ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்த சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை: டில்லி கோர்ட் தீர்ப்பு 

புதுடில்லி: ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்த வழக்கில், அரியானா முன்னாள் முதல்வர், ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன், அஜய் சிங் சவுதாலா ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய லோக்தளம் கட்சியை சேர்ந்தவர், ஓம்பிரகாஷ் சவுதாலா, 78. இவர், 2000ல், அரியானா முதல்வராக பதவிவகித்தபோது, மாநில கல்வித் துறை சார்பில், 3,206 பணியிடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.இதில், ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததைஅடுத்து, சி.பி.ஐ., விசாரித்தது. 

லஞ்சம் பெற்று, பணி நியமனம் செய்ததாகவும், போலியான ஆவணங்களைத் தயாரித்ததாகவும்,ஓம் பிரகாஷ் சவுதாலா; அவரது மகனும், இந்திய தேசிய லோக்தளம் கட்சி எம்.எல்.ஏ.,வுமான, அஜய் சிங் சவுதாலா; அப்போதைய, ஆரம்ப கல்வித் துறை இயக்குனர், சஞ்சீவ் குமார்; சவுதாலாவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய, வித்யாதர் மற்றும் அதிகாரிகள் உட்பட, 62 பேர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள், 2008ல், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இவர்கள் மீது, லஞ்சம் வாங்கியது, மோசடி, சதித் திட்டம், போலியான ஆவணங்களைத் தயாரித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்தது. 

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், ஆறு பேர், விசாரணையின் போதே இறந்து விட்டனர். ஒருவர், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்; மீதமுள்ள, 55 பேர் மீதும், விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில், கடந்த வாரம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், சவுதாலா, முதல்வராக பதவி வகித்தபோது நியமிக்கப்பட்ட, 3,206 ஆசிரியர் பணியிடங்களும், சட்ட விரோதமாக நடந்துள்ளது. 

இந்த ஒட்டு மொத்த ஊழலுக்கும், அப்போதைய முதல்வர் சவுதாலா தான், காரணமாக இருந்துள்ளார்.அவரது உத்தரவுப்படி தான், இந்த ஊழல் நடந்துள்ளது.எனவே, இந்த வழக்கின் பிரதான குற்றவாளி, ஓம்பிரகாஷ் சவுதாலா தான். இந்த ஊழல், தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்குமே, இந்த ஊழலில் தொடர்புள்ளது என்று தெரிவித்தார். 

குற்றம் உறுதி செய்யப்பட்டவர்கள் மீதான தண்டனை விபரம் 22ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. கோர்ட் முன்பாக ரகளை: இந்நிலையில், டில்லி ரோகினி பகுதியில் உள்ள கோர்ட்டில், சவுதாலாவுக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்படுவதாக இருந்தது. இதனால் அந்த கோர்ட் முன்பாக கூடிய சவுதாலா ஆதரவாளர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும் கலைத்தனர். 

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 10 ஆண்டு சிறை: இந்நிலையில், சவுதாலா மற்றும் அவரது மகன் உட்பட குற்றம் உறுதி செய்யப்பட்டவர்கள் மீதான தண்டனை விபரத்தை நீதிபதி வாசித்தார். அதில் சவுதாலா, அவரது மகன் அஜய், சஞ்சீவ் குமார், வித்யா தர் மற்றும் ஷெர் சிங்பத்சாமி ஆகியோருக்கும் பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog