ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க வழக்கு 

மதுரை: கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க, ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சியளிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. 

தூத்துக்குடி டாக்டர் விஜயரங்கன் தாக்கல் செய்த பொது நல மனு: பள்ளிகளில்13 முதல் 14 சதவீதம் மாணவர்கள் கற்றல்குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க மனநல அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிந்துள்ளது. கற்றலில் குறைபாடு உள்ள (டிஸ்லெக்சியா) மாணவர்களால் சரளமாக, சத்தமாக பேச முடியாது. புதிய வார்த்தைகளை கற்க முடியாது. தகுந்த இடத்தில், பொருத்தமானவார்த்தைகளை பயன்படுத்த தெரியாது. 

உயர்கல்விக்குச் செல்லும் போதும், அதேநிலை நீடிக்கிறது. இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இது நரம்பு தொடர்பான குறைபாடு என்கின்றனர். இம்மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதல்நேரம் ஒதுக்க வேண்டும். அமைதியான சூழல்வேண்டும். பிறமொழிகளில் பயிற்சி அளிக்க வேண்டும். ஒலி-ஒளி காட்சி மூலம்கற்பிக்க வேண்டும். 

சென்னையில் இந்தி பாடத்தில் சரியாக கவனம் செலுத்தாத 14 வயது மாணவன், கத்தியால் குத்தியதில், ஆசிரியை இறந்தார். கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தால், இத்தகைய சம்பவங்களை தவிர்க்க முடியும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கக்கோரி பள்ளிக் கல்வித்துறை செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளருக்கு மனு அளித்தும் நடவடிக்கைஇல்லை. 

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் பெஞ்ச் முன், விசாரணைக்கு மனு வந்தது. விசாரணையை மார்ச் 20 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Comments

Popular posts from this blog