மதுரை : ஆசிரியர் தகுதித்தேர்வில், 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற உத்தரவு மற்றும் மறு தேர்வு அடிப்படையில், நியமன உத்தரவு வழங்க தடை கோரிய வழக்கில், அரசுக்குநோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது. 

திருநெல்வேலி சாந்திநகர் அனுசுயா தாக்கல் செய்த மனு: நான் பி.எஸ்.சி.,இயற்பியல், பி.எட்.,படித்துள்ளேன். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி,60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்; ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதரபிற்பட்டோர் , மாற்றுத்திறனாளிகளுக்கு மதிப்பெண்களில் சலுகை வழங்கலாம் என, தெரிவித்துள்ளது. 

இவை அசாம், ஆந்திரா,ஒடிசா, டில்லியில் அமலில் உள்ளன. தமிழகத்தில், பாரதியார் பல்கலை சலுகை வழங்குகிறது.சலுகை பற்றி ஆசிரியர் தேர்வாணைய அறிவிப்பில், குறிப்பிடவில்லை. 150 க்கு 90 மதிப்பெண் பெற வேண்டும் என, குறிப்பிட்டுள்ளனர்.ஜூன், 3 ல் நடந்த தகுதித் தேர்வில் 90 சதவீதம் பேர் தோல்வியடைந்தனர். மீண்டும் அக்.,14 ல்தேர்வு நடந்தது.

அதில், 60 சதவீதமான90 மதிப்பெண் கிடைக்கும் என, நம்பினேன். எனக்கு 76 மதிப்பெண் கிடைத்தது. "கீ ஆன்சர்', கேள்விகளை இணையதளத்தில் சரி பார்த்தேன். 87, 99 கேள்விகளுக்கு பதில் இல்லை. பாடத்திட்டத்திற்கு சம்பந்தமில்லாமல், 30 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. தவறான மதிப்பீட்டால், மதிப்பெண் குறைந்துள்ளது. தகுதி மதிப்பெண் 60 சதவீதம் பெற வேண்டும் என்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். 

ஆதிதிராவிடர்களுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும். மறு தேர்வு அடிப்படையில், நியமன உத்தரவு வழங்க தடை விதிக்க வேண்டும். எனது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும். ஒரு பணி இடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் தாளைமுத்தரசு ஆஜரானார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், ஆசிரியர்தேர்வு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை,3 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

Comments

Popular posts from this blog