30 June 2022

 பள்ளி ஆசிரியர்கள் நியமன விவகாரம் | 'நவீன கொத்தடிமைத்தனத்தின் மற்றொரு வடிவம்' - வேல்முருகன்




ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும்' என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.



இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தற்போது 4,989 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடமும், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடமும், 3,188 முதுகலை ஆசிரியர்கள் பணியிடமும் காலியாக உள்ளன. மொத்தம் 13,331 காலிப் பணியிடங்கள். இந்தப் பணியிடங்களில் இடைக்கால ஆசிரியர்களை நியமிக்க முடிவெடுத்துள்ள பள்ளிக் கல்வித் துறை, அவர்களை ஜூலை 1-ம் தேதி முதல் பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது.


இது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், பள்ளிகளில் தங்களை பணியமர்த்த கோரி 3-ஆம் நாளாக சென்னை டிஜிபி வளாகத்தில் மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது.


கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை 5 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். கரோனா நெருக்கடியில் இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறாததால் இந்தத் தேர்வை எழுத ஏழு இலட்சம் பேர் வரை காத்திருப்பதாக கூறப்படுகிறது.


தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பிற்காகக் காத்திருப்பதாக தெரிகிறது. தற்போது அரசுப்பள்ளிகளில் உள்ள 13,331 காலிப் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களை நிரந்தரப் பணிக்கு நியமிக்காமல், இடைக்கால ஆசிரியர்களை நியமனம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.


அதுமட்டுமின்றி, இடைக்கால ஆசிரியர்களுக்கான தகுதி, பட்டப்படிப்பு மட்டுமே என பள்ளிக் கல்வித்துறை உத்தரவில் குறிப்பிட்டுள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுக்க அத்தகுதி போதுமென அரசு கருதுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இடைக்காலமாக நியமிக்கப்பட உள்ள 13,331 பேரில், 90 விழுக்காட்டினர் கற்பித்தலில் அனுபவம் இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.


13,331 பேருக்கும் சொற்பத் தொகையை கொடுத்து, அவர்களது சேவையை எட்டு முதல் பத்து மாதங்களுக்கு பயன்படுத்திக் கொண்டுவிட்டு அவர்களைத் திருப்பி அனுப்புவது, நவீன கொத்தடிமைத்தனத்தின் மற்றொரு வடிவமாகும்.


மேலும், தமிழக அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது என்றும் தற்காலிக ஆசிரியர் நியமன முறையில் தகுதியற்றவர்களை தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியில் அமர்த்த நேரிடும் எனவும் சென்னை உயர்நீதிமன்றமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


எனவே, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதியின் படி, அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 காலிப்பணியிடங்களுக்கு, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.


தற்காலிகமாக இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு, சென்னையில் போராடி வரும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எடுக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது'' என்று வேல்முருகன் தெரிவித்தார்.

 2,381 அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை நியமிக்கும் பணி தொடக்கம் - அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.





அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.


தஞ்சாவூா் அருகே வல்லத்தில் புதன்கிழமை பிற்பகல் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:


தமிழகத்தில் உள்ள 2,381 அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவா் சோ்க்கையைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, ஒவ்வொரு பள்ளியிலும் பழைய முறையில் இருந்தபடி எல்.கே.ஜி., யு.கே.ஜி.யில் மாணவா் சோ்க்கை தொடங்கிவிட்டது. இதற்கான சிறப்பாசிரியா்களை நியமிப்பதற்கான தோ்வு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பள்ளிகளில் இப்போது பொதுவாக முகக்கவசம் பயன்படுத்தப்படுகிறது. இதைத் தவிா்த்து வேறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்தப்படவில்லை. இப்போது இருக்கிற கட்டுப்பாடுகள் இருந்தால் போதுமானது. பள்ளிகளில் 12 வயதுக்கும் அதிகமான மாணவ, மாணவிகளில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கரோனா பரவல் காரணமாக இரு ஆண்டுகள் கழித்து புதிதாகப் பள்ளிகளைத் திறக்கும் சூழ்நிலைதான் ஏற்பட்டுள்ளது. நிகழாண்டிலிருந்துதான் முழுமையாக பள்ளிக்கூடங்களைத் தொடங்கியுள்ளோம். கடந்த ஆண்டு செப்டம்பரில் சில வகுப்புகளும், நவம்பரில் சில வகுப்புகளும் தொடங்கப்பட்டன. அனைத்து மாணவ, மாணவிகளும் வந்து சோ்வதற்குள் மீண்டும் ஜனவரி மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிகழ் கல்வியாண்டில் எப்போதும்போல வகுப்புகள் நடைபெறுவதால், பாடங்கள், தோ்வுகள் முழுமையாக நடத்தப்படும். எனவே, இனிமேல் தோ்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.


வெறும் மதிப்பெண்களை வைத்து மட்டுமே குழந்தைகளை மதிப்பிடக் கூடாது. இதற்காகவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி வருகிறோம். இதையும் மீறி 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துள்ளனா். இந்த மாதிரியான மனநிலையில் யாரும் இருக்க வேண்டாம் என்றாா் அமைச்சா்.

 அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது - ஐகோர்ட் அதிரடி.



தமிழக அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. 


தமிழகத்தில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக, தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அண்மையில் உத்தரவிட்டது. 


அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள இந்த 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் ஓராண்டுக்குள் நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 


இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000 என மிகக் குறைந்த ஊதியமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. 


அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது. 


முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது. 


தற்காலிக ஆசிரியர் நியமன முறையில் தகுதியற்றவர்களை தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியில் அமர்த்த நேரிடும்.


மனு குறித்து அரசு தரப்பில் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும். வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்றார்.


 அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்; திடீர் தடை விதித்த பள்ளிக் கல்வித்துறை




அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நியமனத்துக்கு பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது


 ஆசிரியர் நியமனத்துக்கான உரிய வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், அதுவரை பணி நியமனம் கூடாது என்று பள்ளிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பின்னணி என்ன?


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களைத் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளிக் கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.


ஜூலை 1ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கான ஊதியம் ரூ.7,500-ரூ.12,000 என்ற வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.


8 மாதங்களுக்கு மட்டும் இவர்களைத் தற்காலிகமாக நியமிக்கலாம் எனவும் போட்டி ஏற்பட்டால், டெட் தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு அடிப்படையில் பணியில் நியமிக்கவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.


தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர் பணி


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களைத் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்பட உள்ளனர் என்று அறிவிப்பு வெளியானது.


SGT எனப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 7,500 ரூபாயும், BT எனப்படும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 10,000 ரூபாயும், PG முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 12,000 ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


இந்த வகையில் மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. மாநிலம் முழுவதும் 4,989 இடைநிலை ஆசிரியர்களையும் 5,154 பட்டதாரி ஆசிரியர்களையும் 3,188 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களையும் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.


எழுந்த எதிர்ப்பலைகள்


எனினும் இதற்குக் கடுமையான எதிர்ப்பலைகள் எழுந்தன. ஆசிரியர் பணியில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை முழு நேரமாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.


இந்த நிலையில்,


அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நியமனத்துக்கு பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...