வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு! தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 82 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, மேலும், 20 லட்சம் பேர் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.பள்ளிப் படிப்பானாலும், பட்டப் படிப்பானாலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற அரசு விதி உள்ளது. அவ்வாறு பதிவு செய்திருந்தால் மட்டுமே, சீனியாரிட்டி அடிப்படையில், அரசுப் பணி, ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.பதிவு செய்த அனைவருக்குமே அரசுப் பணி கொடுக்க முடியாது என்பதால், கடந்த தி.மு.க., ஆட்சியில், 300, 200, 150 ரூபாய் என்ற வகையில், பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், மாதத்தில் ஒரு முறை, தனியார் நிறுவனங்களை அழைத்து, பதிவுதாரர்களுக்கு வேலை வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.மாநிலம் முழுவதும், தற்போதுள்ள 37 வேலைவாய்ப்பு மையங்களில், 2012-13ம் நிதியாண்டில் மட்டும், 13.9 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த மார்ச், 31ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை, 82.7 லட்சமாக உள்ளது. இம்மாத இறுதிக்குள்,மேலும்20 லட்சம் பேர், பட்டியலில் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது.மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வந்து காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு, ஆன்-லைன் ; முறையில், படித்த பள்ளிகளிலேயே, பதிவு செய்ய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு பெருமைப்படுகிறது. ஆனால், காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கண்டுகொள்வதில்லை. பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். மூன்றுஆண்டுக்கு ஒரு முறை, பதிவு புதுப்பிப்பதை, சம்பந்தப்பட்ட பதிவுதாரர்கள் தவிர்த்து வருகின்றனர்.அரசுக்கு எந்தவித வருவாயும் இல்லாமல் செயல்படும் வேலைவாய்ப்பு அலுவலகம் தேவைதானா? அதனால், மக்களுக்கு எவ்வித பயனுமில்லை; அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தான் பெருமளவில் பயனடைகின்றனர் என,கூறப்படுகிறது. மாவட்ட பதிவுதாரர்கள் கூறியதாவது: வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்தவர்களுக்கு, இன்னும் வேலை கிடைக்கவில்லை. இவற்றை மாற்ற, புதிய தொழில் நிறுவனங்களை துவங்கி, மக்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கும் முறையை, தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.தனியார் நிறுவனங்கள் தொழில் துவங்க முன்வந்தால், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையில், ஆட்களை பணிக்கு எடுத்துக் கொள்ள, அரசு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் வலியுறுத்தவேண்டும்.பதிவு மூப்பு அடிப்படையில், அரசுப் பணியில் சேர்வதற்கு வாய்ப்புஅளிக்க வேண்டும். முதல்வர் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, பதிவுதாரர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog