1 April 2015

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு வருகிற ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான நியமன கலந்தாய்வு வருகிற ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு அனறைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி., ஹால்டிக்கட் மற்றும் உரிய சான்றுகளுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா மன்னிப்பு கேட்டார்

தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘’ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவைகளுக்கு விரிவுரையாளர் பதவிகளுக்கு கடந்த 2009–ம்ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

மொத்தம் 195 விரிவுரையாளர் பதவிகளில், பார்வையற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று விளக்க குறிப்பேட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சமூக நலத்துறை கடந்த 1981–ம்ஆண்டு பிறப்பித்த அரசாணையின் படி, அரசு பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால், இந்த அரசாணைக்கு எதிராக மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமாகும். எனவே விரிவுரையாளர் பணிக்கான இந்த அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

‘’இந்த வழக்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘1 முதல் 5–ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டிய விரிவுரையாளர், உடலை அசைத்து முக பாவனையுடன் பாடம் நடத்த வேண்டும். மேலும், களப்பயிற்சிக்கும் மாணவர்களை அழைத்துச்செல்ல வேண்டும். இவற்றையெல்லாம் சராசரியான நபர்களால்தான் செய்ய முடியும் என்பதால், பார்வையற்றோர், காது கேளாதவர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க முடியாது’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த பதில் மனுவை கண்டு அதிர்ச்சியடைந்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் ‘பார்வையற்றோர் சராசரி மனிதரே கிடையாது என்று அரசு தரப்பு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் இப்படியோரு பதில் மனுவை தாக்கல் செய்த பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த பிரச்சனையை இப்படியே எங்களால் விட்டு விட முடியாது. இடஒதுக்கீட்டின் கீழ் பார்வையற்றோருக்கு வழங்க வேண்டிய பணியிடங்கள் எத்தனை? அதில் எத்தனை இடங்கள் இதுவரை நிரப்பப்பட்டுள்ளது? எத்தனை இடங்கள் காலியாக உள்ளது? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா நேரில் ஆஜராகி வருகிற ஏப்ரல் 1–ந்தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்’ என்று கடந்த வாரம் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா நேரில் ஆஜராகி, ‘மாற்றுத்திறனாளிகள் குறித்து பதில் மனுவில் குறிப்பிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பதில் மனு தாக்கல் செய்தார். பின்னர், அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி எழுந்து, ‘பதில் மனுவில் தவறுதலாக அந்த வரி இடம் பெற்று விட்டது. அதற்காக அவர் (சபீதா) நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார்’ என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி, ‘மிகப்பெரிய அரசு பதவியில் இருக்கும் இவர், தவறு நடந்து விட்டது என்று கூறலாமா? அவர் உயர்ந்த பதவியில் உள்ளார். அவர் இப்படி சொல்லக்கூடாது. பொதுவாக இவர் மட்டுமல்லாமல் பல உயர் அதிகாரிகள் விதிமுறைகள் என்றால் அதை பின்பற்றுவது இல்லை. விதிமுறைகளுக்கு எதிராகத்தான் செயல்படுகின்றனர்’ என்று கூறினார். பின்னர், வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.’’

அரசு கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிமாறுதல் கவுன்சிலிங் எதிர்பார்ப்பு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு,'கவுன்சிலிங்' நடத்தி பணி இட மாறுதல் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில், 15 ஆண்டுகளுக்கு முன், மேல்நிலைக் கல்வியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கொண்டுவரப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த பாடத்துக்கு வரவேற்பு அதிகரித்ததால், அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் இந்த பாடத்திட்டம் விரிவு படுத்தப்பட்டது. மற்ற பாட ஆசிரியர்களை போன்றே, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றபின், கடந்த 2008ல், காலமுறை ஊதியத்துக்கு மாற்றப்பட்டனர்.

தேர்ச்சி பெறாதோரின் நியமனம் செல்லாது என, நீதிமன்றம் அறிவுறுத்தியதால், 652 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், முன்னுரிமை பட்டியலை பெற்று, சான்றிதழ் சரிபார்த்து, இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சில நாட்களில், பணி நியமன கவுன்சிலிங் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக,

ஒரே பள்ளியில் பணிபுரிந்து வரும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், தங்களுக்கு இடமாற்ற கவுன்சிலிங் நடத்த கோரியுள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்டோரை பணியில் நியமிக்கும் முன், கவுன்சிலிங் நடத்த கோரியுள்ளனர்.

குளறுபடி பாடத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி கல்வித்துறைக்கு 'நோட்டீஸ்': கலை ஆசிரியர் சங்கம் நடவடிக்கை

'ஓவியம் தொடர்பான குளறுபடியான பாடத்திட்டத்தை ரத்துசெய்யாவிட்டால், வழக்கு தொடரப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, கலை ஆசிரியர் சங்கம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

அரசு பள்ளிகளில், 16 ஆயிரம் கலை ஆசிரியர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். இந்த இடங்களில், ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, போட்டித் தேர்வை நடத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., போட்டித் தேர்வு நடத்த உள்ளது. இதற்கான பாடத்திட்டத்தை, தமிழக கல்வியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து, அரசின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது. இதற்கு கலை ஆசிரியர்கள், ஓவியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாடத் திட்டத்துக்குரிய புத்தகங்கள், ஆன் - லைன் உட்பட எங்கும் கிடைக்கவில்லை. இப்பாடத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கலை ஆசிரியர் சங்கம் சார்பில், கல்வித் துறைக்கு சட்ட ரீதியாக, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்க தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: சிறப்பு ஆசிரியர் போட்டி தேர்வுக்கு, கொஞ்சமும் புரியாத பாடத் திட்டம், ஆங்கில மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து தலைப்புகளில், 95 மதிப்பெண்களுக்கு வினாக்கள் அமையும் என, பாடத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'கலையின் வரலாறு' தலைப்பில், வெளிநாட்டுக் கலைகளின் வரலாறு மற்றும் அதன் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கு இங்கே புத்தகங்களே கிடையாது. 'கலையும், தமிழ் இலக்கியமும்' தலைப்பில், ஓவியங்கள் மட்டுமே உள்ளன. எழுத்துத் தேர்வுக்கான தகவல்கள் கிடைக்கவில்லை. பாடத்திட்டத்தை ரத்து செய்து, வேறு பொருத்தமான பாடத்திட்டம் உருவாக்க வேண்டும். இல்லையென்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...