விரிவுரையாளர் காலியிடம் நிரப்ப கோரிய வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில், காலியாக உள்ள, 3,000 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், உயர் கல்வித் துறைக்கும், நோட்டீஸ் அனுப்ப, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலர், சுப்புராஜ், தாக்கல் செய்த மனு: கடந்த, 2011, மே மாதம், சட்டசபையில், உயர் கல்வி அமைச்சர்,"அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3,120 காலியிடங்கள் உள்ளன; இவற்றை விரைந்து நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படும்" என, அறிவித்தார்.

ஓராண்டுக்குப் பின், காலியிடங்கள் குறித்து, உயர் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. கல்வித் துறையின் திட்டப்படி, தேர்வு நடவடிக்கைகளை துவக்குவதற்குப் பதில், ஒரு குழுவை, கல்லூரி கல்விஇயக்குனரகம் அமைத்தது.காலியிடங்களை நிரப்ப, கல்லூரி நிர்வாகத்தையும் அனுமதிக்கவில்லை.அவ்வப்போது ஓய்வு பெறுபவர்களும் அதிகரிப்பதால், காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. 

இந்த கல்வியாண்டும் துவங்கி விட்டதால், தேர்வு நடவடிக்கைகளுக்கான அறிகுறி தென்படவில்லை. ஆசிரியர் பற்றாக்குறையால், மாணவர்கள் தான் பாதிக்கப்படுவர்.காலியிடங்களை முடிவு செய்ய, கல்லூரி கல்வி இயக்குனரகம் தான், தகுதி வாய்ந்தது. காலியிடங்களை முடிவு செய்து விட்டால், முன் அனுமதியின்றி, விளம்பரங்களை வெளியிட்டு, நியமனங்களை, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மேற்கொள்ளலாம்.

சட்டப்படி, அரசு விதிகளின்படி, நியமனங்கள் முடிந்த பின், பல்கலைக் கழகம் மற்றும் இணை இயக்குனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும். எனவே, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள, காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி, உத்தரவிட வேண்டும். 

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி அரிபரந்தாமன் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசு மற்றும் உயர் கல்வித்துறைக்கு, நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டார்.

Comments

Popular posts from this blog