11 February 2022

  10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது..?தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு..? பள்ளி கல்வித்துறை தகவல்





தமிழகத்தில், கடந்த 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத் திட்டங்கள் ஓரளவு முடிக்கப்பட்டு உள்ளதால், முதல் கட்ட திருப்புதல் தேர்வுகள் அண்மையில் தொடங்கின. இந்த தேர்வுகள், முதல் முறையாக அரசு தேர்வுத் துறையின் பொதுவான வினாத்தாள் வழியே, பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் வரும் 17 ஆம் தேதில் முடிகின்றன. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் மாதம் 28 ஆம் தேதி துவங்க உள்ளது. இதுவும் பொதுத் தேர்வு போல ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.


இதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வை நடத்த, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே பொதுத் தேர்வு போல இரண்டு திருப்புதல் தேர்வுகளை நடத்துவதால், பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் முழுமையாக தயாராக வாய்ப்பு உள்ளது. எனவே, ஏப்ரல் மாத இறுதி வாரத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை நடத்த பள்ளிக் கல்வி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.


பொதுத் தேர்வை ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி துவங்கினால், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் இடைவெளியின்றி தொடர்ச்சியாக தேர்வை முடிக்க ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு நடத்துவதால், பொதுத் தேர்வு குறித்த அழுத்தம், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நீண்ட நாட்கள் நீடிக்காமல் குறைக்க முடியும் என உளவியலாளர்களின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது.


மேலும், மே 1ல் மே தினம், மே 2 அல்லது 3ல் ரம்ஜான் பண்டிகை விடுமுறை நாட்கள் என்பதால், அதற்கு முன் தேர்வை முடித்து விடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் மாற்றம் ஏற்பட்டால், ஏப்ரலில் தேர்வை துவங்கி, ரம்ஜான் விடுமுறைக்கு பின், மே முதல் வாரத்தில் தேர்வை முடிக்கும் வகையிலும், மற்றொரு அட்டவணையையும் அதிகாரிகள் தயாரித்து உள்ளனர். இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், பள்ளிக் கல்வித் துறை, தேர்வு துறை அதிகாரிகள் ஆலோசித்து, தேர்வு அட்டவணையை விரைவில் அறிவிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 TN TRB முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு.. தடுப்பூசி கட்டாயம் கட்டாயம்.. வெளியான புதிய அதிரடி அறிவிப்பு..!!!!



தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக போட்டித் தேர்வுகள் பல ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பல போட்டித் தேர்வுகளுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.



அந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய நாளை (பிப்..12) தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு ஆசிரியர் கல்வி வாரியமான TRB சார்பாக கணினி வழியில் நடைபெறும்.


இதற்காக மாநிலம் முழுவதும் 160-180 வரை தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை எழுத மொத்தம் 2.6 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்து அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா காலம் என்பதால் இந்த தேர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவ்வாறு தடுப்பூசி போடாதவர்கள் தேர்வு நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன் ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா சோதனை செய்த சான்றிதழ் எடுத்து வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு பள்ளிக்கல்வித்துறை மற்றும் டி.ஆர்.பி.க்கு தேர்வர்கள் மின்னஞ்சல் வாயிலாக கோரிக்கை அனுப்பி இருக்கின்றனர். இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட தேர்வுகளில் இது போன்ற எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 அரசுப் பணியிலிருந்து தற்போது விருப்ப ஓய்வு பெற விழைவோர் விருப்ப ஓய்வு பற்றிய கீழ்க்காணும் விதிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.


அரசுப் பணியிலிருந்து தற்போது விருப்ப ஓய்வு பெற விழைவோர் விருப்ப ஓய்வு பற்றிய கீழ்க்காணும் விதிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.


நிகர பணிக்காலம்


ஒருவர் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்துவிட்டால் விருப்ப ஓய்வு பெறலாம்தான். ஆனால், 20 ஆண்டு பணி என்பது மொத்த பணிக்காலம் அல்ல. அதாவது, அரசு ஊழியர் ஒருவர் 01.04.2002 அன்று பணியில் சேர்ந்திருப் பார் எனில், 31.03.2022-ம் தேதியுடன் 20 வருடம் நிறைவு பெறுகிறது. இது (Gross service) மொத்த பணிக்காலம்தான்.


