சென்னை : குரூப் - 4 தேர்வுக்கு, இதுவரை இல்லாத அளவிற்கு, 16.13 லட்சம்பேர், ஆன்-லைன் வழியில் விண்ணப்பித்துள்ளனர். ஒரு இடத்திற்கு,290 பேர், முட்டி மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு தேர்வாணைய தலைவர் நவநீத கிருஷ்ணன், நேற்று மாலை, நிருபர்களிடம் கூறியதாவது:"அரசுத் துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்களை, உடனுக்குடன் நிரப்ப வேண்டும்' என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள, 5,566குரூப் - 4 பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 25ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரித் தண்டலர், வரைவாளர் மற்றும் நில அளவர் ஆகியோர், இந்த தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இன்றிரவு, 11:59 மணி (நேற்றிரவு) வரை விண்ணப்பிக்கலாம்என, அறிவித்திருந்தோம். ஜூன், 14ம் தேதி முதல், இன்று மாலை, 4:00 மணி வரை, 16.13 லட்சம் பேர், ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வாணையம், இதுவரை நடத்திய தேர்வுகளில், இதுவே, மிகப்பெரிய தேர்வாக அமைந்துள்ளது.இத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பது, தேர்வாணையத்தின் மீது, தேர்வர்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.தேர்வர்களின் நம்பிக்கை, வீண் போகாது. அதிக தேர்வர்கள் விண்ணப்பித்திருப்பது, எங்களுக்கு, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 244 மையங்களில், போட்டித்தேர்வு நடக்கிறது. 1,000த்திற்கும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்கும் மையங்களில், வீடியோ பதிவு செய்யப்படும்.பாடத்திட்டத்தை பின்பற்றி, தேர்வர்கள், நன்றாக படித்தால், கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியும். 5,566 இடங்களுக்கு, 16.13 லட்சம் பேர் போட்டி போடுவதால், இதிலிருந்து, திறமையான தேர்வர்கள் தான், வெற்றி பெற முடியும். எனவே, அரசுத் துறைகளுக்கு, நல்ல பணியாளர்கள் கிடைப்பர்.
தவறுகள் நடக்காது:
தேர்வு, நேர்மையாகவும், தவறுகளுக்கு இடமளிக்காத வகையிலும் நடக்கும். தேர்வு குறித்து, தேர்வர்கள், அச்சம் அடைய தேவையில்லை. யாரையும் அணுக தேவையில்லை. யாரையும், சிபாரிசு பிடிக்க வேண்டாம்.தேர்வர்கள், தங்களுக்கு ஏதாவது சந்தேகம் எனில், கட்டணம் இல்லாத தொலைபேசி, 1800 425 1002ல் தொடர்புகொண்டு, விவரங்களை அறியலாம். மேலும், 044 - 2533 2855, 044 - 2533 2833 ஆகிய தொலைபேசி எண்களிலும், தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, நவநீதகிருஷ்ணன் கூறினார்.
பேட்டியின்போது, தேர்வாணைய செயலர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, ஆகியோர் உடனடிருந்தனர்.
290 பேர் போட்டி:
கடந்த, 2011, பிப்ரவரியில் நடந்த வி.ஏ.ஓ., தேர்வை, 12 லட்சம் பேர் எழுதியதே, தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில், பெரிய தேர்வாக இருந்தது.தற்போது, அதையும் மிஞ்சி, 16.13 லட்சம் பேர் எழுத உள்ளனர். அதன்படி, ஒரு இடத்திற்கு, 290 பேர், முட்டிமோதும் நிலை உருவாகி உள்ளது. முறையாக, கடுமையாக படிப்பவர் மட்டுமே,தேர்வில் வெற்றி பெற முடியும்.

Comments

Popular posts from this blog