லஞ்சமின்றி கலந்தாய்வு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் நாளை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசியல் தலையீடு மற்றும் லஞ்சமின்றி இடமாறுதல் கலந்தாய்வை உடனே அறிவித்து நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை சார்பில் ஆண்டு தோறும் மே அல்லது ஜூன் மாதம் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடத்தி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இக்கலந்தாய்வு தாமதமாக நடத்தப்படுகிறது. மேலும் கலந்தாய்வில் காலிப்பணியிடங்கள் மறைக்கப்படுவதால் ஆசிரியர்கள் கலந்தாய்வின் போது போராட்டங்கள் நடத்துவதும் வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில் இந்த கல்வியாண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என இன்னும் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் விருப்ப மனு பெறுவது தொடர்பான அறிவிப்புகளும் வரவில்லை. இதனால் வெளியூர்களில் நீண்ட வருடங்களாக பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் விரக்தியடைந்து மன உளைச்சலில் உள்ளனர். கலந்தாய்வு நடத்துவது குறித்த அறிவிப்பை உடனே வெளியிடக்கோரி தமிழகம் முழுவதும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நாளை (8ம் தேதி) மாலை நேர கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

இது தொடர்பாக நெல்லையில் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் முத்தானந்தம், செயலாளர் பால்ராஜ், மாநில செயலாளர் முருகேசன் உள்ளிட்டோரும் பேசினர்.

கூட்டத்தில் அரசுப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகரட்சி பள்ளிகளில் காலியாக உள்ள நடுநிலை, ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும், அரசியல் தலையீடு, லஞ்ச லாவண்யமற்ற முறையில் நேர்மையாக வெளிப்படையான கலந்தாய்வை நடத்தி அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பவேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணையை உடனே வெளியிட வேண்டும், காலிப்பணியிட விபரங்களை மாவட்ட ெதாடக்கக்கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் கலந்தாய்வுக்கு 5 நாட்களுக்கு முன்னதாக வெளிப்படையாக வெளியிட வேண்டும். கணினி வழி கலந்தாய்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Comments

Popular posts from this blog