இந்த மொத்த பணிக்காலத்தில் அந்த ஊழியர், மருத்துவச் சான்று சமர்ப்பிக்காமலே எடுத்துக்கொண்ட சம்பளமில்லாத விடுப்பு, தண்டனை என அறிவிக்கப்பட்ட பணிக்காலம், ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டபோது தகுதிக்குமேல் எடுத்துக்கொண்ட பணியேற்பு இடைக்காலம், வரண்முறை (Regulation) செய்யப்படாத பணிக்காலம், பிள்ளைப் பருவபணி (18 வயதுக்குக் கீழ் உள்ளபோது செய்த பணி) ஆகிய அனைத்தும் தகுதியற்ற பணிக்காலம் எனப்படும். மொத்த பணிக் காலத்தில், தகுதியற்ற பணிக்காலத்தை கழித்தது போக நிகர பணிக்காலம் 20 ஆண்டு இருக்க வேண்டும் என்பது விருப்ப ஓய்வுக்கு அவசியம்.


மூன்று மாத நோட்டீஸ் அவசியம்


20 வருட நிகரப்பணியை ஓர் ஊழியர் நிறைவு செய்து முடித்திருந்தாலும், ஒருவர் நினைத்த மாத்திரத்தில் விருப்ப ஓய்வு பெற்றுவிட முடியாது. இதற்கான மூன்று மாத முன்னறிவிப்பு அவசியம். அதாவது, 30.04.2022 பிற்பகல் ஓய்வு பெற விரும்பும் ஊழியரின் விருப்ப ஓய்வு விண்ணப்பம் அதை அனுமதிக்கும் அதிகாரம் பெற்ற நியமன அதிகாரிக்கு (Appointing authority) 01.02.22-க்குள் கிடைத்திருக்க வேண்டும். இதுதான் மூன்று மாத நோட்டீஸ் காலம்.


அனுமதிக்குப் பிறகுதான் அடுத்த நடவடிக்கை


வயது முதிர்வில் (அதாவது, 60 வயது பூர்த்தியான பிறகு) ஓய்வு பெறுவது Superannuation எனப்படுகிறது. இவ்வாறு யாரெல்லாம் அடுத்த ஆறு மாதங்களில் (அல்லது ஒரு வருடத்தில்) 60 வயதை அடையப்போகிறார்களோ, அதைக் கண்காணித்து ஓய்வுக்கால பணப்பலன் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கு வசதியாக ஒவ்வோர் அலுவலகத்திலும் ஒரு பதிவேடு பராமரிக்கப்படுகிறது.


இதன்படி ஊழியர் ஓய்வு பெறுவதற்கு ஆறுமாதம் முன்பே கூட ஊழியரிடமிருந்து ஓய்வுக்கால பணப்பலன் பெறுவதற் கான விண்ணப்பத்தைப் பெற்று அலுவலகத்தின் பரிந்துரை யுடன் மாநிலக் கணக்காயருக்கு அனுப்பப்பட்டுவிடும். இதன் பயனாக ஊழியர் ஓய்வு பெறும் தேதிக்கு முன்பே அவரது ஓய்வுக்கால பணப்பலன் ஆணைகள் மாநிலக் கணக்காயரிடமிருந்து வந்து காத்துக்கிடக்கும். ஓய்வு பெற்ற மறுநாளே ஓய்வுக்கால பணப்பலன்களை பெற்றுவிடலாம்.


ஆனால், விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு இந்த வசதி கிடையாது. அதாவது, அவர் விருப்ப ஓய்வு கோரும் தேதிக்கு முன்பே ஓய்வுக்கால பணப்பலன் விண்ணப்பம் மாநிலக் கணக்காயாருக்கு அனுப்பப்பட மாட்டாது. அந்த ஊழியர் விருப்ப ஓய்வு கேட்ட தேதிக்குப் பிறகே, அதற்கான ஆணை வரப் பெற்றபின் ஓய்வுக்காலப் பணப்பலன் விண்ணப்பம் மாநிலக் கணக்காயருக்கு அனுப்பப்படும். இதனால் தாமதம் தவிர்க்க முடியாததாக இருக்கும்.


இந்த விதிமுறை தெரியாத சிலர் வயது முதிர்வுத் தேதிக்கு இரண்டு, மூன்று மாதத்துக்கு முன்பே விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தாலும், இயல்பான தேதிக்குப் பிறகே பணப்பலன் கிடைக்கும். எனவே, ஓய்வுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பவர்கள், அந்த முடிவை எடுப்பதில் சற்று பொறுமை காட்டுவது நல்லது!


அரையாண்டு கணக்கீடுதான்...


ஓய்வூதியப் பலன்களான ஓய்வூதியம், பணிக்கொடை இரண்டுக்கும் பணிக்காலம் (Service period) என்பது அரை யாண்டுகளில் கணக்கிடப் படுகிறது. அதாவது, ஓர் ஊழியர் 25 ஆண்டு பணி முடித்தவர் எனில், அவரது பணிக்காலம் 50 அரையாண்டுகள் என எடுத்துக் கொள்ளப்படும்.


ஒருவர் 22 ஆண்டும் 2 மாதமும் 29 நாளும் பணி நிறைவு செய்திருந் தால், அவரது பணிக்காலம் 22 ஆண்டுகள் என எடுத்துக் கொள்ளப்படும். அதாவது, 44 அரையாண்டுகளாகக் கணக்கிடப்படும். ஆனால், 22 ஆண்டும் 3 மாதமும் பணி நிறைவு செய்திருந்தால், இவரது பணி என்பது 45 அரையாண்டு களாகக் கணக்கிடப்படும். அதாவது, 2 மாதம் 29 நாள் வரை யான பணிக்காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. மூன்று மாதம் என்பது ஓர் அரையாண்டாகக் கணக்கிடப் பட்டுவிடும். இதன்படி 8 மாதம் 29 நாள் என்பது ஓர் அரையாண்டு -ஆக கணக்கிடப்படும். 9 மாதம் என்பது இரண்டு அரையாண்டு களாகக் கணக்கில் சேரும்.


விருப்ப ஓய்வு பெறுபவர் மேற்கண்ட கணக்கீட்டைப் புரிந்துகொண்டு, விருப்ப ஓய்வு தேதியைத் தேர்வு செய்தால் லாபகரமாக இருக்கும். அதாவது, மேற்கண்ட 22 ஆண்டு 2 மாதம் 29 நாள் பணி செய்திருப்பவர் இன்னும் ஒரே ஒரு நாள் தாமதித்து தனது விருப்ப ஓய்வுத் தேதியை நிர்ணயம் செய்வதன் மூலம் ஓர் அரையாண்டுக்கான கூடுதல் பணப்பலன் பெறலாம். அதாவது, அடிப்படைச் சம்பளம் 90,000 பெறுபவர் மேற்கண்டபடி கணக்கிட்டு ஓர் அரையாண்டை தனது சர்வீஸில் சேர்ப்பார் எனில், அவரது உடனடிப் பணப்பலன் ஆச்சர்யப்பட வைக்கும்.


அதாவது, 20 வயதில் அரசுப் பணியில் சேர்ந்து தனது 43-வது வயதில் விருப்ப ஓய்வு பெறும் ஊழியர், தான் தேர்வு செய்த விருப்ப ஓய்வுத் தேதியை ஒரே ஒரு நாள் ஒத்திவைப்பதன் மூலம் தனது இயல்பான பென்ஷன் கம்யூடேசன் தொகையான 14,61,078 ரூபாய்க்குப் பதிலாக 14,88,135 ரூபாய் பெறுவார். அதாவது, ஒரே ஒரு நாள் விருப்ப ஓய்வைத் தள்ளிபோடுவதற்கான வெகுமதி 27,057 ரூபாய்.


இதே போல், தனது பணிக் கொடையாக 15,91,650 ரூபாய் பெற்றிருக்க வேண்டியவர் 16,21,125 ரூபாயைப் பெறுவார். விருப்ப ஓய்வில் செய்த ஒருநாள் தாமதம் அள்ளித்தரும் தொகை 29,475 ரூபாய். இதையெல்லாம்விட 53,055 ரூபாயை பென்ஷனாகப் பெற வேண்டிய இவர் 54,038 ரூபாயை தனது மாதாந்தர பென்ஷனாகப் பெறுவார். ஒவ்வொரு மாதமும் இவருக்குக் கூடுதலாகக் கிடைக்கும் பென்ஷன் 983 ரூபாய். கால ஓட்டத்தில் இந்த 903 ரூபாய் 5,000, 6,000 ஆகக்கூட உயரலாம்.


முழு சர்வீஸ்


இன்னும் சிலர், ‘30 வருஷம் சர்வீஸ் முடிஞ்சு போச்சு. இதுக்கு மேல் சர்வீஸ் பண்ணி எதுவும் அதிகமாகக் கிடைக்கப் போவ தில்லை’ என்று நினைக்கின்றனர். உண்மை அப்படி அல்ல. பென்ஷனுக்குத்தான் முழு சர்வீஸ் என்பது 30 வருடம் ஆகும். பணிக்கொடைக்கு முழு சர்வீஸ் என்பது 33 வருடம் ஆகும். அதாவது, 30 வருடம் பணி முடித்தால் கடைசியாக வாங்கிய அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவிகிதத்தை பென்ஷனாகப் பெறலாம். இதுதான் முழு பென்ஷன் பெறுவதற்கான கணக்கு. ஆனால், பணிக்கொடை 15 மாத சம்பளத் தொகையாக இருக்கும். 33 வருடம் பணி நிறைவு செய்தால், பணிக்கொடை என்பது 16.5 மாத சம்பளம் கிடைக்கும் என்பதை விருப்ப ஓய்வு பெற நினைப்பவர்கள் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


சம்பள கமிஷன்


தற்போதைய பணத்தேவையைத் தவிர்க்கக்கூடிய அல்லது தள்ளிப்போட முடிந்தவர்களுக்கு, பணிக்காலம் இன்னும் நிறைய மீதி இருக்குமானால், வரப்போகும் எட்டாவது சம்பள கமிஷன் வரைகூட பணியில் நீடிக்கலாம். காரணம், சம்பள கமிஷன் பரிந்துரை ஓய்வூதியம், பென்ஷன் கம்யூடேசன் போன்றவற்றை இரு மடங்காகக்கூட அதிகரித்தாலும் ஆச்சரியமில்லை. இதற்காகக் காத்திருக்க வேண்டியது இன்னும் நான்கு ஆண்டுகள் மட்டுமே.


