டிஇடி தேர்வு: உருளையும், கோளமும் ஒன்றா? முழு மதிப்பெண்வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு. 

பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் (தாள்2), தவறாக இடம்பெற்றிருந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்த விஜயலெட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, அக் கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் 2012 ஜூலை 12 இல் நடத்தியஆசிரியர் தகுதித் தேர்வில், தாள் 2 தேர்வை எழுதிய விஜயலெட்சுமி 89 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இத் தேர்வில் அவர் எழுதிய பி வரிசை கேள்வித் தாளில், 115 ஆவது கேள்வி தவறாக இடம்பெற்றிருப்பதால், அதற்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். 

 இம் மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து அளித்த தீர்ப்பு: இந்த கேள்வித் தாளில் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ள 115 ஆவது கேள்வியில் உள்ளீடற்ற கோளம் (ஹாலோ ஸ்பியர்) என்றும்,அதே கேள்வி தமிழில் உள்ளீடற்ற உருளை (ஹாலோ சிலிண்டர்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோளம் - உருளை இரண்டும் வெவ்வேறானது.ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ள கேள்வியைப் பொருத்தவரை, அதற்குப் பதில் தேர்வு செய்வதில் எவ்விதப் பிரச்னையும் கிடையாது. ஆனால், தமிழில் இடம்பெற்ற கேள்வியில், உள்ளீடற்றஉருளையின் பரப்பு கேட்கப்பட்டிருக்கிறது. உருளையின் உயர அளவு கொடுக்காத நிலையில், பரப்பளவைக் கணக்கிட முடியாது. 

ஆகவே, மனுதாரரின் வாதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவர், மேற்படி கேள்விக்கு விடை அளித்திருக்கும் நிலையில், அவருக்கு ஒரு மதிப்பெண் வழங்கி, அவர் பெற்றுள்ள மதிப்பெண் 90 எனக் கணக்கிடப்பட வேண்டும்.அதேநேரம், ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழைப் பெற தகுதியானவரா என்பதை கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கலாம் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog