18 October 2022

 ஆசிரியர் பயிற்சி தேர்வில் 10 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி




பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சி தேர்வில் 10 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.



தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் இருந்து 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வினை முதலாம் ஆண்டில் எழுதிய 128 பேரில் 20 மாணவர்களும், 2ஆம் ஆண்டில் 196 மாணவர்களில் 22 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


இதன் மூலம் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 10 சதவீதம் மட்டுமே தேர்ச்சி என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. 


தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயார் செய்து வழங்கி வருகிறது. பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சியும் அளித்து வருகிறது. 


ஆனால் இந்த நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்த மாணவர்கள் செப்டம்பர் மாதம் நடைபெற்றத் தேர்வில் முதலாம் ஆண்டில் 20 பேரும், 2ஆம் ஆண்டில் 22 பேரும் என 10 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


மேலும் ஆசிரியர் பட்டயப் பயிற்சியை முடித்தால் வேலை வாய்ப்பு இல்லை என்பதால், அதில் சேரும் மாணவர்கள் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. 


தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கு கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்டத் தேர்வில் கலந்துக் கொண்டு தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளது. 2020ம் ஆண்டில் 2075 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 19 பேர் தேர்ச்சி பெற்றனர்.


2021ஆம் ஆண்டில் 1491 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 32 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 2022ஆம் ஆண்டில் 1036 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 65 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி 2ஆம் ஆண்டை 2020ம் ஆண்டில் 2799 பேர் எழுதியதில் 49 பேரும், 2021ஆம் ஆண்டில் 1881 பேர் எழுதியதில் 29 பேரும், 2022ஆம் ஆண்டில் 1222 பேர் எழுதி 48 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆண்டிற்கு நடத்தப்பட்ட தேர்வில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் இருந்து 196 பேர் எழுதி 22 பேரும், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 76 பேர் எழுதியதில் 7 பேரும், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 950 பேர் எழுதியதில் 19 பேரும், என 1222 மாணவர்களில் 48 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. 

 பொது பட்டியலுக்கு கல்வியை மாற்றிய வழக்கு நவ.7ம் தேதி இறுதி விசாரணை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு





ஒன்றிய அரசு கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42வது திருத்தம் கொண்டுவந்தது.



இதை எதிர்த்து ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனின் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், 1975 முதல் 1977ம் ஆண்டுகளில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, வனம், நிர்வாகம், கல்வி, நீதி நிர்வாகம் உள்ளிட்டவை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.



மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப்பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது. இதனால், கல்வி சம்பந்தமாக சட்டங்கள் இயற்றும் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில சட்டங்கள் ஒன்றிய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று, அரசியல் சட்ட பிரச்னை தொடர்பான இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.


அதன்படி, நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர், தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு தரப்பில், முழுமையான இறுதி விசாரணைக்கு முன் வழக்கு ஆவணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் இறுதி விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 திண்டிவனம் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு



திண்டிவனம் வட்டத்தில் காலியாக உள்ள 19 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் நவம்பர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திண்டிவனம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன் செய்திக்குறிப்பு:திண்டிவனம் தாலுகாவில் காலியாக உள்ள 19 கிராம உதவியாளர் பணியிடங்களில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை வருவாய் நிர்வாக ஆணையாளர் அலுவலக இணைய தள முகவரி https://www.cra.tn.gov.in மற்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக இணைய தள முகவரி https://villupuram.nic.in ஆகிய ஏதேனும் ஒன்றில் பதிவு செய்யலாம்.


விண்ணப்பங்களை பதிவு செய்ய கடைசி நாள் வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி மாலை 5:45 மணி வரை பதிவு செய்யலாம். தபால் மூலமாகவே, நேரிலோ அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.


பணி நியமனத்திற்கான காலி பணியிட விபரங்கள், இடஒதுக்கீடு விபரங்கள் உள்ளிட்டவைகளை, விழுப்புரம் மாவட்ட இணையதளத்திலும், திண்டிவனம் தாசில்தார் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் உள்ள விளம்பர பலகையிலும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 SC ST Govt Job: தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாத 10,402 எஸ்சி, எஸ்டி காலியிடங்கள்; விவரம்



தமிழக அரசுத் துறைகளில் பல ஆண்டுகளாக 10,402 எஸ்சி, எஸ்டி காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் 10 ஆண்டுக்கும் மேலாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதை முன்னிட்டு 2021- 22ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள் தேர்வு முகாம்கள் மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகியும் இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.


எந்தத் துறையில் எவ்வளவு இடங்கள்?


தமிழக அரசுத் துறைகளில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான 10,402 பின்னடைவு பணியிடங்கள் (Backlog Vacancies) நிரப்பப்படாமல் உள்ளன. இதில் எஸ்சி காலிப் பணியிடங்கள் 8,173 ஆகவும், எஸ்டி பணியிடங்கள் 2,229 ஆகவும் உள்ளன.


இதில் தமிழக அரசின் உள், மதுவிலக்கு (மற்றும்) ஆயத்தீர்வை துறையில்தான் அதிக அளவிலான பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. குறிப்பாக, 7,090 பணியிடங்கள் இந்தத் துறையில் காலியாக உள்ளன. இதில் 6,861 எஸ்சி காலிப் பணியிடங்களும் 229 எஸ்டி காலிப் பணியிடங்களும் அடக்கம்.


அதற்கு அடுத்தபடியாக பள்ளிக் கல்வித்துறையில் 695 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை 446 எஸ்சி பணியிடங்கள் மற்றும் 249 எஸ்டி பணியிடங்களை உள்ளடக்கியதாகும். இதைத் தொடர்ந்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் 478 பின்னடைவுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் எஸ்டி பணியிடங்களே அதிக அளவில் காலியாக உள்ளது. இதில் 173 எஸ்சி பணியிடங்களும் 305 எஸ்டி பணியிடங்களும் அடக்கம். இறுதியாக எரிசக்தி துறையில் 272 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 44 எஸ்சி பணியிடங்களும் 228 எஸ்டி பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.


இவற்றை நிரப்புவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் அனைத்துத் துறை செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சேர்ப்புப் பணிகளை விரைவுபடுத்த தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


 


கால தாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்!


இதற்கிடையே தேவையற்ற கால தாமதத்தைத் தவிர்க்கப்பட்டு, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான 10,402 பின்னடைவு பணியிடங்களையும் உடனடியாக சிறப்பு ஆள் தேர்வு மூலம் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறும்போது, ''தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படாதது வருத்தமளிக்கிறது!


அரசுத் துறைகளில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் 10,402 பணியிடங்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படவில்லை. தேவையற்ற இந்த கால தாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்!


பட்டியலின, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகத்தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பின்னடைவு பணியிடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்பட்டிருந்தால், 10,402 குடும்பங்கள் வறுமையில் இருந்தும், சமூக பின்னடைவில் இருந்தும் மீண்டிருக்கும். அதை செய்யத் தவறியது சமூக அநீதி!


பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான 10,402 பின்னடைவு பணியிடங்களையும் உடனடியாக சிறப்பு ஆள் தேர்வு மூலம் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி மூலம் அதற்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...