எனவே, விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கும் முன் மேற்கண்ட காரணிகளைப் பரிசீலித்து முடிவெடுப்பது நல்லது. 45 வயதில் ஓய்வு பெற்று சுமார் 40 வருட ஓய்வுக் கால வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்!


விருப்ப ஓய்வுக்கான முழுமையான விதி!


சுமார் 30 வயது வாக்கில் அரசுப் பணியில் சேர்ந்த ஓர் ஊழியர் தற்போது 50 வயதினராக இருப்பார். உடல்நலிவு அல்லது நிதித் தேவை காரணமாக இவருக்கும்கூட விருப்ப ஓய்வு தவிர்க்க முடியாததாக இருக்கலாம். என்றாலும், தனது பணிக்காலம் 20 ஆண்டுக்கு குறைவாக இருப்பதன் காரணமாக இவர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருக்க மாட்டார். காரணம், விருப்ப ஓய்வு பற்றிய விதியில் ஒரு பகுதி மட்டுமே பரவலாகத் தெரிந்திருக்கிறது. அதன் மற்றொரு பகுதி அவ்வளவாகத் தெரியவில்லை. அதாவது, ‘20 வருடப்பணி செய்தவர் அல்லது 50 வயதானவர் விருப்ப ஓய்வு பெறலாம்’ என்பதே அந்த விதி. எனவே, இத்தகைய 50 வயதினரும் விருப்ப ஓய்வு கோரலாம்.

 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கணினிவழி தேர்வு நாளை தொடக்கம்: தொலைதூரங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார்


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு 2,207 பேரை நியமிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வை நடத்துகிறது.


கணினி வழியிலான இத்தேர்வு பிப்ரவரி 12 முதல் 15-ம் தேதி வரை முதல்கட்டமாகவும், பிப். 16 முதல் 20-ம் தேதி வரை 2-ம் கட்டமாகவும் நடத்தப்படுகிறது.


தேர்வு எழுதுவோருக்கான தேர்வு நாள், தேர்வெழுதும் மாவட்டம், தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு கடந்த 5-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், தேர்வு மையம் தொலைதூரத்தில் ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காலை 9 மணிக்குத் தொடங்கும் தேர்வுக்கு7.30 மணி முதல் 8.15-க்குள் தேர்வு வளாகத்துக்குள் வந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பெரும்பாலான தேர்வர்களுக்கு குறைந்தபட்சம் 50 கி.மீ. தொலைவுக்கு அப்பால், வேறொரு மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பதால், தேர்வு நாளன்று காலை 7.30 மணிக்கு தேர்வுமையத்தை சென்றடைவது மிகவும் சிரமம். முந்தைய தினமே சென்றால்தான் காலை 7.30 மணிக்கு பரபரப்பு இல்லாமல் தேர்வு மையத்துக்கு செல்ல முடியும்.


இதுகுறித்து கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது 'கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த எனக்கு, சேலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனது தோழி ஒருவர் கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு நாமக்கல் மாவட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, பெரும்பாலான தேர்வர்களுக்கு வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள தேர்வு மையத்தை ஒதுக்கியுள்ளனர்.


புதிய இடத்துக்கு பெண்கள் தனியாக முந்தைய நாளே சென்று தங்கி, தேர்வில் பங்கேற்க வேண்டும். சொந்த ஊரில் மையங்கள் ஒதுக்க இடம் இருக்கும் நிலையில், தேர்வர்களை அலைக்கழிப்பது சரியல்ல. எனவே, அந்தந்த மாவட்டத்துக்குள் மையங்களை ஒதுக்கி, நுழைவுச்சீட்டு வழங்க வேண்டும்'' என்றார்.


மேலும், முகக்கவசம் அணிவது, கரோனா தடுப்பூசி போட்டசான்று வைத்திருப்பது, தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது குறிப்பிட்டிருந்த அடையாள அட்டையின் அசல் எடுத்துச் செல்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தேர்வர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. மேலும், எலெக்ட்ரானிக் சாதனம் கொண்டு செல்லவும், நகைகள், ஹைஹீல்ஸ் செருப்புகள் அணியவும் அனுமதிகிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...