வேலைவாய்ப்புக்கு 90 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்புத் துறை இயக்குனர் தகவல்

சேலம்: "தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 90 லட்சம் பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்," என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் பிரகாஷ் கூறினார்.
சேலம் பெரியார் பல்கலை கருத்தரங்கில் பங்கேற்ற, தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
"தமிழகத்தில் வேலையை தேடுவோருக்கும், வழங்குவோருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைக்க, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த வேலைவாய்ப்புஅலுவலகம் மூலமாக, ஆண்டு ஒன்றுக்கு 30 முறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், மாதந்தோறும், குறைந்தபட்சம், 5,000 பேர் வரை தனியார் துறையில் வேலைவாய்ப்பினை பெற்று வருகின்றனர்.
வேலைவாய்ப்பின்மை காரணங்களை கண்டறியும் வகையில், பல்கலை மற்றும் உயர்கல்வி நிபுணர்களிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. அவர்கள் கூறியுள்ள கருத்துக்களின் அடிப்படையில், பல்வேறுமாற்றங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முதல் ஒரே பதிவெண்ணை கொண்டு அவ்வப்போது, தங்களது கல்வித்தகுதியை மேம்படுத்திக்கொள்ளவும், பதிவை புதுப்பித்துக்கொள்ளும் பணியும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
உரிய கால இடைவெளியில், இணையதளம் மூலம் இப்பணியை மேற்கொள்ள முடியும். குறைந்தபட்சம், ஐந்தாம் வகுப்பு கல்வித்தகுதி உடையவர்கள் கூட வேலையின்றி இருக்கக்கூடாது என்பதற்காக, 70 வகையான தொழிற்பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதே போல், கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயின்று முடித்து வெளியே வரும் போது பட்டச்சான்றுடன் கூடுதலாக, தொழிற்கல்வி சான்றிதழும் இருக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு,வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்." இவ்வாறு அவர் கூறினார்

Comments

Popular posts from this blog