அமைச்சர் வைகைச் செல்வன் திடீர் நீக்கம் ஏன்?: பரபரப்பான பின்னணி தகவல்கள்

சென்னை: தமிழக அமைச்சரவையிலிருந்து வைகைச் செல்வன் திடீரென இன்று நீக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்பேரில் பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலம், தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தமிழ் கலாச்சாரத் துறை அமைச்சர் வைகைச் செல்வன், அப்பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கவனித்து வந்த இலாகாவை அமைச்சர் பழனியப்பன் கூடுதலாக கவனிப்பார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி பொறுப்பிலிருந்தும் நீக்கம் இதனிடையே அ.தி.மு.க. இளைஞர் பாசறைச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் வைகைச்செல்வன் நீக்கப்பட்டுள்ளார்.

பதவி பறிப்புக்கு காரணம் என்ன?

முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாடு சென்று திரும்பியதிலிருந்தே, தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும், சில அமைச்சர்களின் தலை உருட்டப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது.இதனால் ஜெயலலிதாவின் ஹிட் லிஸ்ட்டில் நாமும் இடம்பெற்றிருக்கிறோமோ என்ற அச்சத்திலேயே பெரும்பாலான அமைச்சர்கள் 'திக்... திக்' என நாட்களை கடத்திவந்தனர். அதிலும் மூத்த பணிவு அமைச்சர் உள்பட குறிப்பிட்ட 4 அமைச்சர்கள் மீது ஜெயலலிதா கடும் அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியானதால், எந்த நேரத்திலும் அவர்களது பதவி நாற்காலிக்கு கத்தி வீசப்படலாம் என்று அ.தி.மு.க. வட்டாரங்களில் கூறப்பட்டது.

இந்நிலையில் ஆசிரியர் தினமான இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான வைகைச்செல்வன் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவரது நீக்கத்திற்கு பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் சபீதாவுடன் ஏற்பட்ட மோதலே முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் பள்ளிக்கல்வித் துறையின் 7இயக்குனர்கள் மாற்றப்பட்டனர்.இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதாகவும், இதனையடுத்து முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தனக்குள்ள நெருக்கமான செல்வாக்கை பயன்படுத்தி வைகைச் செல்வனுக்கு எதிராக சபீதா புகார் கூறியதாகவும், இதனைத் தொடர்ந்தே இந்த பதவி பறிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும் கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் வைகைச் செல்வனின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்தும் ஆட்சி மேலிடத்திற்கு பல்வேறு புகார்கள் பறந்ததாகவும், பதவி பறிப்புக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கட்சி பொறுப்பும் பறிக்கப்பட்டதற்கு, அ.தி.மு.க.வின் மூத்த புள்ளிகளை அவர் மதிப்பதில்லை என்று கூறப்பட்ட புகார் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

10 ஆவது அமைச்சரவை மாற்றம்
வைகைச் செல்வன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதன் மூலம் தமிழக அமைச்சரவைஇத்துடன் சேர்த்து 10 ஆவது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog