ஆசிரியர்களுக்கான பயிற்சி ரத்து:

திட்ட நிதி வீணாகும் அவலம் சேலம்: அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட இருந்த பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டதால், அதற்கான நிதி வீணாகும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் கல்வி இயக்ககமும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 

இதில் ஆசிரியர்களுக்கு பயிற்சி, கட்டமைப்பு வசதி, கல்வி முறையில் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஜனவரி கடைசி வாரத்தில் துவங்கி, ஃபிப்ரவரி மூன்றாம் வாரம் வரை, ஒன்பது, பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பாடவாரியாகவும், நடுநிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. 

அரசு பள்ளிகளில், ஒன்பது, பத்தாம் வகுப்புக்கு செய்முறை தேர்வும், பொதுத்தேர்வும் நடத்தப்பட உள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கல்வித்திறனை பாதிக்கும் என்பது குறித்து காலைக்கதிரில் செய்தி வெளியானது.இதனால் தமிழக அரசு அனைத்து பயிற்சிகளையும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. 

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், 40 கோடி ரூபாய்க்கும் அதிக அளவில் ஆசிரியர் பயிற்சிக்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை மார்ச் 31ம் தேதிக்குள் பயன்படுத்தாவிட்டால், மீண்டும் மத்தியஅரசுக்கு திரும்ப வழங்க வேண்டியிருக்கும். 

அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை, உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சியை ரத்து செய்திருக்க வேண்டியதில்லை எனவும், அதனால், அதற்கான நிதி விரயமாவதாகவும் கல்வி அலுவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

கல்வித்துறை அலுவலர் கூறியதாவது:திட்டநிதியை பொறுத்தவரை, அந்த நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மார்ச், 31ம் தேதிக்குள் செலவழிக்காவிட்டால், அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது. இதை கருத்தில் கொண்டு, ஆசிரியர்களுக்கான பயிற்சியை ஜூன் மாதம் முதல், டிசம்பர் மாதத்துக்குள் வழங்காமல், தேர்வு நேரத்தில் நடத்திட்டமிடுவதும், அதை ரத்து செய்வதும் என, அதற்கான நிதியை பயன்படுத்தவே முடியாத நிலை ஏற்படுகிறது. அடுத்த ஆண்டிலாவது முன்கூட்டியே பயிற்சியை நடத்தி, நிதி வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog