ஆசிரியர் நியமனம்: இடஒதுக்கீட்டுக்கு எதிரான அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தல் -Dinamani


ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றகருத்தரங்கில் பேசுகிறார் மத்திய அரசின் முன்னாள் செயலாளர் பி.எஸ்.கிருஷ்ணன் ,டி.நீதிராஜன், வே.வசந்திதேவி, பி.சண்முகம், பிரின்ஸ் கஜேந்திரபாபு. 

ஆசிரியர் நியமனம் தொடர்பான அரசாணை எண். 252 இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது. எனவே, அந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. 

தகுதித் தேர்வோடு இடைநிலைக் கல்வி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, பட்டயப் படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும்"வெயிட்டேஜ்' வழங்கி இந்த அரசாணை கடந்தஆண்டு வெளியிடப்பட்டது. இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையிலே ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் அதில் உத்தரவிடப்பட்டது. 

ஆனால், இந்த அரசாணை அனைத்துப் பிரிவினரையும் சமமாகக் கருதுவதாகவும்,இடஒதுக்கீட்டு முறைப்படி மதிப்பெண் சலுகைகள் எதுவும் வழங்காமல், அனைத்துப் பிரிவினரும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நியமனம் பெறும் வகையில் உள்ளதாகவும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர். 

பள்ளிக் கல்வித் துறையின் இந்த அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. 

இதில், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ். கிருஷ்ணன்:

     காலம், காலமாக தாழ்த்தப்பட்டவர்களின் குடும்பங்களிலிருந்து, படிப்பறிவில்லாத பெற்றோர்களின் குழந்தைகளாக ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவோரும், நல்ல சூழலில் சிறந்த கல்வியைப் பெற்று இந்தத் தேர்வை எழுதுவோரும் சமமாக கருதப்படுவது சமூக நீதிக்கு எதிரானது. 

எனவே, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்க வேண்டும். ஆசிரியர் நியமனம் தொடர்பான அரசாணை, இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமலேயே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும், என்றார் அவர். 


1,184 பின்னடைவுப் பணியிடங்கள்: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி: சமூக நீதியை நிலைநாட்டுவதில் முன்னோடி மாநிலமான தமிழகத்தில் இன்றைக்கு ஆசிரியர் தேர்வு தொடர்பான அரசாணை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் நியமனத்தில் இடஒதுக்கீட்டைப்பின்பற்றாததால் 1,184 பின்னடைவுப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. 

பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. ஆனால், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான ஒதுக்கீட்டில் 153 பணியிடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 151 பணியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில்659 பணியிடங்களும், அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டில்131 பணியிடங்களும், பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் 90பணியிடங்களும் நிரம்பவில்லை.

 இவை பின்னடைவு பணியிடங்களாக உள்ளன. எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் மிக அதிக அளவிலான பணியிடங்கள் நிரம்பாமல் உள்ளன. 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழகத்தை சமூக நீதியில் முன்னோடி மாநிலமாக மாற்றியவர் முதல்வர் ஜெயலலிதா. 

ஆசிரியர் தேர்வில் இந்த அநீதியைத் தொடரவிடக் கூடாது. ஆந்திரம், அசாம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கு 20 சதவீத மதிப்பெண் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்திலும் இந்தப் பிரிவினருக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் தளர்த்தப்பட வேண்டும். 

தீர்மானங்கள் விவரம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவீத தேர்ச்சி மதிப்பெண் என்பது இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது. இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. உள்ளிட்ட பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகைகள் வழங்கலாம் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது. 

அரசு வேலைக்கு மட்டுமில்லாமல், தனியார் பள்ளிகளில் வேலைக்குச் செல்லவும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது உதவும். சமூக ரீதியாக நலிந்த பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு மதிப்பெண் தளர்வு வழங்கப்படாதது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மறுக்கும் செயலாகும். 

எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்.சி.,எஸ்.டி., பி.சி. உள்ளிட்டப் பிரிவினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட வேண்டும். இதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். 

அதேபோல், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில், அவர்களது பிற படிப்புகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்வழங்கப்பட்டு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக அரசாணை எண். 252 கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால், இந்த அரசாணையில் எஸ்.சி., எஸ்.டி.,உள்ளிட்ட பிரிவினருக்கு மதிப்பெண்ணில் எந்தச் சலுகையும் வழங்கப்படவில்லை. 

அதேபோல், பிளஸ் 2 தேர்வில் 50 சதவீதத்துக்கும் கீழே மதிப்பெண் பெற்றவர்களுக்கு 0 மதிப்பெண் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் சமூக ரீதியாக பின்தங்கியவர்கள் ஆசிரியர்களாக தேர்வு பெற முடியாத சூழல் உள்ளது. அதேபோல், ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தகுதிகளை தீர்மானிக்க வேண்டும். இவற்றை நிறைவேற்ற அரசாணை எண். 252-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

Comments

Popular posts from this blog