டி.இ.டி., தகுதி மதிப்பெண்களை குறைக்க வலியுறுத்தல்

சென்னை: "ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), குறைந்தபட்ச மதிப்பெண்களை குறைப்பது தொடர்பான கோரிக்கையை, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை அறிவிப்பார்" என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். 

சட்டசபையில், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் பேசியதாவது: ஆசிரியர் தகுதி தேர்வில், இட ஒதுக்கீட்டு முறையை, சரியாக அமல்படுத்தவில்லை. டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள்எடுக்க வேண்டும் என, இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. இதனால், 45 சதவீத மதிப்பெண்கள் எடுக்கும் ஆதி திராவிட தேர்வர்கள், 58 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கும் பிற்படுத்தப்பட்ட தேர்வர்கள், தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. பல மாநிலங்களில், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசும், தகுதி மதிப்பெண்கள் அளவைகுறைக்க வேண்டும். 

அமைச்சர் பழனியப்பன்: இந்த கோரிக்கை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அவர், உரிய முடிவை எடுத்து அறிவிப்பார். பாலபாரதி - மார்க்சிஸ்ட்: இதுவரை, இரு முறை, டி.இ.டி., தேர்வுகள் நடந்தபோதும், போதிய அளவிற்கு, ஆசிரியர் தேர்வு செய்யமுடியாத நிலை உள்ளது. இதை உணர்ந்து, இந்த பிரச்னையில், தமிழக அரசு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஜவாஹிருல்லா - மனிதநேய மக்கள் கட்சி : தகுதி மதிப்பெண்கள் அளவை குறைப்பதற்கு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது, ஆர்.டி.இ., சட்டத்திலேயே, தெளிவாக கூறப்பட்டு உள்ளது. எனவே, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைத்தால், அதிகமான தேர்வர்களை, ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய முடியும். இவ்வாறு, விவாதம் நடந்தது.

Comments

Popular posts from this blog