NEET UG 2023 Result: நீட் தேர்வு முடிவுகள் எப்போது?- தகவல் வெளியிட்ட என்டிஏ




2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 2ஆவது வாரத்தில் வெளியாகும் என்று தேர்வுகளை நடத்திய என்டிஏ நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பு ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. 


இதில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் மட்டுமே, மருத்துவப் படிப்புக்குத் தகுதியானவர்கள் ஆவர். நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு, கலந்தாய்வில் உரிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும். 


நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 6ஆம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் நிறைவடைந்து, ஏப்ரல் 6ஆம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு முடிவடைந்தது. இந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தேசியத் தேர்வுகள் முகமை மீண்டும் விண்ணப்ப அவகாசத்தை நீட்டித்தது. இதன்படி, நீட் தேர்வை எழுத மாணவர்கள் மீண்டும் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பித்தனர். 


இதையடுத்து நீட் தேர்வு மே 7ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5.20 மணி வரை 499 நகரங்களில் நடைபெற்றது. நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவர்களும், 13 திருநங்கைகளும் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் நீட் தேர்வை எழுதினர். தமிழகத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை உட்பட 24 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 28 மையங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தேர்வு எழுதினர்.


எனினும் மணிப்பூரில் நடைபெற்ற கலவரம் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இவர்களுக்கான தேர்வு நேற்று (ஜூன் 6) நடைபெற்றது. மணிப்பூரில் 10 மையங்களில் 8,700 தேர்வர்கள் நீட் தேர்வை எழுதினர். பிற மாநிலத் தேர்வர்களுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளும் வெளியாகின. 


நாடு முழுவதும் பெரும்பாலான நுழைவுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியான நிலையில், நீட் தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. இதனால் எப்போது முடிவுகள் வெளியாகும் என்று கேள்வி எழுந்தது. 


இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 2ஆவது வாரத்தில் வெளியாகும் என்று தேர்வுகளை நடத்திய என்டிஏ நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Comments

Popular posts from this blog