பள்ளிகளில் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நாளை முதல் வினியோகம்!




12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் நாளை முதல் அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த திங்கள் கிழமை வெளியாகின. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 91.45% , மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த ஆண்டும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.


இந்த நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் நாளை முதல் அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி தேர்வுத்துறை இயக்குனர் சா.சேது ராமவர்மா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின் மதிப்பெண் பட்டியலில் உள்ள தகவல்களை சரிபார்த்து, கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை பள்ளி மாணவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வினியோகிக்க வேண்டும். மதிப்பெண் பட்டியலில் பிழைகள் ஏதும் இருப்பின் அதன் விவரங்களை இயக்குனரகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்த மதிப்பெண் பட்டியலை கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு பின்பு வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog