உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்த வேண்டும்

உதவிப் பேராசிரியர் பணி நியமனத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நடத்த வேண்டும் என நெட், ஸ்லெட் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சங்கத்தின் ஆலோசகர் சுவாமிநாதன், இணைச் செயலர் தங்க முனியாண்டி ஆகியோர் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்திய உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளுக்கு எதிராகவும், வெளிப்படையாக இல்லாமலும் உள்ளது. அதேநேரம் அண்மையில் டி.என்.பி.எஸ்.சி. அரசுக் கல்லூரிகளில் நூலகர் பணியிடங்களை நிரப்பியபோது, யுஜிசி விதிமுறைகள் முழுமையாக பின்பற்றியதோடு, தேர்வில் வெளிப்படைத் தன்மையும் இருந்தது.

மேலும் டி.ஆர்.பி. அமைப்பானது பள்ளி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்ட அமைப்பாகும்.எனவே, வரும் காலங்களில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கானத் தேர்வினை டி.என்.பி.எஸ்.சி. மூலமே நடத்த வேண்டும்.

அதோடு, விண்ணப்பதாரர்கள் உரிமை பறிக்கப்படுகின்றபோது நீதிமன்றங்களை நாடும் நிலை உருவாகிறது. அவ்வாறு நீதிமன்றத்தை நாடும் நபர்கள் டிஆர்பி நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது, அந்த நபரின் பெயருக்கு எதிரே உள்ள குறிப்பில் "ஹெச்.சி.' (உயர் நீதிமன்றம்) என குறியீடு செய்கின்றனர். இவ்வாறு குறியீடு செய்யப்பட்டவர்களுக்கு நேர்முகத் தேர்வில் மதிப்பெண்ணை குறைத்து பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும் என்றனர்.

Comments

Popular posts from this blog