தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி மறு தேர்வு நடத்த அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு - Dinakaran

மதுரை: மதுரை கே.புதூரை சேர்ந்த விஜயலெட்சுமி, தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வில், பி பிரிவு கேள்வித்தாளில் பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவிடக்கோரி, மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மறு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி நாகமுத்து முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெயகுமரன் ஆஜராகினர். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்கள் தங்கமாரி, அறிவொளி ஆஜராகினர்.

அவர்களிடம், தேர்வுக்கு முதல் நாள் கேள்வித்தாள் வெளியானால், தேர்வு அன்று வழங்குவதற்கு மாற்று கேள்வித்தாள் தயாராக வைத்து இருப்பீர்கள். அதேப்போல் இந்த கேள்வித்தாளுக்கு மாற்று கேள்வித்தாள் வைத்துள்ளீர் களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், மாற்று கேள்வித்தாள் உள்ளது என இருவரும் பதிலளித்தனர்.

பின்னர், பொதுவாக ஒரு கேள்வித்தாள் அச்சடிக்க எவ்வளவு நாள் ஆகும். தேர்வு தாளை திருத்துவதற்கு எவ்வளவு நாளாகும் என நீதிபதி கேட்டார். அதற்கு கேள்வித்தாள் அச்சடிக்க நான்கு வாரமும், திருத்துவதற்கு 3 வாரமும் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்படியெனில், ஏற்கனவே கூறியபடி 150 கேள்விகளில் 40 கேள்விகளை நீக்கி, 110 மதிப்பெண்ணை முழு மதிப்பெண்ணாக கருத, கம்ப்யூட்டரில் மாற்றம் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் புதிய கேள்வித்தாளை தயாரித்து விட முடியும்.மாணவர்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என கோர்ட் நினைக்கிறது.

ஏற்கனவே, ஹால்டிக்கெட் வழங்கியிருப்பீர்கள், கிடைக்காதவர்களுக்கு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும். கேள்வித்தாள் மட்டுமே தயாரிக்க வேண்டும். இது தொடர்பாக அரசிடம் மீண்டும் கேட்டு, மாற்றுத்தேர்வு நடத்தலாமா என்பது குறித்து கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என நீதிபதி கூறினார். அடுத்த விசாரணை நடத்துவது தொடர்பாக செப். 30க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Comments

Popular posts from this blog