ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு கொள்கையைப் பின்பற்ற வேண்டும்: கருணாநிதி- Dinamani ஆசிரியர் தகுதித் தேர்வில் இந்த முறையாவது இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்றுதிமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஆசிரியர் தகுதித் தேர்வு மூன்றாம் முறையாக நடத்தப்பட உள்ளது. 7 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் தேர்வு எழுதுவர் என்று எதிர்பார்ப்பதால் 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடித்து விநியோகிக்கப் போவதாகத் தெரிகிறது. தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண்150 ஆகும். தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். அதாவது 60 சதவீதம். ஏற்கெனவே இருமுறை நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்காவது சலுகை வழங்கப்படும் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.தேர்ச்சி பெற அனைத்துப் பிரிவினருமே90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றுதான் வைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் உயர் வகுப்பினரைப் போல 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தேசிய ஆசிரியர் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமானதாகும். தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, ஆந்திரத்தில் உயர் ஜாதியினர் 60 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோர் 50 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர் 40 சதவீதமும் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று உள்ளது. அசாமில் உயர் ஜாதியினருக்கு 60 சதவீதம் என்றும், மற்றவர்களுக்கு 55சதவீதம் என்றும் உள்ளது. ஒடிசாவில் உயர் ஜாதியினருக்கு 60 சதவீதம் என்றும், மற்றவர்களுக்கு 50சதவீதம் என்றும் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவீத மதிப்பெண்கள் என அரசு நிர்ணயித்துள்ளது, பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானதும், இடஒதுக்கீட்டு கொள்கைக்கு விரோதமானதும் ஆகும். எனவே நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்விலாவது இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம் செய்ய முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments

Popular posts from this blog