ஆசிரியர் தகுதித் தேர்வும்..சலசலப்புகளும் வழக்கமாக மாணவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த தேர்வுக் காய்ச்சலை ஆசிரியர்களுக்கும் விரிவாக்கியது அதிமுக அரசு முதல்முறையாக நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தகுதித் தேர்வு ஏற்படுத்திய சலசலப்புகள் என்னென்ன? கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி முதல்முறையாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தியது ஆசிரியர் தேர்வு வாரியம். மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி சட்டத்தின் கீழ்நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர். இவர்களில் வெறும் 0.39 சதவிகிதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றது மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. நேரம் அதிகரிப்பு போன்ற சில மாற்றங்களுக்கு பின்னர், மறுதேர்வு நடைபெற்று தேர்ச்சி விகிதம் 2.99ஆக அதிகரித்தது. இந்தத் தேர்வுகளில், தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தபோதிலும், தரமான ஆசிரியர்களை மாணவர்களுக்கு வழங்க இத்தகைய கடினத்தன்மை அவசியமே என்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் உறுதி காட்டி வருகிறது. தேறிய ஆசிரியர்களுக்கான பணி நியமனத்திலும், புதிய முறையை அறிமுகம் செய்தது தமிழ்நாடு அரசு. தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களோடு, பிளஸ் டூ, பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளின் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளும் 'வெயிட்டேஜ்' முறையை கொண்டு வந்தது. தகுதி தேர்வில் ஆசிரியர்களின் தேர்ச்சி விகித குறைபாடு பெருமளவில்உள்ள நிலையில் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சிகளை அரசே வழங்க முன்வந்திருக்க வேண்டும் என்ற கருத்துகளும் எழுந்தன. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேறியவர்களுக்கான பணி நியமனத்தில், இடஒதுக்கீடு வழங்காததும் சர்ச்சைக்குள்ளானது. அதிமுக அரசோ தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு 60 சதவீத மதிப்பெண் தேவை என்றும் இது அரசின் கொள்கை முடிவு என்றும் கூறி வருகிறது.தகுதித் தேர்வு மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், பணி நியமனத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டே இருப்பது அரசின் முயற்சிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே கருதப்படுகிறது.

Comments

Post a Comment

Popular posts from this blog