6 February 2025

 TRB மூலம் மேலும் ஒரு போட்டித் தேர்வு




அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நேரடி நியமனம் முதல்முறையாக டிஆர்பி போட்டித் தேர்வு மூலம் நடைபெற உள்ளது.


அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் இதுவரை அப்பல்கலைக்கழகம் வாயிலாகவே நியமிக்கப்பட்டு வந்தனர்.


 இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி உதவி இயக்குநர்கள், நூலகர்கள் முதல்முறையாக டிஆர்பி போட்டித்தேர்வு மூலம் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.


உதவி பேராசிரியர், நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் நேரடி நியமனத்துக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 24.11.2023 அன்று வெளியிட்டிருந்தது. அதற்கான விண்ணப்பங்களையும் ஆன்லைனில் பெற்றது. ஆனால், பணி நியமனம் தொடர்பாக அடுத்த கட்ட பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது.


இந்நிலையில், உதவி பேராசிரியர், நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் நேரடி நியமன போட்டித்தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ் அறிவித்துள்ளார்.


 இப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, இல்லை நிராகரிக்கப்பட்டதா என்பதை ஆன்லைனில் ( https://rcell.annauniv.edu/Direct Recruitment ) தெரிந்துகொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 10,12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு 14ம் தேதி முதல் ஹால்டிக்கெட்




பத்தாம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை 14ம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேற்கண்ட இணைய தளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.


 பிளஸ் 1 வகுப்பில் அரியர் வைத்துள்ளவர்கள், பிளஸ் 2 தேர்வுகள் எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வு ஹால்டிக்கெட்டுதான் வழங்கப்படும். தேர்வுக்கான அட்டவணை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மீண்டும் மாற்றமா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு



டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மீண்டும் மாற்றப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில் இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.


மீண்டும் பாடத்திட்டம் (syllabus) மாற்றப்படும் என்ற தகவலில் உண்மையில்லை எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


தமிழக அரசு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை டிஎன்பிஎஸ்சி வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் தேர்வுகளை ஆண்டு தோறும் டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வருடக்கணக்கில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளை எழுதி வருகிறார்கள்.


குரூப் 4 பாடத்திட்டம்


எப்படியாவது ஒரு அரசு வேலைக்கு போய் விட வேண்டும் என்ற கனவுடன் பட்டம் முடித்த பலரும் பயிற்சி மையங்களுக்கு சென்றும், வீட்டில் இருந்தபடியும் விடா முயற்சியுடன் படித்து கனவை நிறைவேற்றி வருகிறார்கள். தேர்வர்கள் தேர்வுக்கு தயாராக ஏதுவாக டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தையும் அறிவித்துள்ளது. குரூப் 1, 2 , 2 ஏ உள்ளிட்ட தேர்வுகளுக்கு பட்டப்படிப்பு கல்வி தகுதி என்பதால் அதற்கான பாடத்திட்டம் உள்ளது.


அதேபோல, குரூப் 4 தேர்வுக்கு பத்தாம் வகுப்புதான் குறைந்தபட்ச கல்வி தகுதியாகும். எனவே அதற்கு நிகரான பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில்தான், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்தை மாற்றி வெளியிட்டது. புதிய திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு https://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/English/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பாடத்திட்டம் வெளியிடப்பட்டு இருந்தது.


பாடத்திட்டம் மாற்றப்படுகிறதா


டிஎன்பிஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு வெளியிட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி மீண்டும் பாடத்திட்டத்தை மாற்றப்போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால், தேர்வுளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் கலக்கம் அடைந்தனர். தற்போது, இதற்கு டிஎன்பிஎஸ்சி தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.


டிஎன்பிஎஸ்சி விளக்கம்


டிஎன்பிஎஸ்சி இது தொடர்பாக கூறியிருப்பதாவது: - 2025-ல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி 1, 2, 2ஏ, குரூப் 4 பணிகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 2024 ல் தேர்வு ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும். பாடத்திட்டம் மேலும் மாற்றப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறினார்.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...