2,308 முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு :

சென்னையில் இன்று ஆஜராக உத்தரவு ஜவ்வாக இழுத்துக்கொண்டிருந்த, முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஒருவழியாக, நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. ஒதுக்கப்பட்ட 2,895 பணியிடங்களில், 2,308 பணியிடங்களுக்கான பட்டியல் மட்டும், வெளியாகி உள்ளது. பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை சந்தித்து, சென்னைக்கு புறப்பட்டு வர வேண்டும் என, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு, மே, 27ல், டி.ஆர்.பி., போட்டித் தேர்வை நடத்தியது. இதனை, 1.5 லட்சம் பேர் எழுதினர்.சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, இறுதி பட்டியல் தயாரான நேரத்தில், தமிழ்வழியில் படித்தவர்கள் பிரிவில், போதிய தேர்வாளர்கள் இல்லாதது, தாவரவியல் பாடத்திற்கு, இறுதி பட்டியலை வெளியிட, கோர்ட் தடை என, பல்வேறு சிக்கல்களால், இறுதி பட்டியல் வெளியாகவில்லை. 

இந்நிலையில், நாளை சென்னையில் நடக்கும் ஆசிரியர் பணி நியமனம் வழங்கும் விழாவில், முதுகலை ஆசிரியர்களுக்கும் சேர்த்து வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது. வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இறுதி தேர்வு பட்டியலை வெளியிட முடியாது என, தமிழக அரசிடம், டி.ஆர்.பி., தெரிவித்தது. எனினும், அரசு தரப்பு சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி, முடிந்தவரை, பெரும்பாலானவர்களுக்கு, இறுதி பட்டியலை வெளியிடுமாறு, டி.ஆர்.பி.,க்கு உத்தரவிடப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்திய, டி.ஆர்.பி., நேற்றிரவு, 2,308 பேருக்கு மட்டும், இறுதி பட்டியலை, இணையதளத்தில் (தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண) வெளியிட்டது. பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள், "ஹால் டிக்கெட்'டுடன், சென்னைக்கு வரும் வகையில், தயாராக புறப்பட்டு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை, இன்று சந்திக்க வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 முதுகலை ஆசிரியர் அனைவரும், இன்று மாலைக்குள் சென்னை வந்ததும், அவர்களுக்கு, பணி நியமன உத்தரவு நகல் வழங்கப்படுகிறது. முதல்வர் கையால், உத்தரவை பெற்றபின், வேறொரு நாளில் கலந்தாய்வு நடத்தி, பணி ஒதுக்கீட்டு உத்தரவை வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியலை, வழக்கு முடிந்தபின் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து, புதிதாக பணி நியமனம் பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, 20 ஆயிரத்து, 800ஆக உயர்ந்துள்ளது.

Comments

Popular posts from this blog