400 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவக்கம் 

சென்னை: வரும் கல்வி ஆண்டில், 400 அரசு பள்ளிகளில், ஆங்கில வழியில் வகுப்புகள் துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கையை அதிகப்படுத்த, 32 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகளிடம், பகுதி வாரியாக தொடக்க கல்வித்துறை, சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறது. 

கடந்த, 15ம்தேதி முதல், இந்த ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன. ஒரு நாளைக்கு, இரண்டு அல்லது மூன்று மாவட்டங்கள் வீதம், வரும், 30ம் தேதி வரை, கூட்டங்கள் நடக்கும். தொடக்க கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பங்கேற்று வருகின்றனர். 

வரும் கல்வி ஆண்டில், அனைத்து அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், மாணவர்களுக்கான, அரசின் பல்வேறு இலவச நலத்திட்டங்களைசெயல்படுத்துதல், கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. 

ஆங்கிலவழி வகுப்புகளை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில், எந்தெந்த பள்ளிகளை சேர்ப்பது என்பது குறித்தும், கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மாணவர்களிடம், ஆங்கிலவழி கல்விக்கு, அதிக வரவேற்பு இருப்பதை கருத்தில்கொண்டு, முதல் கட்டமாக, கடந்த ஆண்டு, மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 308 பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகள் துவங்கப்பட்டன. இத்திட்டம், வரும் கல்வி ஆண்டில், மேலும், 400 பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்படும்.

இது குறித்த அறிவிப்பு, பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின்போது, சட்டசபையில் வெளியிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments

Popular posts from this blog