10ஆம் வகுப்பு கணிதத் தேர்வு கடினம்: மாணவர்கள் அதிர்ச்சி-dinamani

எஸ்.எஸ்.எல்.சி. கணிதப் பாடத் தேர்வில் கடின வினாக்கள் இடம் பெற்றிருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டைப் போலவே முழு மதிப்பெண் (சென்டம்) பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என்று கருதப்படுகிறது.

 தமிழகத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. முக்கியப் பாடங்களில் ஒன்றான கணிதத் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனால், தாங்கள் எதிர்பார்த்தபடி வினாத்தாள் அமையாததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 கணிதத் தேர்வில் ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்கள் யாவும் கடினமானவையாக இருந்தன. சுயமாக யோசித்து பதிலளிக்கும் விதமாக கேள்விகள் இருந்ததால் அவற்றுக்கு பதிலளிக்க நீண்ட நேரம் ஆனது. இதனால் தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுவதற்கு நேரம் போதவில்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர். 

பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்தில் வழக்கமாக கேட்கப்படும் வினாக்கள் இல்லாததால் கிராமப்புற மாணவர்கள், சராசரி மாணவர்களுக்குத் தேர்வு கடினமானதாக அமைந்துவிட்டதாக கணித ஆசிரியர்கள் கூறினர். 5 மதிப்பெண் வினாக்களில் வழக்கமாக கேட்கப்படும் கணங்கள், வர்கமூலம், வடிவியல் பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறவில்லை. மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்த டிமார்கன் விதி வினாவும் இடம்பெறவில்லை. அதற்கு மாறாக எதிர்பாராத வினாக்கள் அதிகளவில் இடம்பெற்றிருந்தன. 

10 மதிப்பெண் வினாக்கள் மட்டுமே மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்தன. மொத்தத்தில் இந்த வினாத்தாள் கிராமப்புற மாணவர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் கடினமானதாகவே இருக்கும். இதனால் தேர்ச்சி விகிதமும்குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படும் என்றனர் அவர்கள். 

தொடர்ந்து கசக்கும் கணிதம்: சமச்சீர் பாடத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கணிதத் தேர்வு, மாணவர்களுக்குஅச்சமூட்டும் ஒன்றாகவே இருந்து வருகிறது. முதலில் அறிவிக்கப்பட்ட வினாத் திட்டப்படி ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்களில் சில குறிப்பிட்ட வினாக்கள் கட்டாயமாக பதிலளிக்கக் கூடியதாக இருந்தன. 

இந்நிலையில் கடந்த ஆண்டில் கணிதப் பாடத்தில் தேர்ச்சி விகிதம், சென்டம் எண்ணிக்கை சரிந்ததை அடுத்து வினாத் திட்டம் விமர்சனத்துக்குள்ளானது. மாணவர்களின் சிந்தனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரியேட்டிவ் வினாக்கள் கூடுதலாக இடம்பெறும் வகையில் வினாத் திட்டம் மாறுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி.கணிதப் பாடத்தில் 12,532 மாணவர்கள் சென்டம் பெற்றிருந்த நிலையில், அது கடந்த 2012ஆம் ஆண்டில் 1,141ஆக குறைந்தது. நிகழாண்டில் சென்டம் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புகள் இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog