ஆசிரியர் பணிக்கு ஆணை பெற்றவர்கள் பணியில் சேர்ந்தார்களா?

சென்னை, டிச.26:
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் எத்தனை பேர் பணியில் சேர்ந்தனர் என்ற விவரத்தை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

ஆசிரியர் தகுதித் தேர்வுகள் இரண்டு கட்டமாக நடந்தது. முதல் தாளில் 10621 பேரும், இரண்டாம் தாளில் 8722 பேரும் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு கடந்தமாதம் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது.மொத்தம் 19000 பேருக்கு கடந்த 13ம் தேதி முதல்வர் பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.
பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் இம்மாதம் 17ம் தேதியே பணியில் சேர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.
இதையடுத்து ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர்.

 இந்நிலையில் சிலர் பணியில் சேர கால அவகாசம் கேட்டுள்ளனர்.
அதில் 2 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். அதனால் ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளனர். 3 பேர் எம்.எட் தேர்வுக்கு தயாராகி வருவதால் மே மாதம் வரை கால அவகாசம் கேட்டுள்ளனர். இவர்கள் தவிர மற்றவர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர்.
பணி நியமனம் பெற்றவர்களில் பலர் வேறு பணியில் இருப்பதாக தெரிகிறது. 

அவர்கள் ஆசிரியர் பணியில் சேர்வார்களா என்ற சந்தேகம் உள்ளது.
முன் அனுமதி பெறா மல் பணியில் சேராமல் இருந்தால் 3 முறை பள்ளிக் கல்வித் துறை மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதற்கான விளக்கம் அளிக்காமல் இருந்தால் அவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாது. சான்று சரிபார்ப்பின்போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சான்று சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை.

அவர்கள் இப்போது சான்று சரிபார்ப்புக்கு வரத் தயாராக இருக்கின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் அவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.இதற்கிடையே, பணி நியமனம் பெற்று ஆசிரியர் பணியில் இதுவரை சேர்ந்துள்ளவர்கள் யார் யார் என்ற விவரத்தை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தயாரித்து அனுப்ப வேண்டும்.
மேலும், பணியில் சேராமல் உள்ளதன் காரணத்தையும் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த விவரங்கள் இன்று பள்ளிக்கல்வித்துறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல தொடக்க கல்வித்துறைக்கும் இன்று விவரங்கள் வருகின்றன.    

Comments

Popular posts from this blog