத்துவதும் எனத் தொடர்ந்து மிகவும் தரக்குறைவான முறையில் நடத்தி வரும் பள்ளிக் கல்வித் துறையின் செயலிழந்த தன்மையால், தமிழகப் பள்ளி மாணவர்கள் கற்றல் திறன் இழந்து வருவது, இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது.


ASER அறிக்கை தமிழகத்தில், 30 மாவட்டங்களில், 876 கிராமங்களில், 17,337 வீடுகளில், 28,984 குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட பள்ளிக் ஆய்வின்படி வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் குறிப்பிடத்தக்க புள்ளி விவரங்கள் பின்வருமாறு.


கடந்த 2018 ஆம் ஆண்டு, 59.9% பள்ளிகளில், மாணவர்களுக்குப் போதுமான அளவுக்கு ஆசிரியர்கள் இருந்தனர். ஆனால் தற்போது, மாணவர் ஆசிரியர் விகிதத்தில், தமிழகத்தில் வெறும் 51.8% பள்ளிகளாகக் குறைந்து, இந்தியாவிலேயே கடைசி வரிசையில் இருக்கிறது. குஜராத்தில் 78.7%, உத்திரப்பிரதேசத்தில் 64.2%, மகாராஷ்டிராவில் 76.5% என, அனைத்து மாநிலங்களுமே, தமிழகத்தை விட அதிகமான மாணவர் ஆசிரியர் விகிதத்தைப் பெற்றுள்ளன.


அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் 68.7% மட்டுமே. 2022ஆம் ஆண்டு 75.7% ஆக இருந்த சேர்க்கை 2 ஆண்டுகளில் 7 சதவீதம் குறைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.


இரண்டாம் வகுப்பு பாடத்திட்டம் - எழுத்து தமிழக மூன்றாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 13.2% மாணவர்களே, இரண்டாம் வகுப்புப் பாடத் திட்டத்தில் உள்ள எழுத்துக்களைப் படிக்கும் திறன் பெற்றிருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில், 27.9%, குஜராத்தில் 24.7%, மகாராஷ்டிராவில், 37%, பீகாரில், 20.1% என, பல வட இந்திய மாநிலங்களும், தமிழகத்தை விட முன்னணியில் இருக்கின்றன.


தமிழக ஐந்தாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 37% மாணவர்களே, இரண்டாம் வகுப்புப் பாடத் திட்டத்தில் உள்ள எழுத்துக்களைப் படிக்கும் திறன் பெற்றிருக்கின்றனர்.


குஜராத்தில் இது 44.6%, மகாராஷ்டிராவில் 57.9%, உத்திரப் பிரதேசத்தில் 50.5%, பீகாரில் 41.2% என, ஐந்தாம் வகுப்பு கல்வித் தரத்திலும், வட இந்திய மாநிலங்களை விட பின்தங்கி இருக்கிறது தமிழகம்.


தமிழக எட்டாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 62.2% மாணவர்களே, இரண்டாம் வகுப்புப் பாடத் திட்டத்தில் உள்ள எழுத்துக்களைப் படிக்கும் திறன் பெற்றிருக்கின்றனர். குஜராத்தில் இது 74.7%, மகாராஷ்டிராவில் 70.9%, உத்திரப் பிரதேசத்தில் 67.3%, பீகாரில் 71.7% ஆக இருக்கிறது.


தமிழக மூன்றாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 27.6% மாணவர்களே கணக்குப் பாடத்தில், கழித்தல் பற்றித் தெரிந்துள்ளனர். உத்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் 31.6%, பீகாரில் 28.2% ஆகவும் இந்த விகிதம் இருக்கிறது.


தமிழக ஐந்தாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 20.2% மாணவர்களுக்கு மட்டுமே, கணக்குப் பாடத்தில், வகுத்தல் தெரிந்திருக்கிறது. உத்திரப் பிரதேசத்தில் 31.8% மாணவர்களுக்கும், மாணவர்களுக்கும், 26.1% மகாராஷ்டிராவில் பீகாரில் 32.5% மாணவர்களுக்கும், வகுத்தல் கணக்கு தெரிந்திருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.


தமிழக எட்டாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 37.8% மாணவர்களுக்கு மட்டுமே, கணக்குப் பாடத்தில், வகுத்தல் தெரிந்திருக்கிறது. உத்திரப் பிரதேசத்தில் 45.6% மாணவர்களுக்கும், பீகாரில் 62% மாணவர்களுக்கும் வகுத்தல் கணக்கு தெரிந்திருக்கிறது.


பள்ளி அடிப்படை வசதிகள்


அரசுப் பள்ளிகளில், 77.7% பள்ளிகளில் மட்டுமே, பயன்படுத்தத் தகுந்த குடிநீர் வசதி உள்ளது என்றும், 81.4% பள்ளிகளில் மட்டுமே கழிப்பறை வசதிகள் உள்ளன என்றும், 77.5% பள்ளிகளில் மட்டுமே பெண் குழந்தைகளுக்குத் தனியாக கழிப்பறைகள் உள்ளன என்றும், 64.3% பள்ளிகளில் மட்டுமே, நூலக வசதியை மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும், வெறும் 58.7% பள்ளிகளில் மட்டுமே, கணினி வசதி பயன்பாட்டில் உள்ளது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.


தமிழகத்தையும், நாட்டையும் அடுத்த ஐம்பது ஆணடுகளுக்கான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவிருப்பது, இன்று பள்ளியில் பயிலும் நம் குழந்தைகளே. அவர்களுக்கான கற்றல் அடித்தளம் எத்தனை வலிமையாக அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்?


ஒரு திறமையான, தகுதியான, தொலைநோக்குப் பார்வை கொண்ட அமைச்சரை பள்ளிக் கல்வித்துறைக்கு நியமித்திருந்தால்தான் இவை எல்லாம் சாத்தியப்பட்டிருக்கும். ஆனால், முதலமைச்சரின் நண்பரின் மகன், முதலமைச்சர் மகனின் ரசிகர் மன்றத் தலைவர் என்பவை எல்லாம் தகுதிகள் என்று, பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக்கியதன் விளைவு, தமிழகப் பள்ளிக் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.


உண்மையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தனது துறையின் முக்கியத்துவம் தெரிந்துதான் செயல்படுகிறாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை சரிசெய்யவில்லை. அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை. அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் செயல்பாடுகள் இல்லை. பள்ளி மாணவர்களுக்குப் புதுமையான கல்வி முறைகளையோ, திட்டங்களையோ அறிமுகப்படுத்தவில்லை. இவை எதையுமே செய்யாமல், நாட்டிலேயே கல்வித் தரத்தில் முன்னணியில் இருக்கிறோம் என்று பொய்யாகப் பீற்றிக் கொள்ள வெட்கமாக இல்லையா?


ஆண்டாண்டு காலமாக, எதற்கெடுத்தாலும் பீகார் மாநிலத்தையும், பீகார் மக்களையும், பின்தங்கி இருப்பதாகக் குறை கூறி அரசியல் நடத்தி வந்த திமுக, இன்று இந்த அறிக்கையின்படி, பள்ளிக் கல்வித் துறையின் பல புள்ளிகளில், பீகார் மாநிலம், தமிழகத்தை விட முன்னேறியிருப்பதைக் கண்டு வெட்கித் தலைகுனிய வேண்டும்.


திமுக அரசு மற்றும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் இந்தச் செயல்படா போக்கு தொடருமேயானால், அடுத்த இருபது வருடங்களில், தமிழகம் நமது நாட்டில், கல்வியில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...